அவமானம்

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லியருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம்.

கவியரசு அவர்களின் மெய்சிலிர்க்கும் பாடல் வரிகளில் ஒரு சில…
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!!”

“போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்”

இன்றைய பெண்

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட் ச் செலவும் , நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கனம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!

ஐ..டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான்

கேள்வி : ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான். என்னைப் போன்றோருக்கு தாங்கள் தரும் அறிவுரை?

பதில் :

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்… வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்… இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது… சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

‘இன்று போலவே என்றும் சம்பளம் வரும்’ என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள்.

அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள். வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு… உறவினர்களை- அம்மா- அப்பாவை, ”என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்… ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!” என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள்.

பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி… அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்… அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

-நன்றி :

விகடன்(இந்த நல்ல விசயத்தை வெளியிட்டதற்கு)

http://priyatamil.wordpress.com/category/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/