அப்பா .... அப்பா ... அப்பா

அயல்தேசத்திலிருந்து...
அப்பாவுக்காய் ஓர் கடிதம்...

இதய தேசத்தில் உன் நினைவுகள்
நிறைய இருந்தாலும்
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள் !

அப்பா செளக்கியமா...?

நீ -என் தேவைகளை நிறைவேற்ற
தகுதியை மீறி உழைத்தாய்!
நானோ தியேட்டர் சுவரை மீறி செலவழித்தேன்

அப்பா! நான் கேட்கத் தயங்குவேனெனத்
தெரிந்து எனக்குத் தெரியாமல் ...
என் பாக்கெட்டில் பணம் வைப்பாய் !
ஆனால் நான் அதிகம் செலவழிப்பதாய் ...
அம்மாவைத் திட்டுவாய்!
நீ கோடையில் நின்றாலும் –
எனக்கு குடை வாங்கிக் கொடுத்தாய்...
உன் வியர்வை விற்ற காசில் –
எனக்கு குளிர்சாதனப் பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சி தான் –
எனக்கு பைக் வாங்கிக் கொடுத்தது...
நீ மிதித்த சுவடுகள் சைக்கிள்
பெடலில் அல்ல !
என் இதயத்தில்தான் அதிகமாய்
பதிந்திருக்கிறதப்பா..

வேலைசெய்து பணம் அனுப்புகிற வயசில்
நான் வேலை தேட ..
.வேலை தேடிய எனக்கு நீ
பணம் அனுப்பினாயே ?

இப்படி இதய தேசத்தில்
உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் ...
எல்லாம் சொல்வதில்லை கடிதங்கள்!
உன் பாக்கெட்டில் பணம் திருடியது
நான் தான் என தெரிந்தும் ...
இதுவரை எனைக் காட்டிக் கொடுக்காமல்
பணம் தொலைந்ததாய் நீ செய்த பாசாங்கு!
இது போல கடிதம் சுமக்காத பல நிகழ்வுகள்
உன்னுள்ளும் .........என்னுள்ளும் .........
நிச்சயமாய் சொல்கிறேனப்பா!
உன்வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது ·பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா ?
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள்
எவையும் நம்மைப் பிரித்துவிடக் கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

-ரசிகவ் ஞானியார்