கிறிஸ்தவர்களின் கல்லறையில் தீண்டாமை

திருச்சியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர் ஹவுஸ் கல்லறைத் தோட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களும், அந்த நகரில் கணிசமாக வாழும் பிள்ளை சமூகத்து கிறிஸ்தவர்களும் இரு வேறு இடங்களில் புதைக்கப்படுகின்றனர்.
இதை உறுதிப் படுத்தும் வகையில் கல்லறையின் நடுவே ஒரு குறுக்கு சுவர் கட்டுப்பட்டுள்ளது.

இந்த பாகுபாட்டை அகற்ற பெரியார் 1950களிலேயே கோரிக்கை விடுத்தும் இந்த சுவர் இன்னமும் அகற்றப்படவில்லை என்று சுட்டிக் காட்டும் பெரியார் திரவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர், இதை தடுக்கத் தவறிய காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவினரைக் கண்டித்து போராடப் போவதாக கூறுகிறார்.

தலித் கிறிஸ்தவர்கள் புறந்தள்ளப்படுவதாகக் கூறி சமீப காலங்களில் தேவாலயத்துக்குள்ளேயே கலகக் குரல்கள் எழுந்துள்ளன. அனைவரும் சமம் என்பது தான் தேவாலயத்தின் அதிகாரபூர்வ நிலையாக உள்ளது.


சாதிப் பிரிவினையை கிறிஸ்தவம் ஏற்கவில்லை


சாதி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சுவரை தேவாலயம் ஏற்கவில்லை என்று தமிழோசையிடம் தெரிவித்த கத்தோலிக்கப் பாதிரியாரும் தமிழக அரசின் சிறுபான்மையினர் நல வாரியத்தின் தலைவருமான அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை, இந்தியாவில் உள்ள சில சமூக சூழல்களை புறம்தள்ள முடியாமல் கிறிஸ்தவம் இருப்பதாகக் கூறினார்.

திருச்சியில் உள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது என்றும் அதனால்தான் அந்த சுவரை அகற்ற முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார். அதே சமயம் இந்த கல்லறையில் ‘கல்லறைத் திருநாள் விழா’ ஆயரால் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கல்லறையில் தொடர்ந்து சடலங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. ஆயர்களுக்கு கீழ் வரக்கூடிய பிற குருக்கள் இந்த மரணச் சடங்குகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதை அருட் தந்தை வின்சென்ட் சின்னதுரை ஒத்துக் கொள்கிறார்.

தமிழகத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு திருச்சபையில் நீதி கிடைக்கவில்லை என்கிறார் கத்தோலிக பாதிரியாரும், தலித் கிறிஸ்தவ செயற்பாட்டாளருமான யேசு மரியான்.

சம்மந்தப்பட்ட நிலம் தனியாருடையதாக இருந்தாலும், அந்த நிலம் ஆயரால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு அதை நிர்வகிக்கும் பொறுப்பு திருச்சபையுடையது என்று கூறும் யேசு மரியான், கிறிஸ்தவ நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு சமீப காலங்களாக இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

Source : BBC Tamil
Link : http://www.bbc.co.uk/tamil/news/story/2010/08/100814_cemetrycristians.shtml