Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

இளையராஜா

இசைஞானி

தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்! ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு.

மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர். சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார்.



சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி.

தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்).

இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது! இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக.

இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.

ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து.

ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர்.

காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து. இசைஞானியின் சுவையான வாழ்க்கை வரலாறு தரவிறக்க மேலே உள்ள இசைஞானியின் படத்தை சொடுக்கவும். இசைஞானியை சந்திக்க விரும்புபவர்கள் முன் அனுமதி பெற்று கீழ்கண்ட விலாசத்தில் சந்திக்கலாம்.

இளையராஜா 38,முருகேசன் தெரு தியாகராய நகர். ராகவையா ரோடு அருகில் சென்னை-17 போன்:-+91-44-828 3209

BBC Article about illayaraja...