ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த அமெரிக்கக் கப்பலான ஸீமேன் கார்டு, கடலோர காவல் படையால் சுற்றி வளைக்கப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், 12 கடல் மைல்களுக்கு அப்பால் இக்கப்பல் பிடிக்கப்பட்டிருந்தால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது என்று தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நேச்சல் சாந்து தில்லியில் கூறியிருப்பது, தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்தக் கப்பல்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குக் கிடையாது என்று சொல்ல வருகிறாரா அவர்?
பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, இக்கப்பல் 30 கடல் மைல்களுக்கு அப்பால் பிடிக்கப்பட்டு, தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் பதிவு பெற்றுள்ள இக்கப்பல், கடல்கொள்ளையைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் கப்பல் என்று அதன் ஊழியர்களால் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை இங்குள்ள அமெரிக்க தூதரகமோ அல்லது அமெரிக்காவோ உறுதி செய்யவில்லை.
கொச்சி துறைமுகத்தில் இக்கப்பல் சுத்தம் செய்யப்பட்டபோது அதில் எந்தப் பொருளும் இல்லை என்று சான்றளிக்கப்பட்ட நிலையில், தற்போது இக்கப்பலில் 31 துப்பாக்கிகளும் 1500 ரவைகளும் எவ்வாறு வந்தன, எங்கிருந்து எதற்காகப் பெறப்பட்டன என்பதற்கு இவர்கள் விளக்கம் அளிக்க மறுக்கிறார்கள். கடற்கொள்ளை நடக்கக்கூடிய இந்தியப் பெருங்கடல் பகுதியில், எந்த வணிகக் கப்பலுக்கு பாதுகாப்பாக வந்தார்கள் என்கின்ற பதிவேட்டை அளிக்க மறுக்கும் ஊழியர்களும் இந்தக் கப்பலும் நிச்சயமாக சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவர்களது கப்பல், எரிபொருள் நிரப்புவதற்காக வங்கக் கடலுக்குள் நுழைந்ததாகக் கூறுவது உண்மையாக இருப்பின், முறைப்படி தூத்துக்குடி துறைமுகத்துக்குத் தெரிவித்து, இங்கு எரிபொருள் நிரப்பிச்சென்றிருக்க முடியும். ஆனால் திருட்டுத் தனமாக 1500 லிட்டர் டீசலை தூத்துக்குடியில் உள்ளவர் மூலமாக வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கப்பலுக்கு உண்மையிலேயே எரிபொருள் தேவை என்றால், கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, அப்படியே இந்தியப் பெருங்கடலில் பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியும். சுற்றி வளைத்துக்கொண்டு தூத்துக்குடி அருகே வர வேண்டிய தேவையே இல்லை.
இந்தக் கப்பல் அக்டோபர் 12-ம் தேதிதான் சுற்றி வளைக்கப்பட்டது. அதற்கு முன் எத்தனை நாள்களாக இந்தக் கப்பல் அங்கே நின்றது என்பதையாவது தெரிவிக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. இத்தனை சட்டவிரோதச் செயல்கள் செய்திருக்கும் இந்தக் கப்பல் குழுவினரை கைது செய்யாமல், கடந்த 5 நாள்களாக வெறுமனே விசாரணை நடத்திக்கொண்டிருப்பதே விசித்திரமாக இருக்கிறது.
12 மைல்களுக்கு அப்பால் ஒரு கப்பல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகரின் பேச்சே அபத்தமானது. இவர் தேசியப் பாதுகாப்புத் துணை ஆலோசகரா இல்லை தேசவிரோத சக்திகளின் ஆலோசகரா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு இத்தாலி நாட்டுக் கப்பல், கடற்கொள்ளையர்கள் என்று கருதி சுட்டதாக இரண்டு இந்திய மீனவர்களை கொன்றபோது, அந்தச் சம்பவமும்கூட 12 கடல் மைல்களுக்கு அப்பால் நடந்தது என்பதுதான் இத்தாலியின் வாதம். தற்போது ஸீமேன் கார்டு கப்பலை, 12 கடல் மைல்களுக்கு அப்பால் பிடிபட்டதால் இந்தியச் சட்டம் எதுவும் செய்ய முடியாது என்று விட்டுவிட்டால், இது இத்தாலி கப்பல் வீரர்கள் மீதான கொலை வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும்.
சமூகவிரோதிகளுக்கு கள்ள ஆயுதம் வழங்குவோர் அனைவரும் 12 கடல் மைல்களுக்கு அப்பால் நின்றபடி விநியோகம் செய்துவிட்டுச் செல்வார்கள். அதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறாரா பாதுகாப்புத் துணை ஆலோசகர்?
இந்தியா மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் நீடிக்கும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய "சட்டப்படி நடவடிக்கை', "12 கடல் மைல்களுக்கு அப்பால்' போன்ற பொருத்தமற்ற வாதங்கள் நமது பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்பது உறுதி.
அமெரிக்காவிடம் இந்தக் கப்பலின் பயணப்பாதை, வணிகக் கப்பல் பாதுகாப்புக்கான உரிமம் தொடர்பான தகவல்களை 5 நாள்களாகப் பெற முடியவில்லை என்பது நம்பக்கூடியதாக இல்லை. பிடிபட்டவர்கள் அமெரிக்கர்கள் என்பதால் கெஞ்சிக் கொண்டிருக்கிறோமோ? இதன் பின்னணியில் இருக்கு ம் சதிவலையை அவிழ்க்காமல் போனால், விளைவு மோசமானதாக இருக்கும்.
Source :