Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

ஈ வே ரா போராட்டத்தை பற்றி ஜீவா





பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்டுமல்ல, அனைத்திந்தியாவிலும் பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உச்சிக்குடுமி கத்தரிப்பு, பூணூல் அறுப்பு முதலிய 'அறப்போர் ' முறைகள் இந்த நகரத்தில் செயல்படுத்தப்பட்டன.இந்தப் போராட்டமுறை சரியா, தவறா என்பதைப்பற்றி பின்னால் கவனிப்போம். முதலில் இந்தப் போராட்டத்தின் லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஜாதி ஒழிப்புக்காகவே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக ஈ.வே.ரா. கூறுகிறார்.ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்.ஜாதியமுறையை விரும்பாத, ஜாதியமுறையை எதிர்க்கிற, தம்மைப் பொறுத்த முறையில் ஜாதியமுறையை ஒழித்துவிட்ட எல்லாப்பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே சர்க்காரை ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க நிர்ப்பந்திக்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.இந்தப் பெரும்பணியை ஆற்றுவதற்கு ஜனநாயக ரீதியான சமாதானமான மனமாற்றும் முறைகள் மிகச்சிறந்த முறை என்பதையும் பலாத்காரமுறை தகுந்தமுறை அல்ல என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.நாலுபேர் கையில் கத்தி எடுத்துக் கொண்டு அல்லது தடிகளைத் தூக்கிக் கொண்டு, சமுதாயத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேரோடிப் படர்ந்து கிடக்கும் ஜாதிய தீய பிரதிபலிப்புகளை இதோ ஒழித்துக்கட்டி விடுகிறேன் என்று கிளம்பினால் அவர்களுடைய குருட்டு ஆவேசத்தைக் கண்டு நாம் பரிதாபப்படத்தான் முடியும். மற்றபடி இந்தச் சிலரின் பலாத்காரத்தால் ஜாதி ஒழிப்பில் ஒரு சிறு துரும்பைக் கூட அசைத்துவிட முடியும் என்று ஒரு பைத்தியக்காரனும் நினைக்க மாட்டான்.இனி ஈவேரா நடத்தும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா 'காங்கிரஸில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'வருணாசிரம தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'இந்துமதம் ஒழிய வேண்டும் ' என்றும், அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும் ' என்றும் போகப்போக பிரச்சாரம் செய்து கொண்டே போனார்.(சிரிப்பு)நெடுகலும் அவருடைய போக்கு இப்படித்தான். விரும்பினால் ராமமூர்த்தியை ஆதரிப்பார், ராஜகோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார்.நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், சீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்காக காரணம் சொன்னார்.(சிரிப்பு)இன்று ஜாதி ஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இத்றகு ஒரு காரணம் சொல்கிறார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைத் தமிழ்நாடு நன்கறியும். அவர் காட்டிய வழியால் தமிழ்நாட்டில் ஜாதியவெறியும் ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக, பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய பணிவான கருத்து.அன்பர்களே! ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பொறுத்தமட்டில் ஒரு திட்டவட்டமான கருத்து இல்லாதவர் ஈவேரா என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டவே இதுவரை நான் சில கருத்துக்களைச் சொன்னேன்.இனி இன்று அவர் நடத்தும் போராட்ட முறைகளை ஒவ்வொன்றாகக் கவனிப்போம்.காவிரி ஆற்றங்கரையில் நாலைந்து பார்ப்பனர்கள் - இந்த நாட்டில் ஜாதி பிறந்ததற்கும், அது வளர்ந்ததற்கும், அதன் பேரால் நடைபெறும் பலப்பல கொடுமைகளுக்கும் நேருக்குநேர் ஒரு தொடர்பும் இல்லாத நிரபராதிகள், தங்கள் வழக்கப்படி குளித்து பூசை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் அவர்கள் வைத்திருந்த சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தார்கள்; அவர்களுடைய பூணூலை அறுத்தார்கள்; அவர்களுடைய உச்சிக்குடுமியைக் கத்தரித்தார்கள்; ஓட ஓடத் துரத்தினார்கள். ஈவேராவைப் பின்பற்றுகிற திகவினர் எடுத்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை இது.சொம்பைத் தூக்கி காவிரி ஆற்றில் எறிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா ?(ஒரே சிரிப்பு)காவிரி ஆற்றுவெள்ளம் ஒரு தனிமனிதனுடைய சொம்பை அடித்துக் கொண்டு போகிறபொழுதே, ஆயிரம் காலமாக சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் ஜாதி முறையையும் அடித்துக் கொண்டு போகும் என்று நினைக்கிறார்களா ? (சிரிப்பு)நாலைந்து ஆட்களுடைய உச்சிக்குடுமியையும் பூணூலையும் அறுத்தால் எந்த ஜாதியை எப்படி ஒழித்ததாக அர்த்தம் ?(சிரிப்பு)குடுமியைக் கத்தரித்தால் ஜாதி போய்விடுமா ? குருட்டு ஆவேசத்தால் பார்ப்பன ஓட்டல்களில் கல்லடி நடத்தினால் ஜாதிமுறையைக் கல்லால் அடித்ததாகுமா ?(சிரிப்பு)ஓட்டல்களில் உள்ள ட்யூப்லைட்களை உடைத்து நொறுக்கினால் சாதிமுறையை உடைத்து நொறுக்கி விட்டதாகக் கருதுகிறார்களா ?(சிரிப்பு)பூணூலையும், உச்சிக்குடுமியையும் அறுப்பது என்று வந்தால், நாடு முழுவதிலும் உள்ள பூணூல்களையும், உச்சிக்குடுமிகளையும் ஒரு சிலர் அறுக்க அனுமதிப்பார்களா ? அல்லது தாக்குதலுக்கு பயந்து ஓடுவார்களா ? எதிர்த்துத் தற்காப்பிற்குத் துணியமாட்டார்களா ? இப்படிச் சிலர் மனம் போன போக்கில் மற்றவர்களைத் தாக்கும்போது பக்கத்தில் இருப்போர்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா ? அராஜகக் குழப்பத்தின் நடுவிலன்றி, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கின்ற தாறுமாறு பிடித்தாட்டும் சூழ்நிலையிலன்றி, சில கட்டுத்திட்டத்தில் இயங்கும் எந்தச் சர்க்காரும் இதை அனுமதித்துக் கொண்டிருப்பார்களா ?எந்த வகையாலும் இந்தகைய அநாகரிகச் செயல்கள் அனுமதிக்கத் தக்கதல்ல என்பதை என்னோடு நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆழம் பாய்ந்த ஒரு சமுதாயக் கேட்டை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும் என்றால், சகல பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சர்க்காரின் நடவடிக்கையும் தேவை என்பதையும், அதுதான் ஜனநாயகமுறை என்பதையும் நீங்கள் என்னோடு ஒப்புக்கொள்வீர்கள். இந்தப் பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு போன்ற செயல்கள் நாகரிகச் செயல்கள் அல்ல, அநாகரிகச் செயல்கள் என்கிறோம். நிதானமான செயல்கள் அல்ல, வெறித்தனமான செயல்கள் என்கிறோம்.எனவே இந்தச் செயல்களை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எங்கள் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளோம்.இது மட்டுமல்ல; சிலருடைய உச்சிக்குடுமி, பூணூல் அறுப்பு திருப்பணி தொடர்ந்து அனுமதிக்கப் பட்டால் .. என்று வைத்துக் கொள்வோம். சிலரிலிருந்து பலராக விரியும். உச்சிக்குடுமி பிடிக்காமல் அறுத்தால், தாடி பிடிக்காமல் அறுக்கத் தூண்டும். (சிரிப்பு)இதிலிருந்து வெட்டுப்பழி, குத்துப்பழிக்கு வழிபிறக்கும். அதிலிருந்து ஒரு ஜாதியை ஒரு ஜாதி ஒழித்துக்கட்டும் அத்தியாயம் ஆரம்பமாகும். இறுதியில் நாடு சுடுகாடாகும். இந்தப் போக்கு - இந்த அநாகரிகப் போக்கு அனுமதிக்கப்படத் தக்கதுதானா ? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.குறிப்பிட்ட ஒரு ஜாதியை தனிமைப்படுத்தி, அநாகரிகமான முறையில், கண்மூடித்தனமாகத் தாக்குவதால், சமுதாயம் முழுவதிலும் பரவி நிற்கும் ஜாதிமுறையை ஒழித்துக்கட்டிவிட முடியாது.இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இன்னும் கேட்டால் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களே மேலும் மேலும் பெருகி வருகிறார்கள். இது கண்கண்ட உண்மை.ஆகவே ஜாதி ஒழிப்பின் பேரால், பார்ப்பனர்களை மட்டும் - இன்னார் இனியார் என்று பாராமல் - தாக்கி வெறிச்செயல் நடத்துவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் துளிக்கூட பொருந்தாத தரங்கெட்ட செயலாகும்.(நூல்: மேடையில் ஜீவா)

திருமணத்தை பற்றி பெரியார்





இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். "நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா? "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது? Periyar on கற்பு :நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.

தமிழை பற்றி பெரியார்







தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?தமிழால் என்ன நன்மை?தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே ஆகி விட்டார்கள்.பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்குதமிழர்முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.–தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்!தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்குகாரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளைஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமேஎன்றுதான் பரிவோடு கேட்கிறேன்.இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்