Showing posts with label லோக்பால். Show all posts
Showing posts with label லோக்பால். Show all posts

அண்ணா ஹஜாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.
ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...
* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.
* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.
* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.
கிராம மேம்பாட்டுப் பணி...
* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.
பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.
* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.
* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.
* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் அறியும் சட்டம்...
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...
நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.
இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.
லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.
"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கியிருக்கிறார்!


அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/


Source : http://www.vikatan.com/