அவமானம் முதல்வருக்கல்ல!

தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது ஏதோ சம்பிரதாயத்துக்காகவோ, பேசிக் கலைவதற்காகவோ அல்ல. முக்கியமான தேசியப் பிரச்னைகளையும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அலசுவதற்காக. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தைப் பட்டிமன்றம் நடத்துவதுபோல ஆளுக்குப் பத்து நிமிடம் பேசி முடித்து விடுங்கள் என்று சொல்வது, அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களைக் கட்டுப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாரபட்சம் காட்டவில்லை. அனைவருக்கும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்று மத்திய அரசு சொல்வது நியாயமாகத் தெரியவில்லை. பிரச்னைகளை மட்டுமே சந்தித்து வரும் தமிழகம் போன்ற ஒரு மாநிலத்துக்கு 10 நிமிடம் போதாது. கோவா, திரிபுரா போன்ற மாநிலங்களுக்கும் 10 நிமிடம் தமிழகத்துக்கும் பத்து நிமிடமா?
பிரதமர் பேசி முடித்தவுடன் அடுத்த நபராக, தமிழக முதல்வருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதலில் பேச அழைக்கப்பட்டார் என்றும் ""இந்த முழுஉரையையும் நான் படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்ளுங்கள்'' என்று ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார் என்றும் மத்திய அரசின் சார்பில் விளக்கம் கூறுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முழுமையாகப் பேச முடியாத போதிலும் அவரது உரை முழுமையாக ஏற்கப்பட்டு, அதன் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் உள்வாங்கிக்கொண்டுவிட்டதாகச் சொல்ல முயல்கிறது மத்திய அரசு. அப்படியானால், தமிழக முதல்வர் தில்லி வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுதான் இந்த உரையை அளிக்க வேண்டும் என்பதில்லையே! வெறும் தொலைநகல் மூலம் அனுப்பினாலே போதுமே, அவரை ஏன் நேரில் வரச்சொல்லி அழைத்து அவமானப்படுத்த வேண்டும்?
எல்லா மாநில முதல்வர்கள் முன்பாகவும் தமிழகத்தின் பிரச்னைகளைப் பேசும்போதுதான், இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு மாநிலம் எந்த அளவுக்கு மோசமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது என்பதை மற்ற மாநில முதல்வர்களும் உணர முடியும். வெறும் உரையை படித்ததாகக் கருதி சேர்த்துக்கொள்வதால், எந்த மாநில முதல்வருக்கும் மற்ற மாநில அதிகாரிகளுக்கும் தமிழகத்தின் பிரச்னையை உள்வாங்க இயலாது.
இன்றைய தினம் இந்தியாவில் மிகப்பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே! மத்திய அரசினால் முழுக்க முழுக்கப் புறக்கணிக்கப்பட்டுவரும் மாநிலமும் தமிழ்நாடு மட்டுமே. அதேநேரத்தில், இந்திய அரசின் கஜானாவுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மாநிலம் தமிழகம். சொல்லப் போனால் தமிழகத்திற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீட்டையும்விட தமிழகம் பல்வேறு வரிகள் மூலம் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் பங்களிப்பு அதிகம் என்பதை மறந்து விடலாகாது.

  • காவிரிப் பிரச்னையில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. காவிரி நீரை பிச்சை கேட்பது போலத்தான் கேட்டுப்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் கர்நாடக மாநில அரசைக் கட்டுப்படுத்தவோ, அணைகளைத் தன் பொறுப்பில் ஏற்று நீரைப் பகிர்ந்தளிக்கவோ மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை.
  • முல்லைப்பெரியாறு அணையிலும் இதே நிலைதான். அணை பலமாக இருக்கிறது என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்தும் கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பான நிலையை மேற்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், கேரளத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், மத்தியில் தங்கள் ஆட்சி நடைபெறுகிறது என்று நம்புவதுதான்.
  • தமிழ்நாட்டில் தொழில்நசிவுக்குக் காரணமாக மின்பற்றாக்குறை உள்ளது. திமுக ஆட்சியின்போது கிடைத்த மின்சாரத்தைவிடக் குறைவான மின்சாரம் மத்திய தொகுப்பில் வழங்கப்படுகிறது. அதிக மின்சாரம் கேட்டால், மின்பாதை இல்லை என்கிறார்கள். சரி, தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் (2830 மெகாவாட்) முழுவதையும் தமிழ்நாட்டுக்கே கொடுங்கள் என்று கேட்டால் பதிலே இல்லை. 
  • அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் மய உரிமம் குறித்து கடிதம் எழுதியாகிவிட்டது. இந்த எளிய உரிமம் கொடுக்க மத்திய அரசு தயங்கக் காரணம் என்ன என்பதைத் தமிழக முதல்வரும் வெளிப்படையாகப் பேசிவிட்டார். பத்திரிகைகளும் எழுதிவிட்டன. ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழக அரசை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகப் பார்க்காமல் அதிமுக ஆட்சி என்பதாக மட்டுமே பார்க்கிறது மத்திய அரசு என்றுதானே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களிடம் கூறியிருப்பதுபோல, இப்படி மணி அடித்து தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டம் ஒன்றை இதுவரை இருந்த எந்த ஆட்சியும் நடத்தியதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் ஒருவர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முதல்வர், தனது மாநிலத்தின் பிரச்னைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றால் அது அந்த மாநிலத்திற்கு இழைக்கப்படும் அநீதி; மக்களாட்சியின் முரண்.
அவமானம் முதல்வருக்கல்ல, தமிழகத்துக்கு! முதல்வரின் வெளிநடப்புக்குக் காரணம் கோபமும் ஆத்திரமுமல்ல. தமிழர்களுக்கே உரித்தான தன்மான உணர்வு!

ஏன் இந்த பெயர் வந்தது?

எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?




1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.

மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் ன்று போரூர்.

கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.

குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.
வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

இதுவா கூட்டாட்சி?

மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசின் தயாள குணத்துக்கு அளவே இல்லை. இந்த முறை ரூ.16,000 கோடி சிறப்பு நிதி அளிக்கவிருக்கிறது.
 குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு விவாதிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவைவிட்டுக் கிளம்பியபோது, அங்குள்ள பத்திரிகைகள் இதைப்பற்றித்தான் எழுதின. "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 தவணைகளில் வழங்கவுள்ள ரூ.16,000 கோடி குறித்தும் பேசுவார். இந்த சிறப்புநிதியை அமைச்சரவை விரைவில் அங்கீகரிக்கவுள்ளது' என்றுதான் மேற்குவங்கப் பத்திரிகைகள் எழுதின.
 சென்ற ஆண்டுதான் ரூ. 8,750 கோடியைப் பின்தங்கிய மண்டலங்களுக்கான சிறப்பு நிதி என்ற பெயரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளித்தது. பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டங்களுக்காக ரூ. 2,000 கோடி கொடுத்தார்கள். இப்போது மூன்று ஆண்டுகளில் நான்கு தவணைகளில் ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.
 மேற்கு வங்கத்துக்கு எப்படிக் கரங்கள் சிவக்கச் சிவக்க அள்ளிக் கொடுக்கின்றீர்களோ அதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலமும் கேட்டிருக்கிறது. நிச்சயம் இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
 அவர்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதுகூடக் காரணமாக இருக்குமானால் இந்திய யூனியன், கூட்டாட்சித் தத்துவம் என்கிற வார்த்தைகளுக்கே அர்த்தமில்லாமல் அல்லவா இருக்கிறது.
 வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ஒரு பக்கம் இருக்கட்டும். "தானே' புயல் நிவாரணத்தில் மத்திய அரசு காட்டிய அக்கறை என்ன? தமிழகத்தில் "தானே' புயல் தாக்கியபோது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து, வீடுகளை வீழ்த்திப் பெரும் நாசம் செய்தது. 2004-டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும், 2011 டிசம்பரில் "தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பும் பெருநாசமும் மிக அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.
 தமிழக அரசு ரூ. 5,000 கோடி சேத மதிப்பீடு செய்து, உடனடியாக மத்திய அரசிடம் நிவாரண நிதியுதவி கேட்டது. ஆனால், கிடைக்கவில்லை. ""தமிழக அரசு ரூ.850 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்த பின்னர், அதேநாளின் பிற்பகலில் மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரண நிதியை அறிவித்தது. ஒருவேளை வெட்கப்பட்டு அறிவிக்க நேர்ந்ததோ தெரியாது'' என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் நிலைமைதான் இருந்தது.
 மேற்கு வங்கத்துக்கு மட்டும் அதிமுக்கியத்துவம் கொடுத்து திட்டக் கமிஷனில் அதிக நிதி ஒதுக்குவதும், சிறப்பு நிதியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அளிப்பதும், மேற்கு வங்கம் பெற்றுள்ள கடன்தொகைக்கு வட்டி செலுத்தாமல் இருக்க அனுமதிப்பதும் என எத்தனை எத்தனை சலுகைகள்!
 நியாயமான ரயில் பயணக் கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளே அமைச்சரை மாற்றினார் மம்தா. மத்திய அரசு சம்மதித்தது. இப்போது எல்லோருடைய எதிர்ப்புக்கும் இடையில் ரயில்வே சரக்குக் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளார் புதிய ரயில்வே அமைச்சர். மத்திய அரசு இதற்கும் சம்மதிக்கிறது.
 தமிழகம் மட்டுமல்ல, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அவர்களுக்கும் கேட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. மேற்கு வங்க மாநிலத்துக்குக் காட்டப்படும் மிகையான சலுகைகள் திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கம் என்பதால் மட்டுமல்ல. தங்கள் ஆதரவில்தான் மத்திய அரசே ஆட்சியில் இருக்கிறது என்பதைத் துணிந்து உணர்த்தித் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதாலும்கூட!
 இதேபோலக் கேட்கும் துணிவு மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிக்கும் இருந்திருக்குமேயானால், தமிழினப் படுகொலையே நேர்ந்திருக்காது என்பதை நாம் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
 இத்தகைய பாரபட்சமான நிலைமைகளைக் கடந்து, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக பிகார் (13.1%) உள்ளது. தென்னிந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் (9.39%) திகழ்கிறது. ஒருவேளை, "தானே' புயல், மின்பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் இல்லாதிருந்தால், பிகாரைப்போல மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) பிகார் மாநிலத்தை விஞ்சியதாக தமிழகம் இருந்திருக்கக்கூடும்.
 மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும்கூட, தமிழகத்தை ஜெயலலிதா ஆளும் மாநிலமாகப் பார்க்கின்ற போக்குதான் இருக்கிறதே தவிர, தமிழர் வாழும் மாநிலமாகப் பார்க்கவில்லை என்பதால்தான் மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பதா, அல்லது கூட்டணியில் இருக்கும் மம்தா விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதைப்போல கூட்டணியில் இருக்கும் தமிழகக் கட்சியின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பதா?
 அடுத்த பொதுத்தேர்தலில் யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்தான் இருப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சி தமிழர் வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படும். இந்த உணர்வு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கும் இருந்தால் மட்டுமே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!



ஏமாற்றப்படுகிறோம்

பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்த்து ரசிக்கும் விளையாட்டு என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி ஆங்கில நாடக ஆசிரியரும், சிந்தனையாளருமான பெர்னாட்ஷா கூறியது சரியோ, தவறோ. ஆனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களை முட்டாள்களாக்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசியல்வாதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கும்கூட. ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டிகளால் அந்த விளையாட்டுக்கோ அல்லது இந்திய அரசுக்கோ என்ன பயன் என்கிற கேள்வி கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு எரிச்சலைக் கொடுக்கின்றது. கொடுக்காதா பின்னே? மக்களின் முட்டாள்தனத்தில் கோடிக்கணக்கில் லாபம் கொழிக்கும்போது அதை விமர்சித்தால் பயனாளிகளுக்குக் கோபமும் எரிச்சலும் வரத்தானே செய்யும்?

ஐபிஎல் விளையாட்டில் கறுப்புப் பணம் இறக்கப்பட்டு வெள்ளைப்பணமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தந்திருக்கும் விசித்திரமான பதில்: இது தொடர்பாக வருவாய்த்துறை செயலருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். அதற்குப் பதில் கிடைத்தவுடன் இதுபற்றி விவாதிப்போம்.

வருவாய்த் துறை செயலர் தில்லியில்தானே இருக்கிறார்? ஏதோ சுவிட்சர்லாந்து அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதைப்போல அமைச்சர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாமும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல அதைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கின. தொடங்கிய ஆண்டு முதல் தொடர்ந்து பணத்தை அள்ளியெடுக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு இந்த ஆட்டங்களின் மூலம் 102 மில்லியன் டாலர் கிடைத்தது. ஆண்டுதோறும் 20 மில்லியன் டாலர் அதிகரித்துக் கொண்டே வந்தது. 2011 ஆம் ஆண்டில் (4-வது பருவம்) 160 மில்லியன் டாலர்கள் ( சுமார் ரூ.900 கோடி)கிடைத்தது. ஆனால், 2012 இல் இதுவரை 159 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக சலித்துக் கொள்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,077 கோடி அளவுக்கு அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாக ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு இதுவரை 19 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இதுகுறித்து அரசின் எந்தத் துறையும், வருமானவரித் துறை உள்பட, நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்குக் காரணம், பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் தலைவராக இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், சி.பி.ஜோஷி, பரூக் அப்துல்லா ஆகியோர் பிசிசிஐ உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோதாதென்று, ஐபிஎல் உரிமையாளர்களாகப் பெருந்தொழிலதிபர்கள், நடிகர் - நடிகைகள் வேறு. இவர்களில் பலர் பங்குதாரர்கள் என்றும், பிநாமிகள் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், இந்த நோட்டீஸ்களுக்கு என்ன அர்த்தம்? வெறும் கண்துடைப்பு என்பதைத் தவிர!

அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் விளையாட்டில் கரம் கோத்துச் செயல்படுகின்றனர். பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லியும், ரவிசங்கர் பிரசாதும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு பிரசாதுடன் இணைந்து செயல்படுவதற்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமல்ல. ஐபிஎல்லில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம். பணம் வரும்போது, பாஜக தீண்டத்தக்கதாகி விடுகிறது லாலு பிரசாதுக்கு. லாலு பிரசாதின் லஞ்ச ஊழல் இரண்டாம் பட்சமாகிவிடுகிறது பாஜகவினருக்கு!

இந்த விளையாட்டின் ஒளிபரப்பு உரிமை மற்றும் இதில் இடம் பெறும் விளம்பர நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களே. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை இவர்கள் மிகச் சரியாக வணிகமுறைப்படி பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யவும், வரிகள் இல்லாமல் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவி செய்யவும்தான் ஐபிஎல் விளையாட்டு உருவாக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது அமைச்சராக இருந்த சசி தரூர் விவகாரத்தில்தான் ஐபிஎல் போட்டிகளில் ஊழல் இருப்பதும், அரசியல் செல்வாக்கு பயன்படுவதும் வெட்டவெளிச்சமானது. இந்த விவகாரத்தில் சிக்குண்ட சசி தரூர் அமைச்சர் பதவியை இழந்தார். ஐபிஎல் தலைவராக இருந்த லலித் மோடி பல்வேறு வழக்குகளில் சிக்கி, இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில் இருக்கிறார். முறைகேடுகள் நடக்கின்றன என்று அம்பலமான போதிலும்கூட இவர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விலை கோரப்படுகிறார்கள். இந்தியாவில் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், விளையாட்டரங்கப் பார்வையாளர்களையும் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களும் சலிப்பைப் போக்கிக்கொள்ள அழகிகளின் களிநடனம் (சியர் கேர்ள்ஸ்) வேறு.

ஒலிம்பிக் உள்ளிட்ட ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் "ஊக்கமருந்து' பயன்படுத்தினால் வீரர்கள் தடை செய்யப்படுகிறார்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் வீரர்கள் ஊக்க மருந்துக்காகச் சோதிக்கப்படுவதில்லையே, ஏன்? ஒருவர்கூட இந்தக் கேள்வியை எழுப்பத் தயாராக இல்லையே என்பதுதான் நமது ஆதங்கம்.

விளையாட்டின் தார்மிகம், இந்தியக் கலாசாரம், அரசுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் அனைத்தையும் "கிளீன் போல்டு' செய்துகொண்டிருக்கிறது ஐபிஎல். நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாமல் நாம் ஐபிஎல் போட்டிகளை ரசித்து வேடிக்கை பார்த்து நமது நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்

சச்சின் 100 சல்யூட் 100

1.சச்சினுடைய அப்பாவுக்கு எழுபதுகளில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் (எஸ்.டி.பர்மன்!) என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தன் பிள்ளைக்கு சச்சின் என பெயரிட்டார்.

2.அதிவேக கார்கள் மீது அளவிளாத ஆர்வம் கொண்டவர். அதிகாலை நான்கு மணிக்கு மும்பையின் சாலைகளில் தன்னதனியாக கார் ஓட்டிக்கொண்டிருப்பாராம்.
3.சச்சின் பள்ளியில் படிக்கும்போது சுனில் கவாஸ்கர் கால்களுக்கான பேட்கள் ஒன்றை பரிசாக கொடுத்தார். சச்சின் 1989ல் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த பேட்களை அணிந்துகொண்டுதான் களம் இறங்கினார்.
4.சிறுவயதில் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கென்ரோவின் தீவிர விசிறியாக இருந்தார் சச்சின். மெக்கென்ரோவைப்போலவே தானும் குடுமி வைத்துக்கொண்டு சுற்றுவாராம். அதனாலேயே அவருடைய நண்பர்கள் அவரை மேக் என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.
5.டெஸ்ட் போட்டிகளில் தன்னை அவுட் செய்கிற ஒவ்வொரு பந்துவீச்சாளரின் பெயரையும் அவர் எப்படி தன்னை அவுட் செய்தார் என்பதையும் மறக்கவே மாட்டார். தூங்கும்போது எழுப்பிக்கேட்டாலும் டான் என்று சொல்லிவிடுவாராம்.
6.பள்ளி அணிக்காக ஆடும்போது ஒரு ரப்பர் பந்தை தண்ணீரில் நனைத்து அதை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பந்துவீச சொல்லி பயிற்சி எடுப்பாராம். பந்து பேட்டின் எந்த இடத்தில் படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை சரிசெய்து கொள்ள இந்த உத்தியாம்.
7.1987ஆம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான அரையிறுதிப்போட்டியில் பவுண்டரியில் நின்று பந்து பொறுக்கிப்போடும் பால் பாயாக பணியாற்றினார் சச்சின்..
8.ரன்அவுட் ஆகும் போது தேர்ட் அம்பயர் (டிவிஅம்பயர்) மூலமாக முதன் முதலாக அவுட் ஆனவர் நம்ம சச்சின்தான்!
9.1998ல் ஆஸ்திரேலியாவோடு இந்தியா விளையாடியது. அப்போது வார்னே ஒருபேட்டியில் ‘’அந்தாளு கனவுல கூட டார்ச்சர் குடுக்கறார்ப்பா.. நான்போடற எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்கறமாதிரி கனவு வந்து தூக்கத்தை கெடுக்குது’’ என கூறியிருந்தார்.
10.நிறைய உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர் சச்சின்!
11.சச்சினுடைய முதல் பேட்டினை பரிசளித்தவர் அவருடைய அக்கா! காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர் அங்கிருந்த வாங்கிவந்த பேட்டு உடையும் வரை உபயோகித்தாராம் சச்சின்.
12.1983 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி. அதன் நான்காவது டெஸ்ட்போட்டிதான் முதன்முதலாக சிறுவன் சச்சின் மைதானத்தில் பார்த்த நிஜ கிரிக்கெட்! அவர் மைதானத்திற்கு சென்ற நாளில் விவியன் ரிசர்ட்ஸ் செஞ்சுரி அடித்தார்.
13.சச்சின் குட்டிப்பையனாக இருந்தபோது குறும்புத்தனம் தாங்கமுடியாதாம். மாங்காய் பறிக்கப்போய் தவறிவிழுந்தவருக்கு தண்டனையாக கிரிக்கெட் கோச்சிங் பயிற்சியில் சேர்த்துவிட்டார் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர். அதுதான் சச்சினின் வாழ்க்கையையே மாற்றியது.
14.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் சர்.டான் பிராட்மேனுக்கு, அடுத்த இடம் நம்ம சச்சினுக்குத்தான்!
15.விஸ்டன் நிறுவனம் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த ஒருநாள் போட்டி வீரர்கள் பட்டியலில் முதலிடம் விவியன் ரிசர்ட்ஸ், இரண்டாமிடம் நம்மாளு!
16.பள்ளிக்காலத்திலேயே சச்சின் மும்பையில் இருந்த பதிமூன்று அணிகளுக்காக விளையாடினார்..
17.17 வயதிற்குட்பட்டோருக்கான ஹாரிஷ் ஷீல்ட் என்னும் உள்ளூர் போட்டியில்தான் சச்சின் தன் முதல் கிரிக்கெட் சதத்தினை அடித்தார்!
18.மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழ் சச்சினின் முதல் பேட்டியை பிரசுரித்தது. அப்போது அவருக்கு வயது 12! பேட்டியின் பல கேள்விகளுக்கும் பதில் கொடுத்தவர் அவருடைய அண்ணன் அஜித் தெண்டுல்கர்.
19.சச்சினும் காம்ப்ளியும் பள்ளி அணிக்காக ஆடி இருவருமாக சேர்ந்து எடுத்த 664 ரன்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
20.1988ல் குஜராத் அணிக்கு எதிராக தன் முதல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார் சச்சின். தன் முதல் போட்டியிலேயே சதம் அடித்து இளம்வயதில் முதல் போட்டியில் சமடித்த வீரர் என்கிற சாதனையை செய்தார்.
21.சர்.டான் பிராட்மேன் தன்னுடைய ‘’உலக டெஸ்ட் அணிக்கான பட்டியலில் சேர்த்துக்கொண்ட ஒரே இந்தியர் சச்சின் மட்டும்தான்.
22.தனது பத்தொன்பதாவது வயதில் 1992ஆம் ஆண்டு தன் முதல் உலக கோப்பை போட்டிகளில் விளையாடினார் சச்சின்.
23.சச்சினுடைய மனைவி பெயர் அஞ்சலி, சச்சின் தம்பதிகளுக்கு ஒரு மகள் ‘’சாரா’’,ஒருமகன் ‘அர்ஜூன்’. அப்பாவோடு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகிறார் ஜூனியர் சச்சின்.
24.சச்சின் தனது முதல் எழுபது ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அல்லது ஆறாவது பேட்ஸ்மேனாகவே விளையாடினார்!
25.130ஆண்டுகால பாரம்பரியமிக்க இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்சயர் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் சச்சின்தான். வெளிநாட்டு அணிக்காக ஆடுவதா வேண்டாமா என கவாஸ்கரிடம் சென்று அனுமதிவாங்கிவிட்டுத்தான் விளையாடினார் சச்சின்.
26.1995ல் மும்பையில் நடந்ததது சச்சினின் திருமணம். அவருடைய மனைவி அஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அஞ்சலி ஆங்கிலோ இந்தியப்பெண். அவருக்கு சச்சினை விட ஐந்து வயது அதிகம்.
27.தன் மனைவி அஞ்சலியை திருமணத்திற்கு முன் தீவிரமாக காதலித்தார் சச்சின். அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்டதால் ஒட்டுதாடி தொப்பி கண்ணாடி சகிதம் காதலியோடு பார்க்,பீச்,தியேட்டர்களில் சுற்றுவாராம்!
28.சச்சினின் குழந்தை முகம்தான் குழந்தைகள் டாக்டரான அஞ்சலியை கவர்ந்திருக்க வேண்டும் என கவாஸ்கர் ஒருபேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.
29.இந்தியாவின் முக்கிய உள்ளூர் போட்டிகளான ரஞ்சிக்கோப்பை, துலீப் டிராபி, இரானி டிராபி என மூன்று போட்டிகளிலும் தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான்.
30.சச்சின் உலக கிரிக்கெட்டின் வரலாற்றில் தன் முதல் சதத்தினை பதிவு செய்த போது அவருக்கு வயது பதினேழுதான்! இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ஃபோர்ட் மைதானத்தில் 1990ல் தொடங்கியது செஞ்சுரிவேட்டை.
31.சுதீர் குமார் கௌதம் சச்சின் தெண்டுல்கரின் நம்பர் ஒன் ரசிகர் என அழைக்கப்படுபவர். சச்சின் விளையாடுகிற எல்லா ஆட்டங்களில் கலந்துகொள்ளும் இவருக்கு சச்சினே தன் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளையும் கொடுத்துவிடுகிறார்.
32.சென்னையை சேர்ந்த 87வயது சரஸ்வதி என்கிற பாட்டிதான் சச்சினுடைய வயதில் மூத்த ரசிகர் என சொல்லப்படுகிறது. சச்சினை பற்றி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறார் இந்த சச்சின் பாட்டி!
33.டுவிட்டர் இணையதளத்திலும் சச்சின் அவ்வப்போது ரசிகர்களோடு உரையாடுகிறார். அவருக்கு டுவிட்டரில் 23 லட்சம் ரசிகர்கள்! https://twitter.com/sachin_rt
34.விளம்பரங்களில் நடிப்பதிலும் செஞ்சுரி அடித்து சாதனை படைத்தவர் சச்சின். நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்களுக்கான விளம்பரங்களில் நடித்திருக்கிறார் ச்ச்சின்.
35.சச்சினின் செல்லப்பெயர் டென்ட்லியா! அதுபோக லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் சாம்பியன், கிரிக்கெட்டின் கடவுள் என்றெல்லாம் கூட அவருடைய ரசிகர்கள் அழைக்கின்றனர்.
36.சச்சின் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தின் பெயர் ஸ்டம்ப்ட்!
37.திகார் ஜெயிலில் இருக்கிற இரண்டு வார்டுகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. ஒன்று வினோத் காம்ப்ளியின் பெயரில் இன்னொன்று சச்சினின் பெயரில்!
38.இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பதவி வழங்கிய ஒரே விமான பயிற்சி பெறாத ஆள் சச்சின் மட்டும்தான்.
39.ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிறகு இந்தியாவில் விளையாட்டுக்காக தரப்படுகிற எல்லா விருதுகளையும் வென்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.
40.சச்சின்தான் உலகிலேயே அதிக எடைகொண்ட கிரிக்கெட் பேட்டினை பயன்படுத்துகிறார். அவருடைய பேட்டின் எடை 1.42 கிலோ! சாதாரண பேட்டின் எடை ஒருகிலோதான்!
41.சச்சின் பந்துவீசுவதற்கும் பேட்டிங் செய்வதற்கும் வலது கையையே பயன்படுத்தினாலும் அவர் எழுதுவதும்,சாப்பிடுவதும் இடதுகையில்தான்!
42.பத்துவயதில் வேகப்பந்துவீச்சாளர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை எம்ஆர்எஃப் பேஸ் பவுண்டேஷனில் செலக்சனுக்காக வந்து டென்னிஸ் லிலியின் அறிவுரையால் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
43.சச்சினுக்கு காயமெல்லாம் கமர்கட் மாதிரி! சின்ன வயதில் அவருடைய உடம்பில் பேன்ட் எய்ட் எப்போதுமே இடம்பிடித்திருக்குமாம். அவர் முதன்முதலாக நடித்த விளம்பரமும் பேன்ட் எய்ட்தான்!
44.ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுபெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின்தான்.
45.டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் முத்தையா முரளீதரன்தான் சச்சினை அதிக முறை அவுட்டாக்கிய பெருமையை பெற்றவர். (எட்டு முறை)
46.ஒருநாள் போட்டிகளில் சச்சினை அதிகமுறை அவுட்டாக்கியவர் ஆஸ்திரேலியாவின் அதிவேக பந்துவீச்சாளர் பிரட்லீ (9முறை)
47.ஏகப்பட்ட மேட்ச்கள் ஆடியிருந்தாலும் சச்சின் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக!
48.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே இரட்டைசதமடித்தவர் சச்சின்! ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் ஆளும் அவர்தான்.
49.ஒருநாள் போட்டிகளில் ஆறு முறை 200க்கு அதிகமான பார்ட்னர்ஷிப்களில் பங்குபெற்றுள்ளார். அவரோடு ஆடியவர்கள் இரண்டே பேர் ஒருவர் கங்கூலி இன்னொருவர் டிராவிட்.
50.மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியாவோடு விளையாடும்போது சச்சினுக்கு ஆக்ரோஷாம் அதிகமாகிவிடுகிறது. அவர் அடித்த நூறு நூறுகளில் இருபது ஆஸியுடன்தான்.
51.கிரிக்கெட் புத்தகத்தின் எல்லாவகை ஷாட்டுகளும் விளையாடினாலும் சச்சினுக்கு பிடித்தது ஸ்ட்ரைட் டிரைவ்தானாம்! (எங்களுக்கும்தான்!)
52.சச்சினுக்கு பிடித்த கிரிக்கெட் மைதானம் மும்பை வான்கடேவும் ஆஸ்திரேலியாவின் சிட்னி எஸ்சிஜி யும்தான்.
53.கடல் உணவுகளை விரும்பி உண்பாராம் சச்சின்! அதிலும் நண்டு மற்றும் மீன் என்றால் ஒரு பிடிபிடிப்பது சச்சினின் வழக்கம்.
54.சச்சினிடம் ராசியான பேட் ஒன்று இருந்தது. அதை வைத்து 14நான்கு செஞ்சுரிகள் அடித்திருக்கிறார். அது உடைந்துபோக வல்லுனர்களை வைத்து சரிசெய்து கடந்த உலக கோப்பை போட்டிகள் வரைக்குமே அதை உபயோகித்தாராம்!
55.சச்சின் கிரிக்கெட்டுக்கு வெளியே இரண்டு உணவகங்களை மும்பையிலும் பெங்களூருவிலும் நடத்தி வருகிறார்.
56.சச்சின் தன் பள்ளிப்படிப்பை தொடங்கியது நியூ இங்கிலான்ட் ஸ்கூலில்தான் என்றாலும் கிரிக்கெட்டுக்காக அவருடைய பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் உத்தரவின்படி சரதாஸ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தார்.
57.உலகம் முழுக்க இருக்கிற 90 கிரிக்கெட் மைதானங்களில் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார் சச்சின்!
58.சச்சின் கிரவுண்டில் விளையாடும் போது எதையும் சாப்பிடவோ குடிக்கவோ மாட்டார் அவருடைய மனைவி அஞ்சலி! திருமணமானதிலிருந்து இதை விரதமாகவே கடைபிடிக்கிறார்.
59.நிறைய சென்டிமென்ட் பார்ப்பாராம் சச்சின், எப்போதும் தன்னுடைய இடதுகால் பேடையே முதலில் அணிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
60.மேடம் டுசாட்ஸ் என்கிற பிரபலமான மெழுகு சிலை மியூசியத்தில் அவரைப்போலவே ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின்தான்!
61.கங்கூலியோடு இணைந்து ஆறாயிரம் ரன்களை ஒப்பனிங் இறங்கி குவித்தது கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்திடாத சாதனையாக கருதப்படுகிறது!
62.சச்சினை சூப்பர் ஹீரோவாக்கி மாஸ்டர் பிளாஸ்டர் என்கிற பாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் ஒன்றை வெளியிட்டது விர்ஜின் காமிக்ஸ் என்னும் நிறுவனம்.
63.சச்சின் சிறந்தபேட்ஸ்மேனாக இருந்தாலும் இக்கட்டான சூழல்களில் இந்தியாவுக்காக பந்துவீசி அசத்தியுள்ளார். டெஸ்டிலும் ஒருநாள்போட்டிகளிலும் 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்!
64.பத்தாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தபோது மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சச்சினுக்கு பத்துகிலோ எடையுள்ள வெள்ளி பேட் ஒன்றை பரிசாக கொடுத்தது!
65.டைம் இதழ் சச்சினை ஆசியாவின் ஹீரோ என புகழ்ந்து எழுதியது!
66.உலக கோப்பைப்போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்கிற சாதனை செய்துள்ளவர் சச்சின்.
67.சச்சினுக்கும் சென்னைக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இந்திய மண்ணில் சச்சின் அடித்த முதல் செஞ்சுரி சென்னை சேப்பாக்கத்தில்தான்! (இங்கிலாந்துக்கு எதிராக 165 ரன்கள்!)
68.1995ல் சச்சின் ஐந்தாண்டுக்கான விளம்பரம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை என்ன தெரியுமா? 30கோடி!
69.டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிற எல்லா அணிகளோடும் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்திருக்கிறார்.
70.2006ல் விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். ஒப்பந்த தொகை 180கோடி! இதன்மூலம் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிற விளையாட்டு வீரராக உயர்ந்தார்,
71.சச்சின் மூன்று முறை 99 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கிறார். 90-99 ரன்களுக்குள் அவுட்டானது 28 முறை!
72.2008ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சச்சினுக்கு சர் பட்டம் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் வழங்கப்படவில்லை.
73.இதுவரை ஒருநாள் போட்டிகளில் 56முறை ஆட்டநாயகன் விருதுபெற்றுள்ள சச்சின் இந்திய அணி தோற்றபோதும் 5 முறை
இவ்விருதினை பெற்றுள்ளார்!
74.மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர் சச்சின். புட்டபர்த்தி சத்யசாயிபாபா கோவிலுக்கு அடிக்கடி போய்வருகிறவர். மேட்ச் இல்லாத காலங்களில் சச்சினை இந்தியாவின் பிரபல கோவில்களில் அடிக்கடி பார்க்கலாம்.
75.அண்மையில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி கேட்டு டுவிட்டர் இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்தார் சச்சின். குவிந்தது ஒருகோடி!
76.சின்ன பையன் வேணாம்ப்பா என பலர் தடுத்தும் சச்சினை 1989ல் இந்திய அணிக்காக தேர்ந்தெடுத்தவர் ராஜ் சிங் துங்கர்பூர்!
77.கிரிக்கெட் மதமாக இருந்தால் சச்சின்தான் கடவுள் என்கிற வாக்கியம் கிரிக்கெட் உலகில் மிகப்பிரபலம். ஒருமுறை ஆஸி அணி முன்னாள் வீரர் மேத் ஹெய்டன் ஒருபேட்டியில் நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் விளையாடுகிறார் என்றார்
78.திரைப்படங்கள் பார்ப்பது சச்சினுக்கு பிடித்த பொழுதுபோக்கு. அவருக்கு பிடித்த நடிகர் அமிதாப் பச்சன்! படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது விக்குவைத்துக்கொண்டு மாறுவேடத்தில் செல்வாராம்.
79.சச்சின் தன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது பாகிஸ்தானுடன் என்பது தெரியும்.. அந்த மேட்ச்சில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தவர் யார் தெரியுமா? நம்மூர் ஸ்ரீகாந்த்!
80.எந்த நாட்டிற்கு விளையாட சென்றாலும் அதற்கு முன் தன்னுடைய குரு ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசிபெற்றுவிட்டுத்தான் செல்வார்.
81.மல்யுத்தம் என்றால் சச்சினுக்கு உயிர். இந்திய அணியில் புதிதாக நுழைந்த போது திலிப் வெங்சர்க்கார்,அங்கோலா,மனோஜ் பிராபகரோடெல்லாம் ஜாலியாக மல்யுத்தம் போட்டு ஜெயிப்பாராம். அவருடைய கைகள் மிகவும் வலுவானவை என்று ஒருபேட்டியில் கூறுகிறார் திலீப் வெங்சர்க்கார்.
82.சச்சின் பேட்டிங்கில் மட்டுமல்ல சமையலிலும் கில்லாடி, வீட்டில் இருக்கும்போது கத்திரிக்காய் ரோட்டி , சப்ஜியெல்லாம் செய்து அசத்துவாராம்.
83.மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள எப்போதும் சச்சின் காதுகளில் இசை ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாப் இசையும் கிசோர் குமார் பாடல்கள் என்றாலும் உயிர்.
84.சச்சின் தன்னால் விளையாடவே முடியாத ஒரு பந்துவீச்சாளர் என குறிப்பிடுவது மறைந்த தென்னாப்பிரிக்க அணியின் ஹன்சி குரோன்யேவையே!
85.சச்சினுக்கு இரண்டு முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இரண்டுமுறையும் இந்தியா அதிக போட்டிகளில் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தானாகவே தன் கேப்டன் பதவியை துறந்தார் சச்சின்.
86.டான் பிராட்மேனின் 29டெஸ்ட் சத சாதனையை சச்சின் முறியடித்தபோது ஃபார்முலா ஒன் ஃபெராரி நிறுவனம் ரேஸ் சாம்பியன் மைக்கேல் சூமேக்கர் கையால் அதிநவீன கார் ஒன்றை பரிசளித்தது.
87.1999ல் சச்சினின் உருவம் பொறித்த 24 காரட் தங்கநாணயங்களை இந்தியாவின் கார்ப்பரேஷன் பேங்க் வெளியிட்டது
88.சச்சினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் பள்ளி அணிக்காக கிரிக்கெட் ஆடிவருகிறார். அப்பாவை போல இல்லாமல் இவர் ஒரு
ஆல்ரவுண்டர். இடது கை ஆட்டக்காரர்!
89.சச்சினின் ரத்தத்துளியில் அச்சிடப்பட்ட (ஒருதுளிதான்) அவருடைய வாழ்க்கை வரலாற்றுப்புத்தகம் ஒன்றை இங்கிலாந்து பதிப்பகம் வெளியிட்டது. அதில் சச்சினின் டிஎன்ஏ வடிவமும் வெளியிடப்பட்டது. விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி ஒரு புத்தகத்தின் விலை முப்பது லட்சம் ரூபாய்! இந்தப்பணம் இந்தியாவில் ஏழைகளுக்கான பள்ளி ஒன்றை கட்ட செலவிடப்பட்டது.
90.சச்சின் வசித்த காலனியின் வாட்ச்மேன் பையன் ரமேஷ். சச்சினின் இளம்வயது தோழன். இருவரும்தான் எப்போதும் கிரிக்கெட் ஆடுவது வழக்கம். இப்போது அவர்தான் சச்சினின் பர்சனல் செக்ரட்டரியாக இருக்கிறார். இப்போதும் நண்பர்களாக!
91.சொந்தவீட்டுக்கனவு அனைவருக்கும் உண்டு. மும்பையிலிருக்கும் பாந்த்ராவில் அண்மையில் சச்சின் தன் 5 அடுக்குகள் கொண்ட 40கோடியில் கட்டப்பட்ட புதியவீட்டில் குடியேறினார்.
92.சச்சின் விளையாடுவதை கிரவுண்டிற்கு சென்றோ டிவியிலோ லைவ்வாக பார்க்க மாட்டாராம் அவருடைய அண்ணன் அஜித். ரெகார்ட் செய்துதான் பார்ப்பது வழக்கமாம்! அவர் பார்த்த ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை என இப்படி ஒரு நம்பிக்கை!
93.மும்பையில் மேட்ச் நடந்தால் போட்டிக்கு முன்னால் தன் வீட்டுக்கு சென்று பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்ற பின்பே ஆட்டத்திற்கு கிளம்புவார் சச்சின்.
94.டெல்லியின் முக்கிய பகுதியான சாந்த்னி சவ்க்கில் ஒரு சாலைக்கு சச்சின் பெயர் சூட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
95.கொலவெறி பாடல் ஹிட்டான கையோடு நடிகர் தனுஷை அழைத்து அதே பாணியில் சச்சினுக்கும் ஒரு பாட்டு போட்டு ஹிட்டடித்தது பூஸ்ட் நிறுவனம்! அது சச்சின் ஆன்த்தம் (கீதம்) என அழைக்கப்பட்டது.
96.2008ஆம் ஆண்டு பத்மவிபூசன் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் விருது தரப்படவில்லை.
97.ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் உலக அளவில் டாப்50 கிரிக்கெட் வீரர் பட்டியல் ஒன்றை உருவாக்கினார். அதில் சச்சினுக்கே முதலிடம்.
98.சச்சினுக்கு புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ கிடையாது. அதோடு சிகரட்,குடி மாதிரியான விளம்பரங்களிலும் நடிப்பதில்லை.
99.20 கோடிரூபாய் தருவதாக கூறிய ஒரு பீர் கம்பெனியின் ஆஃபரை வேண்டாம் என நிராகரித்தார் சச்சின். காரணம்.. என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.. அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என்றார்.
100.ஆண்டுதோறும் 200 குழந்தைகளின் கல்விக்கு அப்னாலயா என்னும் அமைப்பின் மூலமாக உதவி வருகிறார் சச்சின்.


(நன்றி - புதியதலைமுறை வார இதழ்)
Copied from :http://www.athishaonline.com/2012/04/100-100.html

பெண்ணின் பெருமை

பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.

பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.
பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தைதான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்தப் பெண்மணிக்கு, கருப்பை பாதிக்கப்பட்டுள்ளதால் இனி குழந்தைப் பேறுக்கே வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதற்காக ஜோதிடரை கட்டி வைத்து அடிக்க நினைத்தாலும் முடியாதபடி அனைவரும் சிறையில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வுக் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) உடல் முழுதும் காயங்களுடன் கொண்டுவரப்பட்ட குழந்தை பாலக், சிகிச்சை பலனின்றி இறந்தது. அந்தக் குழந்தையைக் கொண்டுவந்த வளர்இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் தாய் உள்பட சிலர் பல மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, பலரால் சீரழிக்கப்பட்ட அவலம் தெரியவந்தது. இப்போது 13 பேரை கைது செய்திருக்கிறது புது தில்லி போலீஸ்.
சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில், இந்தப் பெண் குழந்தை என் குழந்தையே இல்லை. செவிலியர்கள் மாற்றிவிட்டார்கள் என்று மருத்துவமனையில் தகராறு செய்த ஒரு தந்தையை சமாதானப்படுத்தி உட்கார வைத்து, குழந்தையின் டிஎன்ஏ சோதனை மூலம் அது அவருடைய குழந்தைதான் என்று நிரூபித்துக் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.
பிளஸ்-2 தேர்விலும், கல்லூரி பட்டமளிப்பு விழாக்களிலும் பரிசும் பாராட்டும் அள்ளிக்கொண்டு வருவது பெண் குழந்தைகள்தான். வயதான பெற்றோர்களை, மகன்களைவிடப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வது யார் என்று கணக்கெடுத்தால், அதிலும் பெண்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். வயதான அப்பா, அம்மாக்கள் தங்களோடு வசிக்காவிட்டாலும், அவர்களுக்கு மகன்கள் கொடுக்காத அளவுக்கு கணிசமான பாக்கெட்மணி கொடுப்பதும் மகள்களே!
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்தாயிற்று. குடியரசுத் தலைவர், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் என அரசியலில் ஆணுக்கு இணையாகச் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் என்று எடுத்துக்கொண்டாலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நிறைய பேர் பெண்கள். இருந்தும்கூட, பெண் குழந்தை என்றால் குடும்பத்துக்குச் சுமை என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை. பெண்களின் இந்தச் சாதனைகளை நம் வீட்டுக் குழந்தைகள் செய்யாது என்கின்ற அவநம்பிக்கைதான் இந்த பிற்போக்குத்தனத்துக்குக் காரணம்.
பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பிரச்னை தமிழகத்தில் இன்று பெருமளவு நீங்கிவிட்டது எனலாம். சாதனைக்குப் பாலினம் தடையல்ல எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பெண்சிசுக் கொலைகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்பதற்கு தமிழகமே சாட்சி. இப்போது தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்ற பேச்சே இல்லை. அரசு அமைத்த தொட்டில் குழந்தை திட்டத்துக்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இதற்காகத் தமிழக அரசை மனமாரப் பாராட்டலாம்.
பெண்சிசுக் கொலை போய், இப்போது தமிழகத்தில் இளவயது திருமணம் மிகப் பெரும் பிரச்னையாக வடிவெடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பூப்பெய்தியவுடன் பெண்ணுக்கு மணம் முடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பல திருமணங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றாலும் எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.
இதற்குக் காரணம், பெண்கள் பிளஸ்-2 படிக்கும்போதே காதல் பிரச்னையில்-உபயம் தமிழ்ச்சினிமா, டிவி சீரியல்கள்- சிக்கிக்கொள்கிறார்கள். ஆகவே, "கல்யாணத்தை முடி, கணவன் விரும்பினால் தொடர்ந்து படி' என்று இளவயது திருமணங்களை நடத்தத் துணிகிறார்கள் பெற்றோர். இப்பிரச்னையில் விழிப்புணர்வு தேவைப்படுவது பெற்றோருக்கு அல்ல. இளவயது பெண்களுக்குத்தான்!
காதலிப்பதும், காதலித்தவர்களையே திருமணம் செய்துகொள்வதும் தவறில்லை. ஆனால், முறையற்ற காதலும், ஏதோ கவர்ச்சியால் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்று கைக்குழந்தையுடன் குடும்ப நீதிமன்றப் படிகளில் விவாகரத்துக்கு ஏறி இறங்குவதும் எவ்வளவு முட்டாள்தனம்.
""முதலில் கல்வியை நேசி, காதலைப் பிறகு யோசி'' என்று இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உருவாகியுள்ளது

ஏன் இந்தத் தற்கொலை வெறி ?

“காதல் வந்தால் சொல்லியனுப்பு…. உயிரோடிருந்தால் வருகிறேன்”, என்று ஒரு பிரபலமான சினிமாப் பாடலின் வரிகள் சொல்கின்றன. காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டியிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்சினையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படி பிரச்சினையாகிறது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
என் காதல் அனுபவங்களைப் பற்றிப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப்போகிறது – ” சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சிச் சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ்,காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி”
படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள், உயர் படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
காதலில் ‘தோல்வி’ என்பது என்ன ?
ஒருதலைக் காதலை தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை செய்கிறார்கள். இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமணமுயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளவேண்டுமா? அல்லது எப்படியாவது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்யவேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?
காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனதின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.
காதலில் இறுதி வெற்றி என்பது என்ன ?
அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. “காதலின் இயல்பான முற்றுப் புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்த காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாக்வே இருக்கமுடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல்.இந்த இனிமையைத்தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்.”
ஆனால் நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தனக்கான , தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையே இதற்குக் காரணம். காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து தன் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத்தப் படுகிறது. அப்படி உடமையாக்கிக் கொள்ளமுடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.
தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவனை எப்படி காதலன் என்று சொல்ல முடியும் ? அதில் எங்கே இருக்கிறது காதல் ? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்டமுடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனதில் ஏது காதல் ? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது எப்படி காதலாகும் ? அது வெறும் பிளாக்மெயில்தானே ?
ஆனால் காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உடல்முதிர்ச்சியை மட்டும் பயன்படுத்துவது காமம். அத்துடன் மனமுதிர்ச்சியும் இணைந்தால்தான் காதல்.
இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெய்தும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.
ஆனால் மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப் பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத் தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனதின் தேவைகள் என்ன என்று யோசித்து தேர்ந்தெடுத்து தொகுத்து வாழ்க்கையின் குறிக் கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.
ஆனால் நம் சினிமாகாரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள். அறியாத வயசு, புரியாத மனசு., ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங்கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. இதன் நீட்சியாக, என்ன பொறுக்கித்தனம் செய்தாவது ஒரு பெண்ணை தன்னைக் காதலிக்க வைப்பது காதல் தர்மம் என்று கதை பின்னப்படுகிறது.
அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்கு பதிலாக, ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும் ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்துகொண்டபோது அவன் ஒரு தலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். “நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் ?” என்று அந்த மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.
காதலை விடலைப்பருவத்திலிருந்து மழலைப் பருவத்துக்கு எடுத்துப் போய் கமர்ஷியலாக்கும் சினிமாவைப் பின்பற்றி விளம்பரக்காரர்களும் குழந்தைகளை பெரியவர்கள் போல நடக்கச் செய்யும் உத்திகளை கமர்ஷியல் விளம்பரங்களில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களை செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன. சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு டி.வி விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை. வணிக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப் பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான். இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள் ?
தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் விடலைப் பருவத்து பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனதையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.
அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக்கொண்டிருக்கிறது.
படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சை தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.
பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண் பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.
இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகிவிடுவோம். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு தன்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களை சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபாய் லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

Source and Thanks : Gnani

முட்டாள்தனம்...

மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் "ஆளுகை'க்கு உள்பட்ட செம்புலப் பகுதியில் அரசுப் பணிக்காகச் செல்லும் அதிகாரிகள் கடத்தப்படும்போது அவர்களை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஏற்பதற்கும், வெளிநாட்டு அரசின் பிரதிநிதி என்கின்ற அடையாளம் இல்லாத சாதாரண சுற்றுலாப் பயணிக்காக, அதிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தும் அதை சட்டைசெய்யாமல் அங்கே சென்ற இரு வெளிநாட்டவரின் பொறுப்பின்மைக்காக, 27 கைதிகளை - இதில் 8 பேர் தீவிர மாவோயிஸ்டுகள் - விடுவிப்பது என்பது அரசின் நடவடிக்கைக்கு எத்தகைய குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பண்டமாற்று முறையில்கூட, ஒரு பொருளின் மதிப்புக்கேற்ற இன்னொரு பொருள்தான் விலையாகக் கொடுக்கப்படும். இந்த இத்தாலியர்கள் இருவரும் யார்? இவர்களது பின்னணிதான் என்ன? சுற்றுலாப் பயணிகள் போகத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பழங்குடியினருக்குச் சேவை செய்ய வந்தவர்களும் அல்ல! அப்படியானால், இவர்கள் இந்தக் கடத்தல் நாடகத்துக்குத் துணை போவதற்காகவே உள்நோக்கத்துடன் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கலாமா? விடுதலை செய்யப்படவுள்ள 27 பேரைப் பிடிக்க இந்தியக் காவல்துறையும் ராணுவமும் சிந்திய ரத்தத்துக்கு விலை இந்த சாதாரண, வெட்டியாக வந்த வெளிநாட்டவர்களா?
பழங்குடியின மக்கள் காலாகாலமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த வனப்பகுதிகளை அழித்து, அவர்களை அங்கிருந்து விரட்டி, கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் கொழிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தவறான கொள்கைகளை நமது மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நமது கருத்தும். சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நமது கனிமவளங்களும் கொள்ளைபோகும் போக்கை நாட்டுப்பற்றும், வருங்காலத்தில் அக்கறையும் உள்ள எவருமே ஏற்றுக் கொள்ள முடியாதுதான். இதெல்லாம் புரியாமல் இல்லை.
ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா போன்றவர்களையும் ஏன் மாவோயிஸ்டுகள் கடத்த வேண்டும்? நவரங்கபூரில் சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜகபந்து மஜ்ஜி என்பவரை அவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்? பழங்குடியினருக்கு ஆதரவாகத் தங்களைத் தவிர, யார் வந்தாலும் அவர்களைப் போட்டியாகக் கருதுவதும், அரசின் நல்ல நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துவிடப் பார்ப்பதும் ஏன்?
மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் ஆயுதக் கிடங்கு அண்மையில் ஒடிசாவின் தெற்கே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்துடன்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எங்கிருந்து, எப்படி, யாரால் வழங்கப்பட்டது என்கிற புதிருக்கு இன்றுவரை விடை காணப்படவில்லை. இந்த ஆயுதங்களைத் தயாரிக்க, விலைக்கு வாங்க மாவோயிஸ்டுகள் பல கோடி ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கேயிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது?
சீனா நிதியுதவி செய்யவில்லை என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சீனாவும் இவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதே அபத்தம் என்று கருதுவதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கிறார். இதற்கான பணத்தை நிச்சயமாக, மாவோயிஸ்டுகள் ஆளுகைக்கு உள்பட்ட, பழங்குடி மக்கள் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?
ஒன்று, இந்தியாவின் சான்றாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான ஏதோ ஓர் அன்னிய சக்தி மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கிறது அல்லது மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொழில்போட்டியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதாவது இதன் பின்னணியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மாவோயிஸ்டுகள் இந்த அளவுக்கு, ராணுவத்துக்கு இணையாக ஆயுதங்களை வாங்கவும் சேமித்து வைக்கவும் இயலாது.
பழங்குடியினரிடையே சால்வா ஜுடும் (மக்கள் காவல்படை) அமைத்த நடவடிக்கையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததால் அரசு அதனைக் கைவிட்டது. ஆனால், பழங்குடியினர் அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், அரசின் நலத்திட்டங்களைப் பெற முயன்றாலும் மாவோயிஸ்டுகளின் கட்டப்பஞ்சாயத்தில் கடும் தண்டனை கிடைக்கிறது என்கிறார்களே, அது ஏன்? பழங்குடியினருக்கு எந்தவித நன்மையும் செய்து தரப்படக் கூடாது என்று தடையாக நிற்பது என்ன நியாயம்? மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றுவதா இல்லை, இந்திய அரசின் மேலாண்மையை எதிர்த்து அரசுக்கு எதிரான போரை மறைமுகமாகத் தொடுப்பதா என்கிற சந்தேகத்தை மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.
எச்சரிக்கைகளை மீறி மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் நுழைந்த இத்தாலிய சுற்றுப்பயணிகளுக்காக இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து அரியணை ஏற்றியதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும், என் செய்ய?
 
Source "

ஊழலே ஆட்சியானால்...

இந்திய ராணுவத் தளவாடங்கள் கொள்முதலில் முறைகேடு என்பது 1948-ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 1948-ம் ஆண்டில், வழக்கமான நடைமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அப்போது இங்கிலாந்தில் இந்திய ஹை-கமிஷனராக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் இந்திய ராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கு ரூ. 80 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்தத் தொகைக்கு ஏற்ப ஜீப்புகள் பெறப்படவில்லை என்று அப்போது நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னை எழுப்பப்பட்டது.
இந்திரா காந்தி ஆட்சியில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கிய முறைகேடு, ராஜீவ் காந்தி அரசில் போஃபர்ஸ் ஊழல் பிரச்னை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கார்கில் போருக்காக ஷூக்கள் வாங்கியது மற்றும் மரணமடைந்த வீரர்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் என்று ராணுவத்தில் தொடர்ந்து ஏதாவது ஓர் ஊழல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
இப்போது, இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் ஒரு புகாரை எழுப்பியுள்ளார். தரம் குறைவான 600 வாகனங்களை வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக ஒரு பேட்டியில் அவர் கூறியதும், இதுகுறித்து ஏற்கெனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்குத் தெரிவித்தது மற்றும் பிரதமருக்கு அனுப்பிய கடிதம் ஆகியன ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் நாடாளுமன்றம் அல்லோலகல்லோலப்படுகிறது.
இத்தகைய தரம் குறைவான வாகனங்கள் ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் 7,000 உள்ளன என்றும், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைக்கான வசதிகள் இல்லாத நிறுவனத்தின் இந்த வாகனங்களுக்கு மிகமிக அதிக விலை தரப்பட்டுள்ளது என்றும் தளபதி வி.கே. சிங் கூறியிருக்கிறார். 600 வாகனங்களுக்கே ரூ. 14 கோடி லஞ்சம் தர முன்வந்தார்கள் என்றால், 7,000 வாகனங்களுக்கு நிச்சயம் பத்து மடங்கு அதிகமாக லஞ்சம் பேரமாகப் பேசப்பட்டிருக்கும். இதைப் பற்றிய விசாரணைக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்காதபோதிலும், அரசே முன்வந்து உத்தரவிட வேண்டும்.
ஆனால், தளபதி தம்மிடம் கூறியதை மக்களவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர் அந்தோனி, தவறுக்குத் தானே பொறுப்பு என்கிறார். அதே நேரத்தில் தளபதி எழுத்துமூலமாகப் புகார் தெரிவிக்காததால் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பது அவரது வாதம். அதிகாரியாக இருந்திருக்க வேண்டியவர் அமைச்சராக்கப்பட்டிருக்கும் அவலம், வேறென்ன?
2012-13-ம் ஆண்டில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்க இருக்கின்றோம். 197 ஹெலிகாப்டர்கள் வாங்கப் போகிறோம். இவற்றின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்நிலையில், இந்த விற்பனையில் எத்தகைய பேரம் முடிந்துள்ளது, நாம் பேசியிருக்கும் விலை சரியானதா, இல்லை நியாயமான விலையைக் காட்டிலும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகங்கள் இப்போது முன்னெப்போதையும்விட கூடுதலாக எழுகின்றன.
இந்திய விமானப் படைக்கு வாங்கப்படவுள்ள 126 ரஃபேல் போர் விமானங்களின் விலை ரூ. 70,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2012-13 பட்ஜெட்டில் குறைந்தபட்சம் ரூ. 10,000 கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. இதேபோன்று ஹெலிகாப்டர் கொள்முதலிலும் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. மீதித் தொகையை ஒவ்வோராண்டும் செலுத்தியாக வேண்டும்.
ஒரு பொருள் தரமானதாக இருந்தாலும், தரம் குறைவாக இருந்தாலும், லஞ்சம் கொடுத்து விற்பதுதான் சாத்தியம் என்ற நிலைமை வந்த பிறகு, எந்த நிறுவனமும் தனது உற்பத்திச் செலவு அல்லது லாபத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை. கொடுக்கப்படும் லஞ்சத்தை விற்பனை விலையில் ஏற்றி வைத்து விடுகிறார்கள். இந்திய அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவில்லை என்றால், கூடுதல் விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்தக் கூடுதல் விலை என்பது இந்திய மக்களின் பணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
2012-13 நிதிநிலை அறிக்கையில் வழக்கத்தைவிட கூடுதலாக 15 சதவீதம் அதிகமான தொகையை ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சென்ற நிதியாண்டில் ரூ. 1,64,415 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 1,93,407 கோடி ஒதுக்கீடு! இதற்குக் காரணம் இந்த ஆண்டு நிறைய விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட- குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியதிருக்கிறது. பேரம் தொடங்கிய நாளில் இருந்த டாலரின் மதிப்பைக் காட்டிலும் தற்போது டாலர் மதிப்பு கூடியுள்ளதால், ராணுவத்துக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 28,992 கோடியால் பெரும் நன்மை விளையாது என்றும் கருதப்படுகிறது.
இந்திய விமானப் படையில் பல விமானங்கள் மிகவும் பழைமையானவை என்பதும், அதிநவீன ரக போர் விமானங்கள் தேவையாக இருக்கின்றன என்பதும் உண்மை. அதே போன்று, கடற்படையில் நிறைய நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை இருக்கிறது. இவற்றை நவீனப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இருக்கிறது. நிறைய நிதிஒதுக்கீடும், கொள்முதலும் அவசியமாக இருக்கின்றன.
இந்நிலையில், ஊழல் இல்லாத ராணுவத் தளவாடக் கொள்முதல் உறுதிப்படுத்தப்படாவிட்டால், கொள்ளை போவது இந்திய மக்களின் வரிப்பணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். நமது அரசியல்வாதிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் தளவாடங்களை வாங்குவதில் முறைகேடு செய்கிறார்கள் என்பது தெரிந்தால், தனது உயிரைப் பணயம் வைத்துப் போர்முனையில் எதிரிகளை நேரிடும் சிப்பாயின் மனநிலை என்னவாக இருக்கும்? தரக்குறைவான தளவாடங்களைக் கையூட்டுப் பெற்று நமது தலையில் கட்டிப் போர்முனைக்கு அனுப்புகிறார்களோ என்கிற சந்தேகம் ஒரு போர் வீரனுக்கு ஏற்படுமானால், அவன் எப்படி எதிரிகளை தைரியமாகவும் வீரத்துடனும் எதிர்கொள்ளத் துணிவான்?
எதில் எதிலெல்லாம் ஊழல் செய்வது என்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தளவாட ஊழல் என்பது தேசியத் தலைகுனிவு

Source :

அரசின் முகத்தில் கரி

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு எப்போது முடியும் என்று யாருக்குமே தெரியாத நிலைமையில், இப்போது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு கிளம்பியிருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று சொன்ன அதே தலைமை தணிக்கைக் குழுதான் இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.10.67 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கை இன்னும் முறைப்படி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டத்தொடரில் நிச்சயமாக தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கை என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் எப்படியோ பத்திரிகைகளில் வெளியாகி, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அமளிதுமளிபட்டுக்கொண்டிருக்கின்றன.
தலைமை பொதுத் தணிக்கைக் குழு குறிப்பிட்டுள்ள குறைபாடு இதுதான்: ஏலத்தின் மூலமாக நிலக்கரி சுரங்கம் வெட்டும் நிலப்பரப்பை ஒதுக்கீடு செய்யாததால், 2004-முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.10.67 லட்சம் கோடி. 155 நிலக்கரிச் சுரங்க வயல் சுமார் 100 தனியார் நிறுவனங்களுக்கு எந்தவித முன்யோசனையும் இல்லாமல், அன்றைய நிலக்கரியின் விலையை கருத்தில் கொள்ளாமல், குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அரசுக்கு இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக, மதிய வேளையிலேயே தலைமை பொதுக்கணக்குத் துறை இதற்கான விளக்கம் அளித்து, அது பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. "இது வெறும் வரைவு அறிக்கைதான். இறுதி அறிக்கை இன்னும் தயாராகவில்லை' என்று விளக்கமளித்திருக்கிறது. பிரதமரின் பொறுப்பில்தான் நிலக்கரி நிர்வாகம் உள்ளது என்றாலும் இதுதொடர்பாக அவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்தார். இந்த வரைவு அறிக்கை அமைச்சர்களின் பார்வைக்கு வந்து அவர்களது விளக்கத்தைப் பெற்ற பிறகுதான் இறுதி அறிக்கை தருவார்கள் என்று கூறியுள்ளார்.
இது வரைவு அறிக்கையாகவே இருந்தாலும்கூட, இத்தகைய ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு சில லட்சம் கோடி குறையலாமே தவிர, ஏலம் விடாமல் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு இழப்பு ஏதுமே கிடையாது என்று நிச்சயமாகச் சொல்லிவிடப்போவதில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த ஒதுக்கீட்டுக்கு அவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும், பொறுப்பேற்கவும் வேண்டும்.
தலைமை கணக்குத்தணிக்கைக் குழு இந்த இழப்பைக் கணக்கிடும்போது, விலை உயரும் வாய்ப்புகளைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் அன்றைய தேதியில் இருந்த நிலக்கரி விலையை மட்டுமே கணக்கில்கொண்டு இழப்பை மதிப்பிட்டாலும் ரூ.6.31 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று கூறுகிறது.
இந்திய மின் உற்பத்தியில் 55% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. இந்திய நிலக்கரியில் எரிசக்தியைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருப்பதால், இந்தோனேசியாவிலிருந்து நம் தேவையில் 30% நிலக்கரியை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் உள்ள அனல் மின்நிலையங்களில் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக, இந்தோனேசிய நிலக்கரி, இந்திய நிலக்கரி இரண்டையும் கலந்து எரிபொருளாக்கி, சமாளிக்கிறார்கள்.
இந்நிலையில் நிலக்கரி அதன் எரிசக்தி அளவைப் பொருத்து 17 வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு தரமான, எரிதிறன் அதிகமுள்ள நிலக்கரி விலை மேலதிகமாகக் கூடிவிட்டது. நிலக்கரியைப் பொருத்தவரை தேவை பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மிகப்பெரும் அளவுக்கு நிலக்கரி வெட்டி எடுக்கவும், அதற்கான விலையைக் குறைவாக நிர்ணயிக்கவும், ஏலம் இல்லாமல் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு எப்படி மனம் வந்தது?
நிலக்கரி விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் பல அனல் மின்நிலையங்கள் தங்கள் மின் உற்பத்தி அளவைக் குறைத்துக்கொண்டுள்ளன. பல அனல் மின்நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இதற்காகக் கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளன.
மின்கட்டண உயர்வுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று- நிலக்கரி விலை உயர்வு. இந்தோனேசிய நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்கள். இந்த நிலையில், இந்திய நிலக்கரியில் எரிதிறனைக் காட்டிலும் சாம்பல் அதிகமாக இருந்தாலும்கூட, அதன் தேவை மிகமிக இன்றியமையாதது. அப்படியிருக்கும்போது இத்தனைப் பெரும் பரப்பை தனியாருக்கு மத்திய அரசு தனது விருப்பப்படி ஒதுக்கீடு செய்யும் என்றால், இதனை என்னவென்று சொல்வது?
ஒதுக்கீடு செய்யப்பட்ட 155 நிலக்கரிச் சுரங்க வயல் களில் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்கூட இந்திய நிலக்கரி நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. தனியார்தான் இந்த தேசத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு தனியார் மின் உற்பத்தியாளர் கூறுகிறார் என்றால் இந்தக் கூற்று நியாயமானதுதானா?
அரசுத்துறை நிறுவனங்கள் நிர்வாகச் சீர்கேடுகளாலும், தொழிற்சங்கங்களின் ஆதரவில் தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் மெத்தனத்தாலும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பது உண்மைதான். அதற்குத் தீர்வு நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும், தொழிற்சங்கங்களின் உதவியுடன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும்தானே தவிர, கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடைய வழிகோலுவதல்ல. மக்களை வஞ்சித்து, தேசத்தின் கனிம வளங்களைச் சூறையாட அனுமதிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தேவையில்லை.
தோண்டத் தோண்ட ஊழல்... முதலில் காற்றில் ஊழல். இப்போது கரியில் ஊழல். நமது ஊழ்வினை, வேறென்ன

Source : தலையங்கம்: அரசின் முகத்தில் கரி!

ஏப்ரல் முதல் உயரும் கைடுலைன் மதிப்பு

கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட சொத்துகளின் அரசு வழிகாட்டி மதிப்பு (கைடுலைன் வேல்யூ), வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக மாநிலத்தில் மனை மற்றும் சொத்தின் சந்தை மதிப்பு (மார்க்கெட் வேல்யூ) பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கைடுலைன் வேல்யூ உயர்த்தப்படாமல் இருந்தது. அதனால், பல இடங்களில் கைடுலைன் மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புபடிதான் மனை மற்றும் சொத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, கிட்டத்தட்ட சந்தை மதிப்புக்கு இனியாக இருப்பதால் சொத்து பதிவு செய்பவர்கள் இனி கையிலிருந்து போடும் தொகை அதிகமாக இருக்கும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளக்கும்.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஒரு சதுர அடி மனை சந்தை விலை 500 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதன் அரசு வழிகாட்டி மதிப்பு தற்போது 250 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அந்த மனையை ச.அடி. 500 ரூபாய்க்கு வாங்கினாலும், அரசு வழிகாட்டி மதிப்பான 250 ரூபாய்க்கு பதிவு செய்தால் போதும். ஏப்ரல் முதல் அப்படி செய்ய முடியாது; 500 ரூபாய்க்குதான் சொத்த பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகாட்டி மதிப்பு மூலம் மனை அல்லது சொத்து வாங்கும் போது செலவிடும் தொகை கணிசமாக அதிகரிக்கும்.
அதே நேரத்தில், பட்ஜெட்டில் ஒரு சலுகையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக முத்திரைத் தீர்வை (ஸ்டாம்ப் டூட்டி) 8 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது. பதிவு கட்டணத்தில் (1%) மாற்றமில்லை. தற்போது அரசு வழிகாட்டி மதிப்பில் மொத்தம் 9% முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இனி 8% செலுத்தினால் போதும்.
உதாரணமாக ஒரு மனையின் அரசு வழிகாட்டி மதிப்பு 10 லட்ச ரூபாய் என்றால் தற்போது பத்திரச் செலவு, 9% என்பது 90,000 ரூபாய். இது ஏப்ரல் முதல் 8% என்பதால் 80,000 ரூபாய் பத்திரச் செலவாகும். அதே நேரத்தில், வழி காட்டி மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதால் 10 லட்ச ரூபாய் ரூபாய் என்பது 20 லட்ச ரூபாயாக அதிகரித்திருந்தால், 8% என்றாலும் 1,60,000 ரூபாய் பத்திரச் செலவு ஆகும். அந்த வகையில் அரசுக்கு வருமானம் கூடும்.
வழிகாட்டி மதிப்பு உயர்வால், தமிழக அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

Source : Vikatan.com

ராகுல் டிராவிட்... சூரியன்கள் மறைத்த நட்சத்திரம்!

சர்வதேச கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார், ராகுல் டிராவிட். ஓய்வுபெறும் முடிவையும் அவரது பாணியிலேயே அறிவித்திருக்கிறார்!
பொதுவாக நட்சத்திர வீரர்கள் மைதானத்தின் நடுவே ரசிகர்கள் கைத்தட்டலோடு விடைபெற வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், ராகுல் டிராவிட் அவரது ஆட்டத்தைப் போலவே அழகாக திட்டமிட்டு, முன்கூட்டியே செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து, கோட் சூட் அணிந்தபடி கண்ணியமாகவும் கம்பீரமாகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது தான் டிராவிட்!
எப்போதும் ஒரு நிதானத்தை, பதற்றமோ பரப‌ரப்போ இல்லாத உறுதியை, திட்டமிட்டு கவனமாக அடியெடுத்து வைக்கும் தன்மையை அவரிடம் பார்க்கலாம். ஆடுகளத்திலும் சரி, ஆடுகளத்துக்கு வெளியேயும் சரி.. கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவதை போல் அவர் நிஜமாகவே ஜென்டில்மேன் தான்!
16 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் டிராவிட் ஏற்ற இற‌க்கங்களைப் பார்த்திருக்கிறார்; சோதனைகளைச் சந்தித்திருக்கிறார்; சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்து போனதில்லை. எங்கேயும் எப்போதும் நிதானமாகவே இருந்திருக்கிறார்.
டிராவிட்டின் இந்த நிதானமும், மன உறுதியுமே கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணியின் பக்கபலமாக இருந்துவந்திருக்கிறது. இந்திய பேட்டிங் நெருக்கடிக்கு ஆளான நேரங்களில் எல்லாம் அவரே இந்திய அணியை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
இந்திய அணியை பொருத்தவரை, டிராவிட்தான் ஆபத்பாந்தவன். அனல் வீசும் வேகப்பந்து வீச்சில் இந்திய பேட்டிங் தடுமாறி நின்றபோதும், விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் நின்றபோதும் அவரது உறுதியான ஆட்டமே கைகொடுத்திருக்கிறது.
இந்திய அணிக்கு சிக்கல் என்றால், ரசிகர்கள் நம்பியதும் டிராவிட்டை தான். எதிர் அணியினர் குறிவைத்ததும் டிராவிட்டை தான்!
எத்தனையோ போட்டிகளில் அவர் இந்திய அணிக்கும் தோல்விக்கும் இடையே நின்றிருக்கிறார். அதனால்தான் "இந்தியப் பெருஞ்சுவர்" எனப் பாராட்டப்பட்டார். நிதானமும் நிலையான தன்மையும் கொண்ட அவருக்கு
இந்தப் பெயர் எத்தனை கச்சிதமாக பொருந்துகிறது. அதே அள‌வுக்கு வெற்றிக்கும் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார்.
டிராவிட் தாங்கி நிற்கும் விழுப்புண்கள் அதிகம். தங்கத்தை நெருப்பில் இட்டால்தான் பிரகாசிக்கும் என்பது போல டிராவிட்டின் ஆற்றலை சோதனைகளும் சவால்களுமே வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. அதற்கேற்ப டிராவிட்டின் சாதனைகளும் வியக்க வைக்கின்றன.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே 10,000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ' மெதுவாக ஆடுகிறார்.. எனவே ஒருநாள் போட்டிக்கு ஒத்துவரமாட்டார் ' என்று விமர்சிக்கப்பட்டதை மீறி, ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் எல்லா நாடுகளுக்கு எதிராகவும், எல்லா நாடுகளிலும் சதம் அடித்திருக்கிறார். 88 முறை டெஸ்ட் போட்டிகளில் ஜோடியாக 100 ரன்களை குவித்துள்ளார். வேறு எந்த வீரரையும்விட அதிகமாக 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக கேட்சுகளை பிடித்திருக்கிறார் (210).
சாதனைகளையும் ஆட்டத்திறமையையும் மீறி, ராகுல் டிராவிட் தனக்கான முழு அங்கீகார‌த்தையும் பெற்றதேயில்லை என்பது தான் கொஞ்சம் விசித்திரமானது.
ஒரு விதத்தில் இது புரிந்துகொள்ளக்கூடியதே. சாதனை மன்னன் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா இளவரசர் கங்குலி, டெல்லி சூறாவளி சேவாக் என புகழ் வெளிச்சத்தை தங்கள் பக்கம் திருப்பி கொள்ளும் ஆற்றல் படைத்த சூரியன்கள் நிரம்பிய இந்திய அணியில், பல நேரங்களில் டிராவிட்டின் சாதனைகள் பிரகாசம் குறைந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 1996-ல் அவரும் கங்குலியும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்தப் போட்டியில் டிராவிட் அபாரமாக விளையாடி, 95 ரன்கள் குவித்தார். ஆனால் அதே போட்டியில் நேர்த்தியாக‌ ஆடி சதம் அடித்த கங்குலி பற்றி தான் எல்லோரும் பேசினார்கள்.
தொடர்ந்து, டிராவிட் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியபோதும், சச்சினோ சேவாக்கோ புகழப்பட்ட அளவுக்கு அவர் பாராட்டப்பட்டதில்லை; கொண்டாடப்பட்டதில்லை.
ஒருவிதத்தில் டிராவிட்டின் நிதானமான ஆட்டமும் அமைதியான குணமும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒன்று... புகழ் மாலைகள் வந்து விழாத‌து கண்டு டிராவிட் மனம் புழுங்கியதுமில்லை; வேதனைப்பட்டதும் இல்லை! மாறாக, 'என் கடன் ரன் குவிப்பதே... அணியின் வெற்றிக்கு உறுதுணைபுரிவதே' என்பது போல தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுவே அவரை சிறந்த டீம் மேனாக மாற்றியது.
ஆனால், இந்திய அணி சோதனைக்கு ஆளான போதெல்லாம் அவர் சுமைதாங்கியாக மாறி தனது ஆட்டம் பற்றி பேச வைத்தார்.
கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் லக்ஷ்மனோடு சேர்ந்து அவர் ஆடி சதம் அடித்து அந்த போட்டியையே தலைகீழாக மாற்றி, வெற்றிக்கு வழி வகுத்ததை யாரால் மறக்க முடியும். அதே போல பாகிஸ்தானின் ராவல்பிண்டியில அவர் அடித்த 270 ரன்களையும் மறந்துவிட முடியாது!
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அவர் ஆடிய பல இன்னிங்க்ஸ்கள் கிரிக்கெட் காவியம் தான்.
தன்னிடம் அணி எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து, அதற்கேற்ப ஆடிய தன்னலமற்ற வீரர் டிராவிட். புகழின் பின்னே அவர் ஓடியதும் இல்லை. சவால்களை கண்டு ஓடியதும் இல்லை.
"எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது," என்று டிராவிட் ஓய்வு முடிவை அறிவித்தபோது பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.
"சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை," என்றும் அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள்.
டிராவிட்டின் ஆட்டத்திலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி.. டைமிங் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பதவி அவரை தேடிவந்தாலும், அவர் அதனை சில ஆண்டுகளில் ராஜினாமா செய்து விட்டார். எதிர்கால கேப்டனான டோனியை அடையாளம் காட்ட இது உதவியது. அதேபோல தான் இப்போது மூத்த வீர்ர்கள், இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்று பேசப்படும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆனால், தனது ஆட்டத்தாலும் அணுகுமுறையாலும் இளம் வீரரகளுக்கான வழிகாட்டியாக விளங்குகிறார்!
இந்தியப் பெருஞ்சுவர் இன்று தனது ஓய்வை அறிவித்தபோது உதிர்த்தது, 'sad but proud' என்று.
எங்களுக்கும்தான் டிராவிட்!

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்''

Source : கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ஏழிசை மன்னர் எம்.கே.டி தியாகராஜ பாகவதர்

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.

தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.
திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள். எப்.ஜி.நடேச அய்யர் தமது திருச்சி இரசிக இரஞ்சனி சபா நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் அரங்கேற்றம் நடைபெற்றது. பத்து வயது சிறுவன் திடீரென்று ஓர் இரவில் ஒளிமிக்க நட்சத்திரமாக ஆகிவிட்டார்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
1926ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.
1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.

அதன்பிறகு பாகவதர் நடிப்பில்,

நவீன சாரங்கதாரா (1936)
சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது)
சிந்தாமணி (1937)
அம்பிகாபதி (1937)
திருநீலகண்டர் (1939)
அசோக் குமார் (1941)
சிவகவி (1943)
ஹரிதாஸ் (1944)
ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.
திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.
அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று இராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய இலட்சுமிகாந்தன், "சினிமா தூது" என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸார் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.
1944 நவம்பர் 8ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த இலட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த இலட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.
சென்னை மாநில மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.
அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது:- இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார்.
பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன.

சிறையிலிருந்து வெளிவந்ததும்,

இராஜமுக்தி (1948)
அமரகவி (1952)
சியாமளா (1952)
புதுவாழ்வு (1957)
சிவகாமி (1960)

ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.

1947ல் சிறையிலிருந்து விடுதலையான பாகவதர், ‘நரேந்திரா பிக்சர்ஸ்’ என்ற சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து ‘ராஜ முக்தி’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். படத்திற்குத் திரைக்கதை அமைத்து, வசனம் எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். பாகவதருடன் கதாநாயகியாக பானுமதி நடித்திருந்தார். சி.ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார். புகழ் பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரியும் படத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் படம் தோல்வியைத் தழுவியது. அடுத்து வெளியான அமரகவி டி.ஆர். ராஜகுமாரி, மதுரம், என்.எஸ்.கிருஷ்ணன், லலிதா, பத்மினி ஆகிய முன்னணிக் கலைஞர்கள் நடித்திருந்தும் தோல்விப் படமானது. தொடர்ந்து வெளியான சியாமளாவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் நம்பிக்கையிழக்காமல் புது வாழ்வு படத்தைத் தயாரித்து தானே நடித்து இயக்கவும் செய்தார் பாகவதர். பாகவதர் வாழ்க்கையின் மீளாத சரிவிற்கு அப்படமே வழி வகுத்தது. அப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.தொடர்ந்து தமிழிசைக் கச்சேரிகள் செய்ய விழைந்தார். ஆனால் அதற்கும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சர்க்கரை நோயின் தாக்கத்தால் திடீரெனp பார்வை இழப்பும் ஏற்பட்டது. தங்கத் தட்டில் சாப்பிட்ட பெருமைக்குரியவர் தாங்குவதற்கு யாருமில்லாமல் தவித்தார். வாழ்ங்கு வாழ்ந்த கந்தர்வ கான இசைமாமணி இறுதிக் காலத்தில் உடல்நலிவுற்று, ஆதரிப்பார் யாருமில்லாமல் வறுமையில் வாடினார். மனம் வெறுத்துப் போய் தம் குல தெய்வமான தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலைச் சரணடைந்தார். அங்கேயே அமர்ந்து தம் வாழ்நாளைக் கழித்தார். பாகவதரின் நிலை பற்றிக் கேள்வியுற்ற நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவரைச் சந்தித்தார். அவர் நிலை கண்டு இரங்கி, “ வாருங்கள், உங்களுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்” என்று வேண்டிக் கொண்டார். ஆனால் பாகவதர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ”நீங்கள் சொன்னதே போதும். செய்து வைத்தது மாதிரிதான். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!” என்று கூறி அதனை ஏற்க மறுத்து விட்டார்.
மன ஆறுதலுக்காக நண்பர் நாகரத்தினத்துடன் தீர்த்த யாத்திரை மேற் கொண்டார் பாகவதர். 1959 ஏப்ரல் மாதம் புட்டபர்த்தி சென்று ஸ்ரீ சாயி பாபாவைத் தரிசித்தார். தனது மன வேதனைகளை, தான் படும் துன்பங்களை பாபாவிடம் சொன்னார். பாபா பாகவதரிடம், “இன்னும் ஆறுமாதங்களில் எல்லாம் முடிந்து விடும்” என்றார். அது கேட்டு மனம் நெகிழ்ந்த பாகவதர் தான் பார்வையற்று இருப்பதால் பாபாவை தரிசிக்க முடியவில்லை என்றும், ஒரு சில நிமிடங்களாவது அவரைத் தரிசிக்க தனக்கு பார்வை அளிக்குமாறும் வேண்டிக் கொண்டார். பாபாவும் மனமிரங்கி, தனது கைகளால் பாகவதரின் கண்களைத் தடவ, பாகவதருக்குத் தற்காலிகமாகp பார்வை கிடைத்தது. கண்குளிர பாபாவை தரிசனம் செய்தார். பாகவதரிடம் “போதுமா?” என்று பாபா கேட்க அவரும் மனத் திருப்தியுடன் “போதும்” என்று சொல்ல, பாகவதரின் பார்வை மீண்டும் வழக்கம் போல் ஆனது. பாபாவை தரிசித்த மனத் திருப்தியில் மகிழ்வுடன் ஊர் திரும்பினார் பாகவதர்.

ஆனால் பாபாவின் வாக்கு பலித்தது. சரியாக ஆறு மாதங்கள் கழித்து, 1.11.1959 அன்று பாகவதர் காலமானார். வாழ்வாங்கு வாழ்ந்து, தமிழ்த் திரையுலகின் சிம்மாசனத்தில் 30 ஆண்டுகாலம் இசையரசராக வீற்றிருந்து, பட்டி, தொட்டிகளிலெல்லாம் கர்நாடக இசை வெள்ளம் பெருக்கெடுத்தோட வைத்த பெருமைக்குரிய பாகவதர் மறைந்தார்

எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.

Source :
தென்றல் மாத இதழ், அக்டோபர் 2010 இதழ்  and 

Daily Calendar