Showing posts with label மனித நேயம். Show all posts
Showing posts with label மனித நேயம். Show all posts

உன்னதமான ஒரு மனிதர்

''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்!'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.

''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எதுவும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்

விபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.


பொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.

யாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்!'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.


''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்!'' என்று புன்ன கைக்கிறார் பாபு.

''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்திச்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.

இன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்!'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்!