இவள் ஒரு தெய்வத்தாய் !



 ''அப்பப்பா... இதுகள வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியலடா சாமீ'' என்று பல சமயங்களில் குழந்தைகளைப் பற்றி அலுத்துக் கொள்வோம். இத்தனைக்கும் எப்போதும் ஓடியாடி, சுறுசுறுவென்று திரியும் குழந்தை களை வைத்துக் கொண்டே!
இங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, கொஞ்சம்கூட நடமாடவே செய்யாத மூன்று குழந்தைகளை, துளிகூட பாசம் குறையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறார் கிராமத்து மணம் மாறாத வெள்ளந்தித் தாய்!



திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்திராவுக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் செல்வி, செல்வம் மற்றும் சுகன்யா மூன்று பேரும் முழுமையாக மூளை மற்றும் உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக முடங்கியே கிடக்கின்றனர்.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது சந்திராவின் சின்னஞ் சிறிய வீடு. உள்ளே நுழைந்தால்... சிறிய அறை ஒன்றில் வரிசை யாகப் படுத்திருக்கின்றன மூன்று குழந்தை களும். கண்களை அகல விரித்து நம்மை பார்த்து, ஏதேதோ சத்தத்தை எழுப்பி வரவேற்கின்றன!


''வீட்டுக்காரர் கொத்து வேலை செய்றார். கல்யாணமான ஒரு வருஷத்துக்குப் பிறகு, முதல்ல செல்வி பொறந்துச்சு. எல்லா குழந்தைங்கள மாதிரிதான் நடமாடிட்டிருந்தா. ஆனா, நாளடைவுல கால், கைகள்ல அசைவு இல்லாம இருந்ததால டாக்டர்கிட்ட காட்டி னோம். அப்போதான்... பிறவியிலயே உடல் வளர்ச்சி முறையா இல்லைங்கறது  தெரிஞ்சுது'' விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்த சந்திரா...
''ஆண்டவன் விட்ட வழினு மனசை தேத்திக் கிட்டு வளர்க்க ஆரம்பிச்சோம். ஆனா, அடுத்தடுத்து பிறந்த ஆணு, பொண்ணுனு (செல்வம் மற்றும் சுகன்யா) ரெண்டு குழந்தைக்கும் அதே கதிதான். மனசொடிஞ்சு போன வீட்டுக்காரர் குடிக்க ஆரம்பிச்சார். அதனால, தினமும் வீட்டுல சண்டைதான். 'தற்கொலை செஞ்சுக்குவோம்'ங்கற நினைப்பு கூட வந்திருக்கு. ஆனா, 'இந்தக் குழந்தைங்கள யார் காப்பாத்துவா?'னு நினைக்கும்போதே... அந்த நினைப்பெல்லாம் ஓடிடும்.
எட்டு வருஷத்துக்குப் பிறகு, நாலாவதா பெண் குழந்தை (அந்தோணியம்மாள்) பிறந்தா. நல்லவேளையா எந்தக் குறையும் இல்ல. வள்ளியூர்ல இருக்கற மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ஏழாவது படிக்கறா. எங்க சோகத் தைப் பார்த்துட்டு, ஃபீஸ் செலவையெல்லாம் ஸ்கூல் நிர்வாக பாத்துக்குது. அவள நல்லா படிக்க வெச்சு, நடமாட முடியாம கிடக்கற மத்த குழந்தைங்கள கவனிக்கற அளவுக்கு உருவாக்கணும்கறதுதான் என்னோட ஆசை'' என்று சொல்லும் சந்திராவுக்கு, அடுத்ததும் ஒரு சோகம்!
''இனி, நல்லபடியாதான் குழந்தை பொறக் கும்னு அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு குழந்தை (அந்தோணிராஜ்) பெத்துக்கிட்டோம். ஆனா, பழையபடியே பிரச்னை. நடமாட முடியாம, பேச்சும் சரியா வராம அவதிதான். உள்ளூர் ஸ்கூலுக்கு நான் தூக்கிட்டுப் போய் உட்கார வெப்பேன். சுவத்துல சாய்ஞ்சுகிட்டு உட்கார்ந்திருப்பான். ம்... நல்லா படிக்கறதா டீச்சர் சொல்றாங்க'' என்று பெருமூச்சு விடுகிறார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று குழந்தைகளுக்குமே அந்தச் சின்னஞ்சிறு அறைதான் உலகம். பசித்தால் அழ வேண்டும் என்பதுகூட சொல்லத் தெரியாமல் வளர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு... நேரம் தவறாமல் படுக்கையிலேயே ஊட்டிவிடுகிறார் சந்திரா. 'ஜீன்களின் கோளாறு... சொந்தத்தில் திருமணம் முடித்தது' என்றெல்லாம் டாக்டர்கள் காரணம் சொல்கிறார்களாம். ஆனால், இதுதான் என்று உறுதிப்படுத்தும் மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு நேரமோ, வசதியோ, வாய்ப்போ இல்லாமலிருக்கிறார் சந்திரா.
''ஊரைவிட்டு வெளியில போய் 20 வருஷமாச்சு. உள்ளூர் விசேஷத்துக்கு மட்டும் போயிக்கிட்டிருந் தேன். ஒரு தடவை, 'இப்படிப்பட்ட பிள்ளைகளை வீட்டுல வெச்சுக் காப்பாத்தி என்ன பிரயோஜனம்? பேசாம கொன்னு போட்டுடு’னு நெஞ்சுல இரக்கமே இல்லாம சிலர் சொல்லவும்... அழுது கிட்டே வீட்டுக்கு வந்துட்டேன். அதிலிருந்தே எதுக்கும் போறதில்ல'' என்று குமுறுகிறார் சந்திரா.
''இந்தக் குழந்தைகளை நாங்கள் பராமரிக்கிறோம்... நிறைய பண உதவி செய்கிறோம்... ஏ.சி. அறையிலயே குழந்தைகள தங்க வைக்கலாம்... வெளிநாட்டில் இருந்து நிறைய பணம் வரும்'' என்றபடி பலரும் அணுகியபடியே இருக்கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் இந்தத் தாய் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரே பதில் -
''நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்.

- If God Is Great Mother is Greatest.

அதேநேரத்தில். இப்படிப்பட்ட நிலமைக்கான காரணத்தைய்ம் ஆராய வேண்டியிருக்கிறது.
1) படிப்பறிவு இல்லாமை
2) அடிப்படை மருத்துவ வசதி இல்லாத்து
3) மிதமிஞ்சிய நம்பிக்கை- பிரச்சினையுடன் பிறந்த மூன்று குழந்தைகளுக்குப் பிறகும் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டது; கடவுளின் அருளால் குறை ஏதும் இல்லாமல் இருப்பதை நினைத்து திருப்தி அடையாமல் மறுபடியும் ஒன்று தேவையா?

"நாங்க பெத்தெடுத்த செல்வங்கள காட்சிப் பொருளாக்கி சாப்பிடற அளவுக்கு வக்கத்து போயிடல. கூழோ, கஞ்சியோ கிடைக்கிறத வெச்சு நாங்களும் புள்ளைகளும் காலத்தை தள்ளிடுவோம்."- இதெல்லாம் காட்க நல்லாத்தான் இருக்கு! ஆனால் உங்களுக்குப் பிறகு இவர்களை யார் கவனிப்பார்கள்? அதற்காக எவ்வளவு செல்வம் சேர்த்து வைத்துவிட்டு போகப்போகிறார்கள்? என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு பொறுப்பில்லாத தாயாகவேத் தோன்றுகிறார்.

மனித கொல்லிகள்! -எண்டோசல்ஃபான்


 1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டி காவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.
கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன.

மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்டோ சல்ஃபானைப் பயன்படுத்தும் அனுமதியைப் பெற்று இருக்கிறது இந்தியா. இதற்கு நம்முடைய அரசு சொல்லும் சப்பைக்கட்டு, மாற்றுப் பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் இல்லை என்பது!
இயற்கை வேளாண்மையில், காலங்காலமாக மூலிகைப் பூச்சி விரட்டியை நாம் பயன்படுத்து கிறோம். நவீன வேளாண்மையிலும்கூட, வேப்ப எண்ணெய் கலந்து அடி உரம் இட்டால், பூச்சி கள் அண்டாது. இப்போதுகூட, ஆந்திரத்தில் அரசே நூற்றுக்கணக்கான கிராமங்களை இயற்கை வேளாண்மைக்குத் திருப்பி வெற்றி பெற்று இருக் கிறது. ஆக, உண்மையான காரணம் மாற்று இல்லை என்பது அல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு, 8,500 டன் எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படு கிறது.  4,000 கோடி இந்தத் தொழிலில் புரளு கிறது. காசு அரசின் கண்களை மறைக்கிறது!
இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கேரளத்தில் காசர்கோடு பகுதியில் பலர், புற்றுநோய், மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். மண்ணே நஞ்சானது. கடும் எதிர்ப்பால் கேரளம், எண்டோசல்ஃபானுக்குத் தடை விதித்தது. தொடர்ந்து, கர்நாடகமும் தடை விதித்தது. இந்தத் தடை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், விஷத்துக்கு ஆதரவாகவே முடிவு எடுத்திருக்கிறது அரசு.
இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

Thanks : Vikatan


பாரக் ஒசாமா (அ) ஒபாமா பின்லேடன் என்கிற அமெரிக்க அதிபருக்கு ஒரு மடல் ...


அன்புள்ள அமெரிக்க  பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். 

தாங்கள் எப்போதும் நலம் என அறிவேன்.   கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. 

பின்லேடன் கொலையை தாங்கள்  தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில்  பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். பின்லேடனின் கடைசி நிமிடம் என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும்.      

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக உங்கள் ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா? உங்கள் நாட்டில் அதற்குள்  அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே? ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும்.      

இரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர்.  இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்? 

உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி  நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? நாளை நீங்கள் வேறு ஒருவனை பிடிக்க இந்தியாவுக்குள்ளும் நுழை வீர்கள்தானே?

இரட்டைகோபுர தாக்குதல் நடந்தவுடன் உங்கள் நாட்டின் அன்றைய அதிபர் ஜூனியர் புஷ், பின்லேடனை பிடிக்க உத்திரவிட்டார். ஒன்று அமெரிக்கா பக்கம் நில்லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என கொக்கரித்தார்! பின்லேடனை பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் தாலிபான்களை வீழ்த்துவதும், அங்குள்ள பெண்களை பர்தாவுக்குளிருந்து பாதுகாப்பதுமே எங்கள் கடமை என்றார். அன்று ஆப்கானுக்குள் நுழைந்தீர்கள்.. இன்று பாகிஸ்தான்.

அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால், ஒரு சர்வதேச குற்றவாளியை கொன்றதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறீர்கள். கேள்வி, ஒசாமாவை கொன்றதல்ல, அத்துமீறி ஒரு நாட்டில் நுழைவதுதான். சரி உங்கள் நாடு செய்திருக்கிற படுகொலைகளை பட்டியல் போட்டு உங்கள் நாட்டுக்குள் கைது செய்ய புகுந்தால் அதிகாரத்தில் இருப்போரில் எத்தனை பேர் மிஞ்சுவீர்?

1991 ஆம் ஆண்டு சீனியர் புஷ் இராக்கில் நடத்திய தாக்குதலில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ விடம் பயிற்சி பெற்றவர்களால் கொல் லப்பட்ட 1,50,000 ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணு குண்டுகளால் கொடூரமாக அழித் தொழிக்கப்பட்ட மூன்று லட்சம் ஜப்பானிய மக்களுக்கும், வியட் நாமில் நேபாம் குண்டுகளுக்கு இரை யான அப்பாவி மக்களுக்கும், 1989ல் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்படு அகதிகளாக்கப்பட்ட பனாமா மக்களுக்கும், உங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரே கார ணத்திற்காக இராக், கியூபா போன்ற நாடுகளுக்கு உணவும், மருந்தும் கிடைப்பதை தடைசெய்து அதனால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று எல்லோரும் புறப் பட்டால் உங்கள் கதி என்னாகும் அதிபரே!

இவற்றையெல்லாம் விடுங்கள், இப்போது உங்கள் நாட்டின் முக்கிய அலுவலகங்கள் இருக்கிற சான் டாஃபே நகரத்தின் கதை தெரியுமா? அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா? இப்போது தெரிகிறதா உலகில் மிகப்பெரிய பயங் கரவாதிகளின் தலைவன் நீங்கள் என உங்களுக்கு இன்னும் உங்கள் பூர்வீகம் தெரிய வேண்டுமெனில் தென் அமெரிக்காவின் சிலி மட்டு மல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரே சில், பெரு, டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டு ராஸ், பனாமா, எல்சால்வடார், மெக் ஸிகோ, கொலம்பியா போன்ற நாட் டின் மக்களைக் கேளுங்கள்.

இவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனீர்கள்?  ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே! இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே? தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடூரமான அத்துமீறல்களை செய்தீர்கள்.

உங்களால் ஒசாமாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார். சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி பல அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சனை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண் மைகள் வெளியே வரும் என்பதால் உயி ருடன் பிடிக்க வாய்ப்பி ருந்தும் கொலை செய்தீர் கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா? எதுவா கினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
காரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.

சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; 
நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; 
மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; 
ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. 

இந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். அது போல உங்கள் நாட்டிற்கு உங்கள் கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப்படுத்துவது உலகை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.

அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்க னுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல் முறை என பெயரெடுக்க வேண்டுமெனில்.. கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.