நீ எனக்கு வேண்டாமடி

சைனாவுக்கு போக வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்

இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர் சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும்
ஆனந்தப்படுவானே?

அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
நான்
செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!

அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
***

இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவகை;கும்
நீ எனக்கு
வேண்டாமடி!

- ரசிகவ் ஞானியார்