திருப்பூரில் இரண்டு ஆண்டுகளில் 980 பேர் தற்கொலை

ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை திருப்பூர் நகரில் 980 பேர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக மேற்கு மண்டல ஐ ஜி சிவனாண்டி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களில் இருந்து வேலை தேடி வந்த 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள்.

குறிப்பாக ஜாதி, மத பிளவுகளை மீறி கலப்பு மணம் புரிந்த ஆண்கள் சமூக அழுத்தங்களை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூர்த்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் ஊதியப் பற்றாக் குறையாலும், கடன் தொல்லையாலும் பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தொழற்சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இக்கூற்றை ஏற்றுமதியாளர்கள் மறுக்கின்றனர்.