ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டது.
ஒரு பில்லியன் டாலர், அதாவது ரூ.4 ஆயிரத்து 700 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் தயாரித்து வெளியிட்டது.
உலகலவில் சுமார் ஆயிரம் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் 49 இந்தியர்கள் உள்ளனர். சன் டிவி கலாநிதி மாறன், 342வது இடத்தைப் பெற்று பில்லியனர் பட்டியலில் இடம்பெற்ற தமிழ்நாட்டுக்காரர் ஆகியுள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்த 49 பில்லியனர்களின் சொத்து மதிப்பையும் போர்ப்ஸ் தனித்தனியே கணக்கிட்டு கூறியுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த 49 இந்திய பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்துக்களை சேர்த்து மதிப்பிட்டால் 222.1 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்படுகிறது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 43 ஆயிரத்து 870 கோடி!
இந்திய அரசாங்கத்தின் 2010-11ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியல்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ.8 லட்சத்து 94 ஆயிரத்து 769 என பட்ஜெட்டில் வாசிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விட, 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் அதிகம்.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 251.4 பில்லியன் டாலர்.
இந்திய கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகையில் சுமார் 88.34 சதவீதம்.
அந்த 49 பெருங்கோடீஸ்வரர்கள்...!
உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி. சொத்து மதிப்பு 2,900 கோடி டாலர்.
அம்பானிக்கு அடுத்தபடியாக உலக வரிசையில் 5ம் இடத்தை பிடித்து இந்தியாவில் இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ஆர்சிலர் மிட்டல் லட்சுமி மிட்டல் (2870 கோடி டாலர்).
இந்தியாவின் 3வது பெரிய பணக்காரர் விப்ரோ அசிம் பிரேம்ஜி (1700 கோடி டாலர்). அம்பானி சகோதரர்களில் ஒருவர் உலக வரிசையில் 4வதும், மற்றொருவர் இந்திய வரிசையில் 4வது இடத்தையும் பிடித்துவிட்டனர்.
1370 கோடி டாலருடன் உலக பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார் அனில் அம்பானி.
இவர்களைத் தொடர்ந்து எஸ்ஸார் குரூப்ஸ் ஷாஷி அண்ட் ரவி ரூஜா சகோதரர்கள், சாவித்திரி ஜிண்டால், டிஎல்எஃப் குஷால் பால் சிங், ஆதித்யா பிர்லா குழுமத்தின் குமார் பிர்லா, பாரதி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், வேதாந்தா அணில் அகர்வால் உள்ளனர்.
இந்தியாவில் 11வது இடத்தில் கோத்ரெஜ் குழுமத்தின் ஆதி கோத்ரெஜ்ஜும் அவரைத் தொடர்ந்து, கவுதம் அதானி, சன் பார்மாவின் திலிப் சங்க்வி, எச்சிஎல் ஷிவ் நாடார், ஜிஎம்ஆர் ஜி.எம்.ராவ், ரான்பாக்ஸியின் மால்விந்தர் அண்ட் ஷிவிந்தர் சிங் சகோதரர்கள், கோடக் மஹிந்தரா உதய் கோடக் உள்ளனர்.
தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்
தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.
44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 2.9 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி.
தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து. தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம்.
மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு.
சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார். சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார்.

அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார். இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக எஸ்ஸெல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா (ஜீ என்டெர்டெயின்மென்ட்), பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் இந்து ஜெயின், 'லேண்ட்மார்க்' மிக்கி ஜக்தியானி, டோரென்ட் பவர் நிறுவனத்தின் சுதிர் சமீர் மேத்தா சகோதரர்கள் போன்றவர்கள் உள்ளனர்.
பெருகும் பணக்காரர்கள்...
இந்தியாவில் கடந்த பத்தாண்டு காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வந்திருப்பதாக பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவிக்கிறது.
அந்நிறுவனம் நடத்திய ஆய்வில், 2000ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருவது தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்திய மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தினசரி 50 ரூபாய்க்கும் கீழான வருமானத்தில் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.
பணக்காரர்கள் தாங்கள் சிரமப்பட்டு சேர்த்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க தயாராக இருப்பதில்லை.
இயற்கை பேரிடர் போன்ற சிக்கலான தருணங்களில் சக மக்களுக்கு உதவுவதில் இந்தியாவில், அரசாங்கங்கள் தான் முன்னணியில் உள்ளன.
இதுபோன்ற சமயங்களில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 65 சதவீதத்துக்கும் மேல் நிதி திரட்டப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மூலம் எஞ்சிய தொகை திரட்டப்படுகிறது. மிகவும் சொற்ப அளவுக்கே பணக்காரர்கள் மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் தனிப்பட்ட பங்களிப்பு இருப்பதாக பெயின் அண்ட் கோ நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற பேரிடர் நிவாரண நிதிகளில் தனி நபர்கள், கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் 75 சதவீத நிதி திரட்டப்படுகிறது