Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

நித்யானந்தா வீடியோ விவகாரம் பற்றி ஞானி

(விருந்தினர் பக்கத்துக்கு உடனே கட்டுரை தேவை என்று டெல்லியில் இருந்த எனக்கு சென்னை தமிழ் இந்தியா டுடேவிலிருந்து மார்ச் 5ந் தேதி போன் செய்ததும் இதை அங்கிருந்தே அனுப்பி வைத்தேன். சென்னை வந்த பின்னர் இதழைப் பார்த்ததும்தான் தெரிந்தது. இதை விருந்தினர் பக்கமாக வெளியிடவில்லை. இதிலிருந்து ஒரு சில வரிகளை மட்டும் அவர்களுடைய கட்டுரையில் என் ற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தடித்த எழுத்துகளில் உள்ளவை அவர்கள் பயன்படுத்தாதவை )

சாமியார் நித்யானந்த பாமஹம்சனும் நடிகை ரஞ்சிதாவும் தனியறையில் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் காட்டும் வீடியோ சுமார் 72 மணி நேரத்துக்கு தமிழர்கள் அத்தனை பேரையும் வேறு விஷயத்தில் கவனமே செலுத்தமுடியாமல் ஆக்கியிருக்கிறது. வீடியோவை வெளியிட்ட சன் டி.வி, செய்திகளை வெளியிட்ட நக்கீரன் இதழ் ஆகியோரின் வணிக நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது.

சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடும், தயாரிக்கும் படங்களிலும், அதன் தோழமைத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி காட்டும் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளிலும், முதலமைச்சருக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் நடத்தப்படும் சினிமாக்காரர்களின் நடன நிகழ்ச்சிகளிலும் நக்கீரன் குழும இதழ்களில் பயபடுத்தப்படும் பச்சையான வார்த்தைப் பிரயோகங்களிலும் இடம் பெறும் ஆபாசங்களோடு ஒப்பிடும்போது இது வரை காட்டப்பட்ட நித்யானந்தா-ரஞ்சிதா காட்சிகள் இன்னமும் அந்தத் ‘தரத்தை’ எட்டவில்லை.

நித்யானந்தாவின் செயல்கள் தமிழ்க் கலாசாரத்தை மீறியதாகவும் அதை இழிவுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு வந்துள்ளதாக காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. தமிழ்க் கலாசாரம் என்பது என்ன என்று இ.பி.கோவில் வரையறுக்கப்படவில்லை. அறைக்குள் தனியே இருவர் கொஞ்சிக் கொள்வது எப்படி தமிழ்க் கலாசாரத்துக்கு விரோதமானதாக இருக்க முடியும் ? அதை ஒளிந்திருந்து பார்ப்பவரும் படம் எடுப்பவரும்தான் அநாகரிகமானவர்களாக இருக்க முடியும்.

பிரேமானந்தா விவகாரத்தில் அவர் தன்னுடன் உறவு கொள்ளக் கட்டாயப்படுத்தியதாக சில பெண்கள் முன்வந்து புகார் செய்தது போல நித்யானந்தா விஷயத்தில் இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை. வீடியோ காட்சிகள், இரு வயது வந்தவர்கள் தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் உறவாடிக் கொண்டிருப்பதையே தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த வீடியோவின் அடிப்படையில் நடிகை ரஞ்சிதா மீது எந்தக் குற்றச்சாட்டும் வைப்பதற்கான முகாந்தரங்களே இல்லை. தான் விருப்பப்படுபவருடன் அவர் சம்மதத்துடன் உறவு கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனால் இன்னொருவர் பாதிக்கப்பட்டால் மட்டுமே சிக்கலும் குற்றச்சாட்டும் வரமுடியும். ரஞ்சிதாவின் பிரைவசியில் தலையிட்டதற்காக அவர் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈட்டை கலாநிதி மாறனிடமும் கோபாலிடமும் சட்டப்படி கோர முடியும்.

நித்யானந்தா மீது சட்டப்படி வைக்கக்கூடிய குற்றச்சாட்டு என்னவாக இருக்க முடியும் ? செக்‌ஷன் 420ஐத் தவிர வேறு எதுவும் இல்லை. ஏமாற்றுதல், நம்பிக்கைத்துரோகம் என்று சொல்லல்லாம். அந்தக் குற்றச்சாட்டையும் அவரது பக்தர்கள்தான் வைக்க வேண்டும். பிரும்மச்சரியத்தை உபதேசித்து எங்களை வழிநடத்திவிட்டு நீ இப்படி கிருஹஸ்தனாக இருந்திருக்கிறாயே என்ற குற்றச்சாட்டைத்தான் நியாயமாக வைக்கமுடியும்.

சொல் ஒன்று செயல் வேறு ஆக இருந்து ஏமாற்றியதுதான் நித்யானந்தாவின் குற்றம். ஆனால் இந்தக் குற்றம் உயர் பதவிகளில் இருப்பவர்கள் முதல் வட்டச் செயலாளர் வரை தமிழக அரசியலில் இருக்கும் ஏராளமானவர்கள் தொடர்ந்து செய்துவருவதுதான். அவர்கள் ஆதாரத்தோடு சிக்குவதில்லை. நித்யானந்தா சிக்கிவிட்டார்.

நித்யானந்தா மாதிரி போலி சாமியார்கள் மக்கள் ஆதரவுடன்தான் வளர்கிறார்கள். மக்கள் ஆதரவு செயற்கையாக ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் உருவாக்கப்படுகிறது.


அரசியல்வாதிகள் பின்பற்றும் அதே உத்திகளைத்தான் இந்த போலி சாமியார்களும் பின்பற்றுகிறார்கள். அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள்; இவர்களால் நம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்ற விரக்தி நிலையில் இருக்கும் மக்கள், கடவுளையும் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு வரும் சாமியார்களையும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் என்ற உண்மையை அவ்வப்போது பிரேமானந்தா, ஜயேந்திரா, நித்யானந்தா போன்றவர்கள் உணர்த்தினாலும் மக்கள் அடுத்த சாமியாருக்குக் கப்பம் கட்டத் தயாராகிவிடுகிறார்கள். ஊடகங்களும் பத்திரிகைகளும் சாமியார்களின் ஏஜண்ட்டுகளாக வேலை பார்ப்பதே சிக்கலுக்குக் காரணம்.

உடல் நலம், மன நலம் இவை இரண்டிற்காகவும் எந்த சாமியாரிடமும் செல்லத் தேவையில்லை. இரண்டுமே நம் கையிலேயேதான் இருக்கின்றன என்ற தெளிவு குடும்பத்துக்குள்ளும் பள்ளிக் கல்வியிலும் கிடைக்குமானால், பல சிக்கல்கள் தீர்ந்துவிடும்.

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ விவகாரத்தில், மிகப் பெரிய குற்றவாளிகளாக நான் கருதுவது சன் டி.வி அதிபர் கலாநிதி மாறனையும் நக்கீரன் அதிபர் கோபாலையும்தான். குழந்தைகள், சிறுவர்கள் பார்க்கத் தகுதியற்ற வீடியோ காட்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னால், இவை சிறுவர் பார்க்கத் தகுதியற்றவை என்று அறிவிப்பு வெளியிடுவது உலக முழுவதும் டி.வி.சேனல்களின் நெறிகளில் ஒன்று. அதை சன் டி.வி. கடைப்பிடிக்கவே இல்லை. நக்கீரன் போன்று கிளுகிளுப்புக்காக இந்த விஷயங்களைப் பயன்படுத்தும் பத்திரிகைகள்தான் , இன்வெஸ்ட்டிகேட்டிவ் ஜர்னலிசம் என்ற துறைக்கே அவமானத்தை ஏற்படுத்துகின்றன்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படவேண்டியது நித்யானந்தா மட்டுமல்ல, கலாநிதி மாறனும் கோபாலும்தான். ஆபாசப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிக்கவேண்டாமென்று தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிடுகிறார். நித்யானந்தாவுக்கு மட்டும் வழக்கு. கலாநிதிக்கும் கோபாலுக்கும் மட்டும் வேண்டுகோளா ? இவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும் நாணயம் வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்

- ஞானி

நன்றி :http://www.gnani.net