சமம் இல்லாத கல்வி சமச்சீர்க் கல்வி ஆகுமா?

சமச்சீர் கல்வி பற்றிய சர்ச்சைகள் தமிழகத்தில் தூள் பறக்கிறது! 'அது தேவையா, இல்லையா... நடைமுறைப்படுத்தப்படுமா, படாதா... புத்தகங்கள் அச்ச​டிக்கச் செலவான 200 கோடிக்கு யார் பொறுப்பு...அந்தப் பாடத் திட்டம் உண்மை​யாகவே சமச்சீர் கல்விக்கு உத்தரவாதமானதா... சென்ற அரசின் திட்டங்களில் ஒன்றான இதை, இந்த அரசைத் தொடரச் சொல்லி வற்புறுத்துவது நியாயமா?'' - இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!


ஆனால், இந்த மேலோட்டமான விவாதங்களில் எல்லாம் உண்மையான சமச்சீர் கல்வி அமிழ்ந்து, ஆழப் போய்விட்டதே நிஜம்! எது சமச்சீர் கல்வி? அது எந்த வகையில் தேவை?


முதலில், பள்ளிகள். அடிப்படை வசதிகள் இல்லாத, எட்டாம் வகுப்பிலும் எழுத்துக் கூட்டிப் படிக்கிற நிலையில் மாணவர்களை வைத்திருக்கிற, சரியான கழிப்பறைகளோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத, அதன் அவசியத்தைக்கூட உணராத, 'வேறு கதியற்ற கடைக்கோடி மக்களின் கனவுகளுக்கு ஒரே புகலிடம்’ என்ற அளவில் மட்டுமே உயிர்த்திருக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு புறம்...
எவ்வித விதிகளுக்கும் உட்படாமல் அலட்சியப்​படுத்தி, முறையான கட்டடங்களோ, தகுதியான ஆசிரியர்களோ இல்லாத, அப்படி இருந்தாலும் அவர்களை ஈவிரக்கம் இல்லாமல் சுரண்டுகிற, புற்றீசல்போல் பெருகும் ஆங்கிலப் பள்ளிகள் மறு புறம்!
பள்ளி வளாகத்தில் தாய்மொழியில் பேசினாலே அபராதம் விதிக்கிற, 10, 12-ம் வகுப்புப் பாடங்களை 8-ம் வகுப்பில் இருந்தே சொல்லித்தருகிற அதீதப் பொறுப்பு உணர்வு மிகுந்த, அதற்கு விலையாகப் பெற்றோர்களின் ரத்தத்தையே உறிஞ்சுகிற ஆங்கில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்னொரு புறம்!


இதுதான் இன்றைய தமிழகம்!
கல்வி பற்றிய ஏராளமான கனவுகளோடு நம்​முடைய குழந்தைகள் வளர்கிறார்கள். அந்தக் கனவுகள்தான் நாளை நம் தேசத்தை வழிநடத்தப்​போகிறது. அவர்களுக்குப் பள்ளிகளின் இன்றைய நிலை பெரும் ஏமாற்றமே. உண்மை இப்படி இருக்க, 'பாடத் திட்டத்தை மாற்றுவதால் மட்டுமே சமச்சீரான கல்வியைக் கொண்டுவந்துவிட முடியுமா?’ என்பதுதான் இன்று தலைதூக்கும் அடிப்​படையான கேள்வி.
தரமான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய, அறிவியல்பூர்வமான, நமது தாய்மொழி - பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்ட, அனை​வருக்கும் சம வாய்ப்பு வழங்குகிற ஒரு கல்விக் கொள்கைதான் இன்றைய முதல் தேவை. அதுதான் முழுமையான சமச்சீர்க் கல்வியாக இருக்க முடியும். அப்படிப்பட்ட கல்வியைக் கொண்டுவந்தார்களா என்றால் இல்லை!
கல்வி, சமூக முன்னேற்றத்தின் முக்கியஅங்கம். தலித்துகள், பெண்கள், மலை சாதியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினரின் முன்னேற்​றமும், தரமான கல்வியின் மூலம்தான் சாத்தியம். அதை இலவசமாகப் பெறுவது, அனைவரது உரிமை. அதைத் தருவதுதான் அரசின் கடமை!
பெருந்தலைவர் காமராஜர் இதை நன்கு உணர்ந்து, தொலைநோக்குப் பார்வையோடு இலவசக் கல்விக்கு அடிப்படையான ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். கல்விக்கு வறுமையும் பசியும்கூட தடைஎன்பதை உணர்ந்து, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு​வந்தார்.
அன்றும் தனியார் பள்ளிகள் இருந்தன. ஆனால், கல்வியை வியாபாரமாக மாற அனுமதிக்கவில்லை. பணப் புழக்கம் அதிகம் இல்லாத அன்றைய சூழலில், தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது. அன்றைய தனியார் பள்ளிகளும் சமூகத்துக்கான அறப் பணியாகவே திகழ்ந்தன.
துரதிர்ஷ்டவசமாக, அடுத்தடுத்து வந்த அரசுகள் கல்வி வியாபாரமாக மாறியதைத் தடுக்கத் தவறி​விட்டன, நியாயமான கட்டுப்பாடுகளையும் விதிக்க​வில்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் கவனம் செலுத்தாமல், அதன் தரம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததையும் தடுக்கவில்லை. அதனால்தான் இன்று, எப்பாடு பட்டாவது தன் குழந்தைகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற பெற்றோர், இரக்கமற்ற தனியார் பள்ளிகளிடம் சிக்கிக் கண்ணீர் சிந்துகின்றனர்!
அதற்கும் வழி இல்லாத பெற்றோர்கள்தான் அரசுப் பள்ளியை அண்டுகிறார்கள். இப்படி, வசதியானவர்கள் மட்டுமே தரமான கல்வியையும், நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும் என்பது அநீதியானது, ஆபத்தானது!
இந்த நிலையை மாற்ற, உடனடி முயற்சி எடுத்தே ஆக வேண்டும். இப்போதைக்கு பாடத் திட்டத்தையாவது மாற்றுவோம் என்கிற சமாதானம், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது ஆகும். மற்ற சீரழிவுகளை எப்போது மாற்றுவது? முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்​டுள்ள மற்ற சீர்திருத்தங்களையும் உடனடியாகப் பரிசீலித்து அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளிக் கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராகச் சொல்லப்படுகிற எந்த சமாதானமும் ஏற்கக்கூடியது அல்ல.
கல்வி, தனி மனித வாழ்விலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியமான ஒரு காரணி. அதில் அரசியல் மாச்சரியங்களுக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசும் அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்ந்து, ஒரு புதிய கல்விக் கொள்கையை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உருவாக்குவதும், செயல்​படுத்துவதும் இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியம். இதில் மேலும் ஏற்படுகிற தாமதம், மக்களுக்குக் கஷ்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.
நல்லோர் எல்லோர் கவனத்துக்கும்!


Source : Vikatan.com