இது தீண்டாமை தேசம்!

தீண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டின் கொடுங்கனவாகவே இருக்கும். 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்ற குரல்களுக்கும் 'சர்ட்டிஃபிகேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது’ என்கிற குரல்களுக்கும் தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய வரலாற்றுப் பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும் இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின் உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு கோரப் பல் இருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமமாகத்தான் இருக்கும்!
சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''கடந்த தி.மு.க. ஆட்சி யில் தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம். நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தக் குழு, பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே, தற்போதைய அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தவர், ''தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன'' என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ''சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன. அது மாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்தினார்.
85 வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஓர் ஆய்வை வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும் இங்கே...
213 கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடைகளில் சாதியப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன் ரேஷன் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக் கூடாது. 2 சதவிகித நியாய விலைக் கடைகள் மட்டுமே தலித் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற ரேஷன் கடைகளுக்குத்தான் தலித் மக்கள் செல்ல வேண்டும்
24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ரேஷன் கடை வரிசையில் நிற்கும்போது அவரது கை, ஆதிக்கச் சாதிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்.
தலித் மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன. தலித் மக்களுக்குத் தனிச் சுடுகாடும் மற்ற சாதியினருக்குத் தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில் உண்டு.
02.01.2011 அன்று தேனி அருகில் உள்ள கூழையனூ ரில் ராஜு என்கிற தலித் பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக் கம் செய்யக் கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில், 27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையனூரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப் பத்திரம் ஒன்று எழுதி, தலித்களும் மற்ற சாதியினரும் தனித் தனி மயானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எழுதிக் கையெழுத் திட்டு உள்ளனர்.
67 சதவிகிதக் கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 142 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என்று சாதிக் கட்டுப்பாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்தரிக்கோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும் மற்றசாதி யினருக்குத் தனியாகவும் பயன்படுத்தப் படுகின்றன. 25 கிராமங்களில் சலூன் கடை நாற்காலிகளில் தலித்துகள் அமரக் கூடாது
12.01.2008 அன்று உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் தன் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி என்னும் தலித் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர் குழந்தைகள் முன்பே சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.
68 சதவிகிதக் கிராமங்களில் பொதுக் குழாயில் நீர் எடுக்கவும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்ற தலித் இளைஞர் பொதுக் கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக் கும்பலால் தாக்கப்பட்டார்.
சில கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தலித்துகளைத் தொட்டு மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தபோது, அங்கு இருந்த ஊழியர் கொண்டைஊசியால் பனிக்குடத்தைக் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரகக் குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை!
29 கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை மைனஸ் என்றும் மற்ற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகில் உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித் சிறுவர்கள் பின் வரிசை இருக்கைகளில்தான் அமரவைக்கப்படுவார்களாம்.
பேருந்துப் பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதிப் பாகுபாடு உண்டு. பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளில் தலித்துகள் அமரக் கூடாது என்கிற கொடுமையும் உண்டு. ஆதிக்கச் சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், தலித் முதியவர்களைக்கூட ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் மரியாதை இல்லாமல் அழைப்பதும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை!
அஞ்சலகங்களில் தலித்துகள் நுழையக் கூடாது. தபால்காரர் தலித் குடியிருப்புக்குள் வர மாட்டார், தலித் குழந்தைகளுடன் ஆதிக்கச் சாதி குழந்தைகள் விளையாடக் கூடாது, பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவது என்று ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை தீண்டாமை அங்கீகரிக்கப்பட்ட கொடுமைதான் நிலவுகிறது.
தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மற்ற சாதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நாற்காலியில் அமர அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைகளும் உள்ளன
''இவை வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே ஆய்வு செய்த முடிவுகள். இன்னும் ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இதுகுறித்த முறையான புள்ளிவிவரங் களும் கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை நிலவுவதாகச் சொன்ன தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக பி.சி.ஆர்(1955), எஸ்.சி, எஸ்.டி. சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்தச் சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. 2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக வெறுமனே தமிழகம் முழுவதும் 1,050 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன'' என்று வேதனை தெரிவிக்கிறார் 'எவிடென்ஸ்’ கதிர்.
தீண்டாமையை ஒழிப்பதற்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் இயங்குகிறது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை முறையைக் கணக்கெடுத்து, இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டங்களையும் நடத்திய பெரியார் தி.க. சமீபத்தில் போராட்டம் நடத்திய இடம் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.
காலம் மாறினால் தீண்டாமை மாறும் என்பது நமது நம்பிக்கையாக இருந்தாலும் உண்மையில், காலம் மாற மாற... சாதியும் தீண்டாமையும் அதற்கேற்பத் தன் வடிவங் களை மாற்றிக்கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன் பாளை யம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம் பாளையம் கிராமங்களில் தலித் மக்கள் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்கிற 'மரபான’ தீண்டாமையோடு, அவர்கள் பொது இடங்களில் செல்போன் பேசக் கூடாது, பைக் ஓட்டக் கூடாது போன்ற 'நவீன’ தீண்டாமைகளும் தொடர் கின்றன.
1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ''இத்தகைய தீண்டாமைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர், சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 'அன்னூர் உள்வட்டத் தில் இரட்டைக் குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை இல்லை’ என்றும், இது தொடர்பாக 'தனிப்பட்ட நபர்கள் மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை’ என்றும், 'அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமைப் பிரச்னை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாக’வும் எழுதியுள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி, உயர் நீதிமன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் 'எந்தப் பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பி-யையும் கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று தெளிவா கக் கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டங்களின் மூலமாகவே மட்டுமே தீண்டாமையை ஒழித்துவிட முடியாது என்றாலும், கடுமையான சட்டங்களும் இத்தகைய சாதிப் பாகுபாட்டை ஒழிக்க ஒரு வழிதான்!'' என்கிறார் கொளத்தூர் மணி.
தலித் மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலித் கட்சிகள், அந்தப் பிரச்னைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்த் தேசியம் எனத் திசை திரும்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஓட்டுக் கட்சிகளோ ஆதிக்கச் சாதியின் வாக்கு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்னைகளைப் பேச மறுக்கும் துயரம் மறு புறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.
இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே '2020-ல் இந்தியா வல்லரசு’, இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம்கொண்ட உலகமயமாக்கம், தகவல் தொழில்நுட்ப யுகம், இலவசத் திட்டங்கள் என்கிற குரல்களைக் கேட்கும்போது,


'ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும் - ஒங்க
ஊர்வலத்தில தர்ம அடியை வாங்கிக் கட்டவும் -எங்க
முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா
காலம் பூராவும்?

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணையை ஊத்துதே
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’

என்கிற இன்குலாப்பின் 'மனுசங்கடா’ பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!


Source :Vikatan.com

Exclusive - How Sonia Gandhi's Son-In-Law became India's Fastest Multi-Billionaire..??




Special dedication to people who voted for Congress 

Srilankan Tamil's Documentary








18 பெண்களின் கற்பு... 19 வருட வழக்கு!

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்​காவில் இருக்கும் மலை அடிவாரக் கிராமம் வாச்சாத்தி. இந்தக் கிராமம் தொடர்பான வழக்கு ஒன்று, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது... நடக்கிறது... நடந்து​கொண்டே இருக்கிறது!

முதலில், அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்...
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட... அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். 'சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்...’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.
அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று... வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.
வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.
இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.
உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, 'சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று 'ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ''என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.
பாதிக்கப்பட்ட முருகன், ''எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க... வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா... இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!'' என்றார்.
மனித உரிமைக்கான 'குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ''எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!'' என்றார்.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள்!

source Vikatan