அவமானம் முதல்வருக்கல்ல!

தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது ஏதோ சம்பிரதாயத்துக்காகவோ, பேசிக் கலைவதற்காகவோ அல்ல. முக்கியமான தேசியப் பிரச்னைகளையும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அலசுவதற்காக. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தைப் பட்டிமன்றம் நடத்துவதுபோல ஆளுக்குப் பத்து நிமிடம் பேசி முடித்து விடுங்கள் என்று சொல்வது, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களைக் கட்டுப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாரபட்சம் காட்டவில்லை. அனைவருக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்று மத்திய அரசு சொல்வது நியாயமாகத் தெரியவில்லை. பிரச்னைகளை மட்டுமே சந்தித்து வரும் தமிழகம் போன்ற ஒரு மாநிலத்துக்கு 10 நிமிடம் போதாது. கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கும் 10 நிமிடம் தமிழகத்துக்கும் பத்து நிமிடமா?
பிரதமர் பேசி முடித்தவுடன் அடுத்த நபராக, தமிழக முதல்வருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதலில் பேச அழைக்கப்பட்டார் என்றும் ""இந்த முழுஉரையையும் நான் படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்று ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார் என்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கூறுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முழுமையாகப் பேச முடியாத போதிலும் அவரது உரை முழுமையாக ஏற்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் உள்வாங்கிக்கொண்டுவிட்டதாகச் சொல்ல முயல்கிறது மத்திய அரசு. அப்படியானால், தமிழக முதல்வர் தில்லி வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுதான் இந்த உரையை அளிக்க வேண்டும் என்பதில்லையே! வெறும் தொலைநகல் மூலம் அனுப்பினாலே போதுமே, அவரை ஏன் நேரில் வரச்சொல்லி அழைத்து அவமானப்படுத்த வேண்டும்?
எல்லா மாநில முதல்வர்கள் முன்பாகவும் தமிழகத்தின் பிரச்னைகளைப் பேசும்போதுதான், இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு மாநிலம் எந்த அளவுக்கு மோசமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என்பதை மற்ற மாநில முதல்வர்களும் உணர முடியும். வெறும் உரையை படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்வதால், எந்த மாநில முதல்வருக்கும் மற்ற மாநில அதிகாரிகளுக்கும் தமிழகத்தின் பிரச்னையை உள்வாங்க இயலாது.
இன்றைய தினம் இந்தியாவில் மிகப்பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! மத்திய அரசினால் முழுக்க முழுக்கப் புறக்கணிக்கப்பட்டுவரும் மாநிலமும் தமிழ்நாடு மட்டுமே. அதேநேரத்தில், இந்திய அரசின் கஜானாவுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மாநிலம் தமிழகம். சொல்லப் போனால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீட்டையும்விட தமிழகம் பல்வேறு வரிகள் மூலம் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் பங்களிப்பு அதிகம் என்பதை மறந்து விடலாகாது.

  • காவிரிப் பிரச்னையில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. காவிரி நீரை பிச்சை கேட்பது போலத்தான் கேட்டுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கர்நாடக மாநில அரசைக் கட்டுப்படுத்தவோ, அணைகளைத் தன் பொறுப்பில் ஏற்று நீரைப் பகிர்ந்தளிக்கவோ மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.
  • முல்லைப்பெரியாறு அணையிலும் இதே நிலைதான். அணை பலமாக இருக்கிறது என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்தும் கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பான நிலையை மேற்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், கேரளத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், மத்தியில் தங்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று நம்புவதுதான்.
  • தமிழ்நாட்டில் தொழில்நசிவுக்குக் காரணமாக மின்பற்றாக்குறை உள்ளது. திமுக ஆட்சியின்போது கிடைத்த மின்சாரத்தைவிடக் குறைவான மின்சாரம் மத்திய தொகுப்பில் வழங்கப்படுகிறது. அதிக மின்சாரம் கேட்டால், மின்பாதை இல்லை என்கிறார்கள். சரி, தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் (2830 மெகாவாட்) முழுவதையும் தமிழ்நாட்டுக்கே கொடுங்கள் என்று கேட்டால் பதிலே இல்லை. 
  • அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மய உரிமம் குறித்து கடிதம் எழுதியாகிவிட்டது. இந்த எளிய உரிமம் கொடுக்க மத்திய அரசு தயங்கக் காரணம் என்ன என்பதைத் தமிழக முதல்வரும் வெளிப்படையாகப் பேசிவிட்டார். பத்திரிகைகளும் எழுதிவிட்டன. ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழக அரசை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகப் பார்க்காமல் அதிமுக ஆட்சி என்பதாக மட்டுமே பார்க்கிறது மத்திய அரசு என்றுதானே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதுபோல, இப்படி மணி அடித்து தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் ஒன்றை இதுவரை இருந்த எந்த ஆட்சியும் நடத்தியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் ஒருவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதல்வர், தனது மாநிலத்தின் பிரச்னைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றால் அது அந்த மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதி; மக்களாட்சியின் முரண்.
அவமானம் முதல்வருக்கல்ல, தமிழகத்துக்கு! முதல்வரின் வெளிநடப்புக்குக் காரணம் கோபமும் ஆத்திரமுமல்ல. தமிழர்களுக்கே உரித்தான தன்மான உணர்வு!