இதுவா கூட்டாட்சி?

மேற்கு வங்க மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதில் மத்திய அரசின் தயாள குணத்துக்கு அளவே இல்லை. இந்த முறை ரூ.16,000 கோடி சிறப்பு நிதி அளிக்கவிருக்கிறது.
 குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோடு விவாதிப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவைவிட்டுக் கிளம்பியபோது, அங்குள்ள பத்திரிகைகள் இதைப்பற்றித்தான் எழுதின. "குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதோடு, மத்திய அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 தவணைகளில் வழங்கவுள்ள ரூ.16,000 கோடி குறித்தும் பேசுவார். இந்த சிறப்புநிதியை அமைச்சரவை விரைவில் அங்கீகரிக்கவுள்ளது' என்றுதான் மேற்குவங்கப் பத்திரிகைகள் எழுதின.
 சென்ற ஆண்டுதான் ரூ. 8,750 கோடியைப் பின்தங்கிய மண்டலங்களுக்கான சிறப்பு நிதி என்ற பெயரில் மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசு அளித்தது. பிரதமர் கிராம சடக் யோஜனா திட்டங்களுக்காக ரூ. 2,000 கோடி கொடுத்தார்கள். இப்போது மூன்று ஆண்டுகளில் நான்கு தவணைகளில் ரூ. 16,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருக்கிறது.
 மேற்கு வங்கத்துக்கு எப்படிக் கரங்கள் சிவக்கச் சிவக்க அள்ளிக் கொடுக்கின்றீர்களோ அதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்கும் தர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலமும் கேட்டிருக்கிறது. நிச்சயம் இவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
 அவர்களுக்கு ஏன் அள்ளிக் கொடுக்கிறீர்கள் என்று நாம் கேட்கவில்லை. ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகள் மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. இப்போது, தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்பதுகூடக் காரணமாக இருக்குமானால் இந்திய யூனியன், கூட்டாட்சித் தத்துவம் என்கிற வார்த்தைகளுக்கே அர்த்தமில்லாமல் அல்லவா இருக்கிறது.
 வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ஒரு பக்கம் இருக்கட்டும். "தானே' புயல் நிவாரணத்தில் மத்திய அரசு காட்டிய அக்கறை என்ன? தமிழகத்தில் "தானே' புயல் தாக்கியபோது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்து, வீடுகளை வீழ்த்திப் பெரும் நாசம் செய்தது. 2004-டிசம்பரில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும், 2011 டிசம்பரில் "தானே' புயல் ஏற்படுத்திய பாதிப்பும் பெருநாசமும் மிக அதிகம் என்று மதிப்பிடப்பட்டது.
 தமிழக அரசு ரூ. 5,000 கோடி சேத மதிப்பீடு செய்து, உடனடியாக மத்திய அரசிடம் நிவாரண நிதியுதவி கேட்டது. ஆனால், கிடைக்கவில்லை. ""தமிழக அரசு ரூ.850 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்த பின்னர், அதேநாளின் பிற்பகலில் மத்திய அரசு ரூ.500 கோடி நிவாரண நிதியை அறிவித்தது. ஒருவேளை வெட்கப்பட்டு அறிவிக்க நேர்ந்ததோ தெரியாது'' என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிடும் நிலைமைதான் இருந்தது.
 மேற்கு வங்கத்துக்கு மட்டும் அதிமுக்கியத்துவம் கொடுத்து திட்டக் கமிஷனில் அதிக நிதி ஒதுக்குவதும், சிறப்பு நிதியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிக்கு அளிப்பதும், மேற்கு வங்கம் பெற்றுள்ள கடன்தொகைக்கு வட்டி செலுத்தாமல் இருக்க அனுமதிப்பதும் என எத்தனை எத்தனை சலுகைகள்!
 நியாயமான ரயில் பயணக் கட்டணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த நாளே அமைச்சரை மாற்றினார் மம்தா. மத்திய அரசு சம்மதித்தது. இப்போது எல்லோருடைய எதிர்ப்புக்கும் இடையில் ரயில்வே சரக்குக் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளார் புதிய ரயில்வே அமைச்சர். மத்திய அரசு இதற்கும் சம்மதிக்கிறது.
 தமிழகம் மட்டுமல்ல, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் பாரபட்சமான போக்கை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அவர்களுக்கும் கேட்ட நிதியுதவி கிடைப்பதில்லை. மேற்கு வங்க மாநிலத்துக்குக் காட்டப்படும் மிகையான சலுகைகள் திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய அங்கம் என்பதால் மட்டுமல்ல. தங்கள் ஆதரவில்தான் மத்திய அரசே ஆட்சியில் இருக்கிறது என்பதைத் துணிந்து உணர்த்தித் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வேண்டியதை எல்லாம் கேட்டுப் பெறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி என்பதாலும்கூட!
 இதேபோலக் கேட்கும் துணிவு மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிக்கும் இருந்திருக்குமேயானால், தமிழினப் படுகொலையே நேர்ந்திருக்காது என்பதை நாம் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.
 இத்தகைய பாரபட்சமான நிலைமைகளைக் கடந்து, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே வளர்ச்சி விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக பிகார் (13.1%) உள்ளது. தென்னிந்தியாவில் சிறப்பான வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் (9.39%) திகழ்கிறது. ஒருவேளை, "தானே' புயல், மின்பற்றாக்குறை ஆகிய பிரச்னைகள் இல்லாதிருந்தால், பிகாரைப்போல மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) பிகார் மாநிலத்தை விஞ்சியதாக தமிழகம் இருந்திருக்கக்கூடும்.
 மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும்கூட, தமிழகத்தை ஜெயலலிதா ஆளும் மாநிலமாகப் பார்க்கின்ற போக்குதான் இருக்கிறதே தவிர, தமிழர் வாழும் மாநிலமாகப் பார்க்கவில்லை என்பதால்தான் மத்திய அரசு இவ்வளவு வெளிப்படையாகத் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பதா, அல்லது கூட்டணியில் இருக்கும் மம்தா விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதைப்போல கூட்டணியில் இருக்கும் தமிழகக் கட்சியின் விருப்பத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பதா?
 அடுத்த பொதுத்தேர்தலில் யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள்தான் இருப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சி தமிழர் வளர்ச்சியாகத்தான் பார்க்கப்படும். இந்த உணர்வு தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளுக்கும் இருந்தால் மட்டுமே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!Daily Calendar