Showing posts with label தாகூர். Show all posts
Showing posts with label தாகூர். Show all posts

தாகூர்

தாகூர்... வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர். இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால், அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களைத் தொட்டது.


இங்கிலாந்திற்கு சட்டம் படிக்கப் போய், அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார். ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின. நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார். அங்கேதான் தாகூர், மகாகவி தாகூர் ஆனார்.

வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர், கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார். இயற்கையானச் சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார். அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார். அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார்.

அற்புதமான பல கவிதைகள் எழுதினார். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது.

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலாபாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார்.

தான் இயற்றிய பாடல்களுக்குத் தானே இசையும் அமைத்திருந்தார். அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன. நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு.

காந்தியை 'மகாத்மா' என அழைத்தது இவர் தான். இந்தியாவின் 'ஜன கண மண' மற்றும் வங்காள தேசத்தின் 'அமர் சோனார் பங்களா' எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே.

என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே; அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல; அப்படியே வாழவும் செய்தார் தாகூர்.

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக...


உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப் போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும், ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழட்டும்
என் தேசம் !
***
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து, தனித்து பேசு!
தனித்து நட, தனித்து நட, தனித்து நட
சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு!
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்
தனித்து நட, தனித்து நட, தனித்து நட
யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு
தனித்து நட, தனித்து நட, தனித்து நட