Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

வைகோ : ஒரு சிறப்புப் பார்வை


அரசியல் மேடைகளில் வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும் களத்தை கொதிகலனாகவே வைத்திருக்கும்.போர்வாள்,புரட்சிப்புயல்,என பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர்.பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு  இருப்பவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து  இங்கே கொஞ்சம்.....

வை.கோபாலசாமி என பெற்றோர் வைத்த பெயரைத் தொண்டர்கள் சுருக்கி வைகோ என்று அழைக்க அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.அந்த காலத்தில் அவரது தாத்தாவை அனைவரும் " அகோ " என்பார்களாம்.

எட்டு வயதில்,காந்தியின் பேரன் கிருஸ்ணதாஸ் காந்தியின் முன்னால் பூமிதான இயக்கத்தை ஆதரித்து இவர் பேசியதுதான் முதல் மேடை பேச்சு.ஐந்தாம் வகுப்பு மாணவனாக எட்டையபுரம் பாரதி விழாவில் கலந்து கொண்டது முதல் போட்டி.

நெல்லை சவேரியார், சென்னை மாநில கல்லூரி,சட்ட கல்லூரியில் படித்த காலங்களில் அத்தனை பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு இவருக்குதான்.இவருக்கு சளைக்காமல் சவால் கொடுத்தவர் " வலம்புரி ஜான் ".

மே 22 இவரது பிறந்த நாள்.ஆனால் சின்ன கொண்டாட்டம் கூட இருக்காது.அன்றைய தினத்தில் எங்கு இருக்கிறார் என்று குடும்பத்தினர் தவிர,யாருக்கும் தெரியாது !

இதுவரை, 28 முறை சிறை சென்றுள்ளதில்,நான்காண்டுகாலம் சிறையில் கழிந்திருக்கிறது.திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். சிறையில் எப்போதும் சிறப்பு வகுப்பு வாங்கிக்கொள்ள மாட்டார்.

பொடாவில் வைகோ கைதானதைக் கண்டித்து  1 கோடியே  10 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று இதுவரை வேறு எவரது கைதுக்கும் நடந்ததா என்பது சந்தேகம்தான்!

எந்த மேடைப்  பேச்சுக்கு முன்னரும் இரவு உணவை சாப்பிட மாட்டார். பசி இருந்தால்தான் பேச்சும்,குரலும்,சரியாக வரும் என்பார்.

சிவப்பு சட்டை,கறுப்பு பேன்ட் சீருடையுடன் தி.மு.க. வில் இப்போது வலம்வரும் தொண்டர் படையை அப்போது உருவாக்கியவர் வைகோ. " ஆயுத படையை உருவாக்குகிறார்" என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வைகோவையும்  300 தொண்டர்களையும் கைது செய்தார். இன்று ம.தி.மு.க-விலும் அப்படி ஒரு பெரும்படை இருக்கிறது.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றதற்காக கருப்பு,சிவப்பு, மோதிரம் ஒன்றை இவருக்கு அணிவித்தார்கள். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற போது மோதிரத்தை கழற்றச்  சொன்னார்கள். அதன் பிறகு 40 ஆண்டுகளாக வைகோ மோதிரம் அணிவதே இல்லை.

கருப்பையா மூப்பனார், இவர் மீது பாசமாக இருப்பார்.வைகோ வைத்திருக்கும் சூட்கேஸ் மூப்பனார் கொடுத்ததுதான்.வைகோவை காங்கிரசில் சேரச் சொல்லி ராஜீவ் காந்தி தூது அனுப்பியதும் மூப்பனாரைத்தான்.

விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியான மறுநாள், நாடாளுமன்றத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே அவரை அவமானப் படுத்துவது போல பேசினார். உடனே வைகோ " இறந்தவர் குறித்து விமர்சிப்பது தவறு.சஞ்சய் காந்தியின் உடலைகூடப் பார்க்காமல் அவருடன் பலியான விமானி வீட்டுக்கு ஓடிபோய் அஞ்சலி செலுத்தியவர் இந்திரா.

ஆனால் பிரதமர் மொரார்ஜியைக் காப்பாற்றுவதற்காகப் பலியான ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க உங்களில் ஒருவர்கூடச் செல்லவில்லை! என்று பதிலளித்தார்.அந்த பேச்சுதான் தலைநகரத்தில் வைகோ மீது பலரது கவனத்தை ஈர்த்தது.

தமிழீழத்துக்கு ரகசியமாகச் சென்று 23 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்.அப்போது " உங்களது வாழ்க்கைக் கதையை நான் எழுதுகிறேன் " என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 15 நாட்கள் மனம்விட்டு பேசி இருக்கிறார் பிரபாகரன். அந்த குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது!

வைகோ திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி தர ஒப்புகொண்டு இருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. திருமண நாள் அன்று அவருக்குத் திடீர் கண்வலி.கருணாநிதிக்குப் பதில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வைகோ திருமணம் நடைபெற்றது.

காலை 11  மணிக்கு வேகவைத்த காய்கறி, மதியம் 4 மணிக்கு, பயிறு வகைகள்  சாப்பிடுவது இவரது பழக்கம்.

அலெக்சாண்டர், நெப்போலியன்,உமர் முக்தார், சே குவேரா,கரிபால்டி,ஆகிய ஐவரும் வைகோ மிகவும் ஆராதிக்கும் மா வீரர்கள்.

தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ள இவரிடம் கடந்த  35 ஆண்டு கால டைரிகள் பத்திரமாக இருக்கின்றனவாம்.

கார் பயணங்களில் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள்தான் ஒலிக்கும்.அவ்வப்பொழுது தியாகராஜ பகாவதர், பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரின் விருப்பமாகும்.

அசைவ உணவுகளின் ஏகப் பிரியர்.அம்மா மாரியம்மாள் வைக்கும் கோழிக் குழம்புக்கு ஆயுட்கால அடிமை.

வைகோ தோளில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட  கருப்பு சால்வையை முதலில் அணிவித்தவர் சங்கரன்கோயில் பிச்சையா.தன் மகள் திருமணத்திற்கு வந்தவருக்கு  1985 -ம் ஆண்டு கருப்பு சால்வை அணிவித்தார் பிச்சையா.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புது சால்வை இன்றும் அனுப்ப்பிகொண்டு இருக்கிறார் பிச்சையா.

தமிழ்,ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து முக்கிய திரைப் படங்களையும் தியேட்டரில் பார்த்துவிடுவார். சமீபத்தில் இவர் பார்த்த படம் " அவதார் ".

குறிப்புகள் இல்லாமலேயே மணிக்கணக்கில் மேடையில் பேசும் வழக்கம்கொண்டவர். நா சுளுக்கும் கரடு முரடான சங்க இலக்கிய பாடல்களைக்கூட இரண்டு ,மூன்று,முறை வாசித்ததுமே அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பார்.

வைகோவின் அக்கா கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால்,இவரது மேடைப் பேச்சில் சில சமயம் பைபிள் மேற்கோள் எட்டிபார்க்கும்.

வைகோவிற்கு வரும் கடிதங்களையும், அவர் அனுப்பும் கடிதங்களையும் பிரித்துப் படிப்பதற்கு சென்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவே போட்டு இருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

சமாதான  காலத்தில் ஈழத்துக்கு வர வைகோவிற்கு அழைப்பு வைத்தார்கள்.
" சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குத்தான்  இனி நான் வருவேன் "  என்று அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாலிபால்,பேஸ்கட்பால்,புட்பால் விளையாட்டுகளைப் பற்றி மணிக்கணக்கில் கூட பேசிக்கொண்டு இருப்பார். டி.வி-யிலும் நேரிலும் இந்தப் போட்டிகளைப் பார்ப்பதில் அலாதியான் ஆர்வம் கொண்டவர். 

நன்றி :விகடன் and Source .