Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

18 பெண்களின் கற்பு... 19 வருட வழக்கு!

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்​காவில் இருக்கும் மலை அடிவாரக் கிராமம் வாச்சாத்தி. இந்தக் கிராமம் தொடர்பான வழக்கு ஒன்று, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது... நடக்கிறது... நடந்து​கொண்டே இருக்கிறது!

முதலில், அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்...
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட... அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். 'சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்...’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.
அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று... வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.
வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, 'சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று 'ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ''என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.
பாதிக்கப்பட்ட முருகன், ''எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க... வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா... இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!'' என்றார்.
மனித உரிமைக்கான 'குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ''எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!'' என்றார்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்!

source Vikatan