ஒரு நேர்மையான் நீதிபதியின் கதை!

''லட்சுமண ரேகை என்பது அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல. லட்சுமண ரேகையை சீதை கடந்திருக்கா விட்டால், ராவண வதம் நடந்து இருக்காது!''

- கடந்த ஆண்டு அடுத்தடுத்து உச்ச நீதிமன்றத்தில் விமர்சனங்களைச் சந்தித்த மன்மோகன் சிங் அரசு, ''உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையைத் தாண்டக் கூடாது!'' என்று சொன்னபோது, அதற்கு அசோக் குமார் கங்குலி கொடுத்த பதிலடி இது!
உச்ச நீதிமன்ற நீதிபதி பணியில் இருந்து ஓய்வுபெற்ற அன்று கிட்டத்தட்ட 'அலைக்கற்றை ராவண வத’த்தை முடித்துவிட்டுதான் சென்று இருக்கிறார் கங்குலி. ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்துசெய்து உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய ஊழலைத் துவம்சமாக்கியிருக்கிறார் கங்குலி.


''இந்த ஒதுக்கீடு, முழுக்க முழுக்க அரசியல் சட்டத்துக்கும் பொது நலனுக்கும் விரோதமானது. தேசத்தின் அரிய வளங்கள் பொதுமக்கள் நலனுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, சில பெருநிறுவனங்களுக்கு அல்ல'' என்று நீதிபதி ஜி.எஸ்.சிங்வியுடன் இணைந்து கங்குலி அளித்து உள்ள தீர்ப்பு, ''அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை. இந்த ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா இழப்பு இல்லை!'' என்று கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பேசிவந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டம்போடும் பெருநிறுவனங்களுக்கும் முகத்தில் விழுந்து இருக்கும் அறை
உச்ச நீதிமன்றத்துக்கு 2010, அக்டோபரில் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முதல் வழக்கு வந்தபோது, அது நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்பதோ, ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தும் என்பதோ பலருக்கும் தெரியாதது. ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து இருந்த நிலையில், இந்த வழக்கு எவராலுமே பொருட்படுத்தப்படவில்லை. கங்குலியும் சிங்வியும் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு, மத்திய அரசுக்கும் ராசாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட பின்தான் இந்த ஊழலின் வீரியம் உறைத்தது. ஒருகட்டத்தில், எதற்குமே அசைந்து கொடுக்கா மல் விசாரணை அமைப்புகளை முடக்கிப் போட்டு இருந்த மன்மோகன் அரசைப் பார்த்து, ''அரசு இயங்குகிறதா, அந்த அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கிறாரே... அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று விளாசித் தள்ளினார் கங்குலி. ராசா பதவி விலக நேர்ந்ததும் சிறைக்குச் செல்ல நேர்ந்ததும் அதற்குப் பின்தான்!

இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் சிங்வியுடன் சேர்ந்து கங்குலி அளித்த ஒவ்வோர் உத்தரவும் முக்கியமானது. குறிப்பாக, ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்ட சுப்பிரமணியன் சுவாமியை இழுத்தடித்த பிரதமர் அலுவலகத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 31-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் - ஊழலுக்கு எதிரான - முக்கியமானத் தீர்ப்புகளில் ஒன்று. ''பொதுப் பணியில் உள்ளவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் ஒரு காலவரையறை வேண் டும். எந்தப் புகார்கள் தொடர்பாக அனுமதி கேட்டாலும், அதிகபட்சம் நான்கு மாதங்களுக்குள் அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படாவிட்டால், அரசு அனுமதி கொடுத்துவிட்டதாகவே கருதப்படும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வது என்பது மக்களின் அடிப்படை உரிமை. இதில் அரசு தாமதம் செய்வதை ஏற்கவே முடியாது'' என்றது அந்தத் தீர்ப்பு.
அலைக்கற்றை ஊழல் வழக்கு என்று இல்லை. பல தருணங்களில் அதிரடியான கருத்துகளைத் தெரிவித்து இருக்கிறார் கங்குலி. ஒருமுறை தொலைபேசி ஒட்டுக்கேட்புத் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார்: ''எந்த அரசுமே வலுவான நீதித் துறையை விரும்புவது இல்லை, அப்படித்தானே?''
சில மாதங்களுக்கு முன் மரண தண்டனை தொடர்பான ஒரு கருத்தரங்கில் கங்குலி தெரிவித்த கருத்துகள் பலரை ஆச்சர்யத்தில் உறையவைத்தவை. ''நம் நாட்டில் அரிதினும் அரிதான வழக்குகளிலேயே மரண தண்டனை வழங்கப்படுவதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், இந்த 'அரிதினும் அரிதான’ என்பதற்கு என்ன வரையறை? 'அரிதினும் அரிதான’ என்பது குற்றத்தைப் பொறுத்ததா? காலத்தைப் பொறுத்ததா? நீதிபதிகளைப் பொறுத்ததா? நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் வாழ்வதற்கான உரிமையை அளிக்கிறது. ஆனால், மரண தண்டனையோ அதைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டத்தின்படிதான் வழங்கப்படுகிறது என்றாலும், மரண தண்டனைக் காட்டுமிராண்டித்தன மானது. ஜனநாயக விரோதமானது. பொறுப்பற்றது'' என்றார் கங்குலி.
அலைக்கற்றை வழக்கில் ''நாட்டின் அரிய வளங்களை தங்களுடைய சுயவிருப்பங்களின் அடிப்படையிலோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ ஒதுக்கீடு செய்ய எவருக்கும் உரிமை இல்லை. இத்தகைய ஒதுக்கீடுகள் அரசுக்கு நஷ்டம் விளைவிக் கும் வகையிலோ, தனிநபர்கள் ஆதாயம் அடையும் வகையிலோ, திருட்டுக்குத் துணைபோகும் வகையிலோ இருக்கக் கூடாது என்பதை நீதி வழங்குவதற்கு இணையானதாக அரசு கொள்ளவேண்டும்'' என்று அவர் பிறப்பித்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு அலைக்கற்றைக்கு மட்டுமல்ல... எரிவாயு, கனிமச் சுரங்கங்கள் என இனி எந்த ஓர் இயற்கை வளத்தை ஒதுக்கீடு செய்யும்போதும் அரசு எப்படிப்பட்ட கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு வெளிப்படையான வழி முறையைக் காட்டியிருக்கிறது.

பணி ஓய்வுபெறும் நாள் அன்று பிரிவு உபசார விழாவில், ''இந்திய நீதிமன்றங்களுக்கு ஒரு மனிதன் கருவாவதில் தொடங்கி அவன் இறுதிச் சடங்கு வரை எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன. நாங்கள் தீர்க்கும் பல பிரச்னைகள் இந்த அரசாங்கம் தீர்க்க வேண்டிய - ஆனால் - தீர்க்க விரும்பாத பிரச்னைகள்'' என்று பேசிய கங்குலிக்குத் தன்னுடைய பணிகள்குறித்து பெரிய பெருமிதங்கள் இல்லை. நல்ல கிரிக்கெட் ரசிகரான அவர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் க்ராம்டன் எழுதிய 'எண்ட் ஆஃப் அன் இன்னிங்ஸ்’ நூலை மேற்கோள் காட்டிப் பேசினார்: ''ஒரு நீதிபதியாக என்னுடைய இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. நான் எப்படி ஆடியிருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எல்லாத் தருணங்களிலும் நேரான (நேர்மையான) பேட்டைக் கொண்டே ஆடினேன். நான் எப்படி ஆடினேன் என்பதைச் சொல்ல வேண்டிய நீதிபதிகள் இனி நீங்கள்தான்!''
நீங்கள் ஆடிய ஆட்டம் உங்கள் விளையாட்டையே கௌரவப்படுத்தி இருக்கிறது கங்குலி!


- ஆனந்த விகடன்