தஞ்சை கோவில் சென்டிமென்ட்: மாற்று வழியாக செல்ல பணி தீவிரம்

தஞ்சாவூர் : தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழாவில், முதல்வர் உட்பட வி.ஐ.பி.,க்கள், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே வர வழி அமைக்கப்படுகிறது. இதற்காக, சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, பூங்கா செடிகள் அழிக்கப்படுகின்றன.

தஞ்சை பெரியகோவில் 1,000வது ஆண்டு விழா, வரும் 22 முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் பல்கலையில் 24ம் தேதி, முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் ஆய்வரங்கமும், 26ம் தேதி மாலை, ஆயுதப்படை மைதானத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவும் நடக்கிறது. பதவி, ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, பெரிய கோவிலின் பிரதான வாயிலான கேரளந்தான் வாயில் வழியாக, வி.ஐ.பி.,க்கள் எவரும் வந்து செல்வதை விரும்புவதில்லை. இந்திரா காந்தி, சங்கர்தயாள் சர்மா, எம்.ஜி.ஆர்., உட்பட பலரை, இதற்கு சாட்சியாகக் கூறுவர். பெரிய கோவில் தீ விபத்து சமயத்தில், ஜி.கே.மூப்பனார் பிரதான வாயிலை தவிர்த்தார். முதல்வர் கருணாநிதி, சிவகங்கை பூங்கா வழியாக கோவிலுக்குள் வந்து, அதே வழியில் திரும்பினார். முதல்வர் உட்பட வி.ஐ.பி.,க்கள் பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக உள்ளே செல்ல ஏற்பாடு நடக்கிறது.

அதற்காக சிவகங்கை பூங்கா நுழைவாயிலில் இருந்து தளம் அமைத்தல், பெரிய கோவிலுக்குள் நுழையும் பகுதியில் உள்ள சுவரை அகற்றி பாதை அமைத்தல், அவ்வழியில் உள்ள பூங்காவில் செடி அகற்றுதல் போன்ற பணி நடக்கிறது. இவர்கள், சிவகங்கை பூங்கா வழியாக நுழைந்து, மகா வராகி சன்னிதி மற்றும் தொல்லியல் ஆய்வுத்துறை கண்காட்சியகத்துக்கு அருகிலுள்ள வாயில் வழியாக உள்ளே நுழைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய கோவில் வளாகத்தில், ஒரு சிறிய கல்லை நகர்த்தி வைக்கக்கூட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அனுமதி பெற்றே செய்யப்படும். பெரிய கோவிலுக்கு அடிக்கடி வந்து செல்வோர் மத்தியில் இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது