Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

செம்மொழிக் கவிதைதான் தடைக்குக் காரணமா?

.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், சட்டசபை இடமாற்றம்... என்று அதிரடி காட்டிய அ.தி.மு.க. அரசு, இப்போது சமச்சீர் கல்விக்கும் சடன் பிரேக் போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் என அடுத்தடுத்து விவகாரம் சூடுபிடிக்க... பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தோம்! 


''தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் தடை போடு​​கிறீர்களா?''
''முதலில் ஒன்றைப் புரிந்து​கொள்ளுங்கள். சமச்சீர் கல்வித் திட்டத்​துக்கு நாங்கள் எதிரி அல்ல. நாங்களும் அதை ஏற்கிறோம். சமச்சீர் கல்வியின் நோக்கம் என்ன? எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே? அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவசரக் கோலமாக கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி முறையில் நிறையக் குளறுபடிகள்... அதை அப்போதே நாங்கள் எதிர்த்தோம். மாணவர் - பெற்றோர், ஆசிரியர் மத்தியிலும்கூட எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக செட் போட்டு தலைமைச் செயலகம் திறந்ததுபோல், சமச்சீர் கல்வியையும் திடுதிப்பென அமல்படுத்திவிட்டனர். இப்படி ஒரு ஓட்டைப் படகை வைத்துக்கொண்டு கல்விக் கடலை நீந்துவது என்பது முடியாத காரியம்!
எனவே, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், தற்போதைய சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை திருத்தி, உயர்த்திக் கூர் தீட்ட இருக்கிறது வல்லுநர் குழு. அதுவரையிலும் மாணவர்களுக்குப் பழைய பாடத் திட்டமே தொடரும்!''

''இந்தத் தற்காலிகத் தள்ளிவைப்பு என்பது, சமச்சீர் கல்வியை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான முன்னோட்டம்தான் என்ற கருத்து நிலவுகிறதே?''
''உண்மை என்னவென்றால், சமச்சீர் கல்வித் திட்டங்களை வரையறுக்க தி.மு.க. அரசு அமைத்த  முத்துக்குமரன் கமிட்டியின் வழிகாட்டுதல்களை தி.மு.க. அரசே பின்பற்றவில்லை. அதனால்தான், 'தற்போதைய சமச்சீர் கல்வியில் தரமே கிடையாது. இது மாணவர்களையே சீரழித்துவிடும்’ என்று முத்துக்குமரனே கடந்த காலத்தில் பேட்டி அளித்தார். மாணவர்களின் கல்வித் தரத்தை உண்மையிலேயே உயர்த்த வேண்டும் என்றால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் திறன் ஆகியவற்றையும் மேம்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில், 'செய்வன திருந்தச் செய்’ என்பதையே கடைப்பிடிக்கிறோம். மற்றபடி இதில், அரசியல்ரீதியான காழ்ப்போ, சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் எண்ணமோ எங்களுக்குத் துளியும் கிடையாது!''''தற்போதைய சமச்சீர் கல்வியில் அப்படி என்னதான் குறைபாடு?''
''திட்டத்தை அமல்படுத்திய அடிப்படையே தவறு. சென்ற ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினர். இப்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக அறிவித்துவிட்டனர். போன வருடம் ஒன்பதாம் வகுப்பு வரை பழைய பாடத் திட்டத்தில் படித்துக்கொண்டு இருந்த மாணவன், திடீரென இப்போது 10-ம் வகுப்பில் சம்பந்தமே இல்லாமல், புதிதாக சமச்சீர் பாடத் திட்டத்தைப் படித்தால், அவனுக்கு என்ன புரியும்? உளுத்தம் பருப்பு இல்லை என்றால், கடலைப் பருப்பு என்று மாற்றி வாங்கிச் செல்வதற்கு, கல்வி ஒன்றும் கடைச்சரக்கு இல்லையே!
எந்த மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருந்தாலும் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படிப்படியாகத்தான் கொண்டுவர வேண்டும். தேர்தலில் அறிவித்து​விட்டோம் என்பதற்காக மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படி 'எடுத்தேன்... கவிழ்த்தேன்!’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்!''


''ஏற்கெனவே,  216 கோடி செலவில் தயாரான சமச்சீர் கல்விப் புத்தகங்களை ஒதுக்கி​விட்டு, புதிய புத்தகங்களுக்காக டெண்டர்​விடுவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார்​களே?''
''இப்போது தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் புத்தகங்களின் மதிப்பு  237 கோடி! ஆனால், இதன் உண்மையான மதிப்பு வெறும்  80 கோடிதான். மூலப்பொருட்களின் விலையேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆட்சியினர் இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை ஏற்படுத்தினர். இதிலும்கூட, 70 சதவிகிதப் புத்தகங்கள்தான் தயார் செய்து இருக்கிறார்கள்.''


''சமச்சீர் பாடத் திட்டத்தில் உள்ள 'கருணாநிதி செம்மொழி கவிதை, கலைஞர் காப்பீட்டுத் திட்டக் கட்டுரை’களும் ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி​விட்டதோ?''
''தற்பெருமைக்காக ஒருவர் தன்னைப்பற்றிய பாடத் திட்டத்தை ஒன்றாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம், இரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம்... ஆனால், ஒன்றில் இருந்து 10-ம் வகுப்பு வரையிலும் உள்ள சமச்சீர் பாடத் திட்டத்தில், தொடர்ச்சியாக தற்பெருமைப் பாடங்களைக் கடந்த ஆட்சியாளர்கள் சேர்த்திருப்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பாடங்களுக்காகத்தான் நாங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்திவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் நீக்கிவிட்டு நாங்கள் திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாமே!?''
 

thanks : Vikatan