Showing posts with label கூடங்குளம். Show all posts
Showing posts with label கூடங்குளம். Show all posts

இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?

தமிழகத்தின் கடற்கரை நீளம் 1,076 கிலோமீட்டர்கள். இது முழுக்க இருக்கும் கடலோர கிராமங்கள் அனைத்தில் இருந்தும் மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள், அந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு!

அதில், 127 பேர் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி பல நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுமார் 11,000-க்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தார்கள்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் இருந்தார்கள். போராட்டம் தொடங்கிய செப்டம்பர் 11 ஆம் தேதியில் இருந்து வயல்களுக்கோ, கடலுக்கோ அவர்கள் செல்லவில்லை. உப்புக் காற்றையே உணவாக்கிக் கொண்டு சோர்ந்து உறங்கின குழந்தைகள். பள்ளிக்கூடங்கள் அறிவிக்கப்படாத விடுமுறையைப் பெற்றிருந்ததால் மதிய உணவையும் தியாகம் செய்து பசியில் துவண்டு போயிருந்தார்கள் மாணவர்கள்...
- இவை அண்மைய போராட்ட நிகழ்வின் சிலக் குறிப்புகளே.

இப்போது...

'கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானது. ஆனால், அது பாதுகாப்பற்றது என்று தவறான தகவல்களை பரப்புகிறார்கள்' என்று, இந்திய அணுசக்தி கழகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி பாதிப்புக்கு வாய்ப்பில்லை, அணு மின் நிலையத்துக்குள் தண்ணீர் புகாது என்றெல்லாம் ஆருடம் சொல்லியிருக்கிறது அணுசக்தி கழகம்.
கூடங்குளம் விவகாரம் குறித்து புதன்கிழமை சுமார் அரைமணி நேரம் பிரதமரிடம் இணையமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.
நிலக்கரி, தண்ணீர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தற்போதைய மின் தட்டுப்பாட்டைப் பூர்த்தி செய்யாது. ஆகையால் நாட்டுக்கு அணுசக்தி மின்சாரம் தேவையானது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன என்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை நாராயணசாமியிடம் பிரதமர் கூறினாராம்!


மின்சாரத் தேவை பூர்த்தியாகிறதா?
ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புக்குப் பிறகு அணு உலைகளின் நம்பகத்தன்மை மீது சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது மக்களுக்கு. அணுமின் நிலையங்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று சொல்லி வந்த படித்த மக்கள் கூட தற்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஹிரோஷிமா நாகசாகி முதல் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் மார்கூல் என்ற அணு உலை வெடித்தது வரை எத்தனையோ அணு விபத்துக்களை உலக நாடுகளின் அரசுகள் பார்த்திருந்தாலும் அதன் அபாயத்தை உணராமல் மேலும் மேலும் புதிய அணுமின் நிலையங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வளர்ந்த சில நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மூடிவிட்டு தங்களுக்கான மின்சாரத் தேவைக்காகவும், அணு ஆயுதங்களுக்காகவும் வளரும் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் புதிய அணு உலைகளுக்குத் திறப்பு விழா நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன.
இயற்கை விவசாயத்தையே அங்கீகரிக்கத் தயங்கும் நம் இந்திய அரசு, நாடெங்கும் அணுமின் நிலையங்கள் தொடங்க பன்னாட்டு அரசுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்ததில் எந்த ஓர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடையத் தேவையில்லை. இந்தியாவில் 'மின்சாரத்துக்காக' என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்ட அணுமின் நிலையங்கள் உண்மையாகவே அவை தொடங்கப்பட்டதற்கான தேவையைப் பூர்த்தி செய்திருக்கின்றனவா என்றால் அதுதான் இல்லை. நமது நாட்டின் மின்சாரத் தேவைக்கும் அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறனுக்கும் இருக்கும் இடையே வித்தியாசங்கள் நிறைய..
இந்த இடத்தில் வியப்பளிக்கும் இன்னுமொரு தகவல், மரபு சாரா எரிசக்தி முறைகளுக்கு ஊக்கமளித்து சரியாகச் செயல்பட வைத்தால் நம் நாட்டினுடைய மின்சாரத் தேவையைப் பாதியாகக் குறைக்க முடியும் என்பது. ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அணுமின் நிலையங்கள் அமைக்க கோடி கோடியாகப் பணத்தை இறைப்பது ஏன்? இந்தக் கேள்விக்கான பதிலை அரசு ஒருபோதும் சொல்லப்போவது இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தாலும் ஒன்று 'மின்சாரத்துக்காக' என்றோ அல்லது 'பாதுகாப்புக் காரணங்களுக்காக பதில் அளிக்க முடியாது' என்றோ தான் தகவல் வரும்.
தற்போது இந்தியாவில் 20 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்திய - அமெரிக்க, இந்திய - ரஷ்ய, இந்திய - பிரான்ஸ் அணு ஒப்பந்தங்கள் வேகவேகமாகக் கையெழுத்தாகி வருகின்றன. ஒவ்வொரு அணுமின் நிலையங்கள் அமைந்திருக்கும் மாநிலங்களிலும் அணுசக்தியை எதிர்த்து குரல் எழும்புகின்றன. புதிதாக முளைக்க இருக்கும் ஒப்பந்தங்களை எதிர்த்தும் மக்கள் போராடுகிறார்கள். எங்கெல்லாம் மக்கள் கொதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் போலீஸாரால் ஒடுக்கப்படுகிறார்கள்.


எதிர்ப்பு வலுத்துள்ளதன் பின்னணி...
1988-ல் கையெழுத்தாகி 1997-ல் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ஆரம்பித்து சுமார் 12 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை இந்த அணுமின் நிலையம். கட்டுமானப் பணிகளில் எத்தனையோ குழப்பங்கள், விபத்துகள் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கே பணியாற்றும் ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளாக வேறு ஒரு பெயரில் போலியாகப் பணியாற்றி வந்ததாகவும், அவரைக் கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தங்களின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரையே தன்னால் சரிவர சோதனை செய்யாத அரசு, எவ்வாறு தன் நிலையத்தில் இருக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்கும்? எவ்வாறு தன் உலைகளில் இருக்கும் குறைபாடுகளைக் கவனிக்கும்? எவ்வாறு அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வெளிப்படுத்தும்?


இத்தனை நாள் இல்லாது திடீரென்று ஏன் இந்தத் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. உண்மையில், இத்திட்டம் கையெழுத்தான தினத்தில் இருந்தே பல்வேறு வழிகளில் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் வரவில்லை. ஊடகங்கள் முக்கியத்துவம் தரவில்லை. அதனால் கூடங்குளம் பகுதியைத் தாண்டி வேறு பகுதிகளுக்குச் செய்திகள் முழுமையாகச் சென்று சேரவில்லை.
மூன்று மைல் தீவு, செர்னோபில், அவ்வப்போது கல்பாக்கத்தில் நிகழும் விபத்துகள் போன்றவை ஏற்பட்ட போதும் கூட கூடங்குள மக்களின் அலறல் நம் யாருக்கும் கேட்கவே இல்லை. இந்த வருடத்தின் தொடக்க மாதங்களில் நிகழ்ந்த ஃபுகுஷிமாவுக்கு விபத்துக்குப் பிறகுதான் இந்த மக்களின் கோரிக்கையின் மீது வெளிச்சம் படர்கிறது.


எதற்காக அச்சம்...
கூடங்குளம் கிராமம் விவசாயிகளும், மீனவர்களும் அதிகம் உள்ள பகுதி. ஒருவேளை இந்த அணு உலைகள் செயல்பட ஆரம்பித்தால், உலைகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பயிர்கள் பாதிக்கப்படும். கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகும். அணு உலைகளைக் குளிவிக்கும் குளிர்விப்பான்களாக கடல் நீர்தான் பயன்படுத்தப்படுகின்றது. உலைகளைக் குளிர்வித்த அதே நீர் மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் கடலில் வெப்பம் அதிகரித்து அதனால் கடல்சார் சூழலியல் பாதிப்படையும். இன்னொரு முக்கியமான விஷயம், இன்று வரை அணுக்கழிவுகளை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. தற்போது பொதுவில் இருக்கும் நடைமுறை, ஒன்று கடலில் கலக்க வைப்பது அல்லது பூமிக்கடியில் புதைத்து வைப்பது. கடலில் கலந்தால் வெப்பம் அதிகரித்து மீன்கள் சாகும். புதைத்து வைத்தாலோ நிலத்தின் தன்மை விஷமாகும்.
அணுமின் நிலையங்களை அமைக்க நிலங்கள் தேர்வு செய்யப்படுவது, அந்தப் பகுதி நிலநடுக்க மண்டலத்துக்குள் வருமா என்ற அடிப்படையில்தான். தமிழக முதல்வரின் சமீபத்திய அறிக்கையில் கூடங்குளம் அணு உலைகள் நிலநடுக்க மண்டலத்துக்கு வெளியேதான் இருக்கிறது என்கிறது. ஆனால் அது முற்றிலும் தவறு. காரணம், 2003 பிப்ரவரி 9 ஆம் தேதி பாளையங்கோட்டையிலும், 2006 மார்ச் 19 ஆம் தேதி கூடங்குளத்தைச் சுற்றியுள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகிய பகுதிகளில் மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிலரின் வீடுகளில் விரிசல்கள் விழுந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் மெலிதான நிலநடுக்கம்தான் ஏற்படும். அதனால் கூடங்குள அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எந்த விஞ்ஞானியாவது உத்தரவாதம் தர முடியுமா? அதே அளவு நிலநடுக்கம் தான் மீண்டும் அந்தப் பகுதிகளில் ஏற்படும் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
இத்தனைக்கும் கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பிக்கவில்லை. ஏனெனில், 1980களில் அப்படி ஒரு முறையே பின்பற்றப்படவில்லை. மூன்றாவது மற்றும் நான்காவது உலைகளுக்கு மட்டும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைப் பெற்றிருக்கிறார்கள் அணுசக்தித் துறையினர் என்றொரு கருத்தும் நிலவுகிறது.
மேலும், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பல குளறுபடிகள் நடந்திருக்கின்றன. 2007 ஜனவரியில் இத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக அணுசக்தி துறையினரால் வழங்கப்பட்டு 'தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்' முதலாவதாக ஒரு நோட்டீஸை அச்சடித்தது. அதில் 'ஆலை அமைந்துள்ள இடம் / இடப்பெயர்ச்சியாக வேண்டிய செயல்கள், இத்திட்டால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிற உண்மையான குடிமக்கள்' ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு 2007 மார்ச் மாதத்தில் 'மக்கள் கருத்துக் கேட்பு' கூட்டம் நடைபெறும் என்று சொல்லி இரண்டாவதாக ஒரு நோட்டீஸ் அனுப்பினார்கள். ஆனால் இரண்டாவதாக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் 'இடப்பெயர்ச்சி, பாதிக்கப்படுகிற' போன்ற வார்த்தைகள் விடுபட்டிருக்கின்றன.


காணாமல் போன கால்வாய்..
பல கோடி ரூபாய் செலவு செய்து அழிவு வேலையைத் தொடங்க இருக்கிற நம் அரசாங்கம் நமது விவசாய மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை மிகத் திறமையாகவே செய்து கொண்டு வருகிறது. அதற்கு ஓர் உதாரணம் பெருஞ்சானிக் கால்வாய். கூடங்குளத்திற்கு அருகே உள்ள பரமேஸ்வரபுரம் என்கிற கிராமத்தில் பேச்சிப்பாறையில் இருந்து நீர் கொண்டு வர ஒரு கால்வாய் கட்டப்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக இருக்க, கக்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இதற்காக அவர்களின் நினைவாக ராதாபுரம் பேருந்து நிலையத்தில் காமராஜர், கக்கன் ஆகியோர் இருவருக்கும் சிலை வைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை. அவர்கள் ஏற்படுத்தித் தந்த இந்தக் கால்வாய் தற்போது பாழடைந்து கிடக்கிறது.
அந்தக் கால்வாய் இருந்த வரையில் சுமார் பத்து கிராமங்களின் விவசாயத்தை வாழ வைத்ததாகச் சொல்கிறார்கள் கிராம மக்கள். காமராஜர் காலத்திற்குப் பின் வந்த அரசுகள் அந்தக் கால்வாயை முறையாகப் பராமரிக்காததால் இன்று அது புதர் மண்டி, சிதைந்து, இடிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்ட நிலங்களுக்கு அருகில் பரிதாபமாக நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.அரசின் கடமை எது?
"சாதாரண நாள்லயே எங்களை கடலுக்குள் மீன் பிடிக்க அனுமதிக்கிறதில்ல... இப்ப இதுல வேற அணு உலை அமைஞ்சிருக்குற கடல் பகுதியில மூன்றடுக்கு பாதுகாப்பு வேற போட்டிருக்காங்க. அதனால இனிமே கடலுக்குள் போகவே முடியாதோங்கிற சந்தேகம் வந்துருச்சு.." என்று வருத்தப்பட்டார் ஒரு மீனவர். விவசாயத்தை அழிப்பதும், வாழ்வாதாரத்தை நசுக்குவதும் தான் ஓர் அரசு தன் மக்களுக்குச் செய்யக்கூடிய நன்மையா?
'30க்கும் மேற்பட்ட அணு உலைகளைக் கொண்டிருக்கிற பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் எல்லாம் மின்சாரம் பெறவில்லையா... அவர்கள் நாட்டில் என்ன ஆபத்து நிகழ்ந்துவிட்டது?' என்று கேட்கிறார்கள் வலதுசாரி அரசியலைப் போற்றுபவர்கள். இப்போது அந்த தேசங்களில் இரண்டுவிதமான பிரச்னைகள் முளைத்திருக்கின்றன. ஒன்று, அணுக்கழிவுகளைப் புதைக்க நிலம் தர மறுக்கிறார்கள் மக்கள். இரண்டு, அணு உலைகளைக் குளிர்வித்த ஆற்று நீரை மீண்டும் ஆற்றுக்குள் செலுத்துவதால் ஆறு சூடாகி வறட்சியாகிறது. ஆறு வறண்டு போனால் உலைகளைக் குளிர்விக்க முடியாது. குளிர்விக்க முடியாமல் போனால் மின்சாரம் தயாரிக்க முடியாது. இந்த உண்மையை அணுசக்தி ஆதரவாளர்கள் எப்போது தெரிந்து கொள்வார்கள்?
பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்ட அரசு, பிளாஸ்டிக்கைக் காட்டிலும் அதிக அளவு அபாயம் உள்ள அணு உலைகளுக்கு அனுமதி அளிக்கும் விதத்தில் நடந்து கொள்வது நகைமுரணாக இருக்கிறது. 'மண் பயனுற வேண்டும்... இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் சோறிட வேண்டும்!' என்பதே அறிவியலின் அடித்தளமாக இருக்க வேண்டும். ஓர் அரசின் அடிப்படைக் கடமையும் அதுவாக அமைய வேண்டும்!


"முட்டாள்தனமானது!"
இடிந்தகரையில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவு அளித்த சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் சென்னை திரும்பிய போது அவரிடம் பேசினேன்.
அணுமின் நிலையங்களுக்காக நிலத்தை அபகரிக்க அணுசக்தித் துறை தன்னுடைய சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிகிறதே? என்று கேட்டதற்கு, "அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அது முழுக்க முட்டாள்தனமானது. அணை கட்டுவதாக இருந்தாலும் சரி, அணு உலைகள் கட்டுவதாக இருந்தாலும் சரி, மக்களைத் தங்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டு மேற்கொள்வது அடிப்படையான மனித உரிமை மீறல்!" என்றார்.

அணுமின் நிலையம் தொடர்பான இந்த மக்களின் போராட்டம் அரசியலாக்கப்படுகிறதா என்றதற்கு, "இது அரசியலாக்கப்பட வேண்டும் என்றுதானே போராடுகிறோம். இது மட்டுமல்ல. ஒவ்வொரு பிரச்னையும் அரசியலாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது பலதரப்பட்ட மக்களையும் சென்றடைந்து, விவாதங்கள் துவங்கி ஒரு நல்ல தீர்வுக்கு வர முடியும்!" என்றார் அழுத்தமாக!


இடதுசாரிகளின் மெளனம் ஏன்?
பிரான்ஸ் நாட்டில் இருந்து அணு உலைகள், எரிபொருட்கள், தொழில்நுட்பங்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய எதிர்ப்பு காட்டியவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள். அதே போல, அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தையும் எதிர்த்தார்கள்.
ஆனால், ரஷ்யாவின் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் நிறுவப்பட்டு இருக்கிறது. இதே வி.வி.இ.ஆர். அணு உலையில் ரஷ்யாவில் 'வெப்ப ஓட்ட' சோதனை நிகழ்த்தப்பட்ட போது அது தோல்வியில் முடிந்திருக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பானது அல்ல என்று அந்த நாட்டின் அனைத்து அணு உலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிய வந்திருக்கிறது.
இத்தனைக்குப் பிறகும், கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடங்குளம் அணு உலைக்கு அழுத்தமாக எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த பிருந்தா காரத், 'அணு உலைகளை எதிர்க்கும் எந்தக் குழுவுக்கும் தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்' என்று பட்டும்படாமலும் சொல்லிச் சென்றார். இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கள்ள மௌனம் ஏன்? இது ரஷ்யாவில் இருந்து வந்த தொழில்நுட்பம் என்பது மட்டும்தானா?

Source : Vikatan.com (http://news.vikatan.com/index.php?nid=4126)

Daily Calendar