திருமணத்தை பற்றி பெரியார்





இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். "நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா? "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது? Periyar on கற்பு :நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.