ஏன் இந்தத் தற்கொலை வெறி ?

“காதல் வந்தால் சொல்லியனுப்பு…. உயிரோடிருந்தால் வருகிறேன்”, என்று ஒரு பிரபலமான சினிமாப் பாடலின் வரிகள் சொல்கின்றன. காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டியிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்சினையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படி பிரச்சினையாகிறது என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
என் காதல் அனுபவங்களைப் பற்றிப் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு கட்டுரையில் ஒருபகுதி இப்படிப்போகிறது – ” சிறந்த காதலர்களால்தான் சிறந்த நட்பைப் புரிந்து கொள்ளமுடியும். காதலைக் கண்டு பயப்படுகிறவர்கள்தான் ஆண்- பெண் நட்பைக் கண்டும் அஞ்சி அஞ்சிச் சாவார்கள். எல்லா நட்பும் காதலாக மலரவேண்டியது இல்லை என்பது அவர்களுக்குப் புரியாது. எல்லா ஆண்- பெண் நட்பும் காமத்திலேயே சென்று முடியும் என்பது அவர்களின் நிரந்தர பயம். உறவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பது நம் சமூகத்தில் புரையோடியிருக்கிற நோய். செக்ஸ்,காதல் பற்றியெல்லாம் ஆரோக்கியமான சூழல் இல்லாமல் வக்கரிப்பான சினிமாக்களே இதற்கு ஆசானாக விளங்குவது இந்த நோயின் இன்னொரு அறிகுறி”
படிப்பறிவு இல்லாத அரைகுறை எழுத்தறிவு உள்ள இளைஞர்களும் காதல் ‘தோல்வி’யில் தற்கொலை செய்கிறார்கள், உயர் படிப்பு படிக்கும் அறிவார்ந்த இளைஞர்களும் அதையே செய்கிறார்கள். எனவே காதல் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இரு சாராருக்கும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
காதலில் ‘தோல்வி’ என்பது என்ன ?
ஒருதலைக் காதலை தோல்வி என்கிறார்கள். எனக்குப் பிடித்த பெண்ணுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் அது காதல் தோல்வியாம். உடனே தற்கொலை செய்கிறார்கள். இந்த ‘தோல்வி’ லாஜிக்படி பார்த்தால் காதலிக்காமல், ஏற்பாடு செய்யும் திருமணமுயற்சிகளில் பெண் பார்க்கப் போகிறவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளவேண்டுமா? அல்லது எப்படியாவது அவளுக்குத் தன்னைப் பிடிக்கச் செய்யவேண்டும் என்று டார்ச்சர் செய்யமுடியுமா?
காதல் ஹார்மோன்களின் தூண்டுதலினால், உடலின் தேவைகளுடன் மனதின் தேவைகளும் சேர்ந்துகொண்டு உசுப்பிவிடும் ஓர் உணர்வு. இதைப் பக்குவமாக வசப்படுத்தத் தவறினால் பழத்தை வெட்டுவதற்கு பதில் கையை வெட்டும் கத்தியாகிவிடும்.
காதலில் இறுதி வெற்றி என்பது என்ன ?
அப்போது சொன்னதைத்தான் இப்போதும் சொல்லத் தோன்றுகிறது. “காதலின் இயல்பான முற்றுப் புள்ளி காமம்தான் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. கல்யாணத்தில் முடிவதுதான் நிஜக் காதல் என்றும் சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் காதலின் இறுதி வெற்றி என்பது அதில் வயப்பட்டிருந்த இருவருக்குமே அந்த அனுபவம் எந்த காலத்தில் நினைத்துப் பார்த்தாலும், துளியும் வலிகளற்ற இனிமையாக்வே இருக்கமுடியுமானால் அதுதான் வெற்றி பெற்ற காதல்.இந்த இனிமையைத்தொடர்ந்து நீடிப்பதற்கான கருவியாக திருமணமும் அமைந்தால் அது போனஸ் வெற்றி. திருமணத்துக்குப் பிறகு காதலைத் தொலைத்துவிட்டவர்கள் வாய்ப்பை நழுவவிட்ட முட்டாள்கள்; சபிக்கப்பட்டவர்கள்.”
ஆனால் நம் சமூகத்தில் இன்று காதல் என்பது ஆணும் பெண்ணும் சாமர்த்தியமாகத் தனக்கான , தன் இச்சைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தோதான அடிமையை வடிவமைத்து வசப்படுத்தும் சூழ்ச்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. காதல் என்றால் என்ன என்று புரியாத மனநிலையே இதற்குக் காரணம். காதல் ஒருவர் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், எதிர் நபரையும் அழிக்காமல் இருவரையும் வளப்படுத்தும் பகிர்தல். ஆனால் இன்னொரு நபரைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து தன் உடமையாக்கிக் கொள்ளும் மனநிலையாகவே காதல் பயன்படுத்தப் படுகிறது. அப்படி உடமையாக்கிக் கொள்ளமுடியாவிட்டால், இருவரில் ஒருவர் மற்றவரை அழிப்பதாகவோ தன்னையே அழித்துக் கொள்வதாகவோ முடிகிறது.
தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றும் ஒருவனை எப்படி காதலன் என்று சொல்ல முடியும் ? அதில் எங்கே இருக்கிறது காதல் ? தன் அன்பை ஒருவர் ஏற்காவிட்டால், அந்த அன்பை இனி யாருக்குமே காட்டமுடியாது என்று சொல்லி தன்னையே அழித்துக் கொள்ளும் மனதில் ஏது காதல் ? என்னைக் காதலிக்க மறுத்தால் நான் கையைக் கிழித்துக் கொள்வேன், சாவேன் என்று மிரட்டி எதிராளை அன்பு செலுத்தக் கட்டாயப்படுத்துவது எப்படி காதலாகும் ? அது வெறும் பிளாக்மெயில்தானே ?
ஆனால் காதல் என்பது என்னவென்றே தெரியாமலே தாங்கள் காதலிலிருப்பதாக நம்பும் பலரை சினிமாவும் ஊடகங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. உடல்முதிர்ச்சியை மட்டும் பயன்படுத்துவது காமம். அத்துடன் மனமுதிர்ச்சியும் இணைந்தால்தான் காதல்.
இன்றைய வாழ்க்கை முறையின் விளைவாக உடல் முதிர்ச்சி பத்து பதினோரு வயதிலேயே ஏற்படத் தொடங்கிவிடுகிறது. பெண்கள் பருவமெய்தும் வயது 14லிருந்து இன்று பத்தைத் தொட்டுவிட்டது.
ஆனால் மன முதிர்ச்சிக்குக் குறைந்தபட்ச வயது தேவை. கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி அலைந்து ஒரு வேலை கிடைத்து அதில் பல மனிதர்களுடன் உறவாடும் வேளையில்தான் மனப் பக்குவம் தொடங்குவது சாத்தியமாகிறது. இது பொதுவிதி. விதிவிலக்குகள் மிகக் குறைவாக எப்போதும் இருப்பார்கள். சுமார் 22, 23 வயதுக்குப் பிறகு தோன்றும் காதலில்தான் உடல் தேவையும் மனத் தேவையும் இணைந்த தேடல் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அதற்கு முன்பு நம் மனதின் தேவைகள் என்ன என்று யோசித்து தேர்ந்தெடுத்து தொகுத்து வாழ்க்கையின் குறிக் கோள்களை வகுத்துவிடும் வாய்ப்பு குறைவு. உடலின் தேவைகள் மட்டுமே உறைக்கக்கூடிய வயதாகவும் மனம் எப்போதும் குழம்பிக் குழம்பித் தெளிவைத் தேடும் முயற்சியிலுமாக இருக்கும்.
ஆனால் நம் சினிமாகாரர்கள் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாதவர்கள். அறியாத வயசு, புரியாத மனசு., ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம் என்று நட்பையும் காதலையும் குழப்பியடித்து தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். சுமார் இருபது வருடம் முன்னர், பள்ளி இறுதி வகுப்பிலேயே கமர்ஷியலாக நுழைத்த காதலை இப்போது எட்டாங்கிளாசுக்குக் கொண்டு போய்விட்டார்கள்.
பொறுக்கியாக இருந்தால்தான் பெண்கள் விரும்புவார்கள் என்று ஒரு சூத்திரத்தை சினிமா விடாப்பிடியாகக் கையாண்டு வருகிறது. இதன் நீட்சியாக, என்ன பொறுக்கித்தனம் செய்தாவது ஒரு பெண்ணை தன்னைக் காதலிக்க வைப்பது காதல் தர்மம் என்று கதை பின்னப்படுகிறது.
அசல் வாழ்க்கையில் காதல் இப்படியெல்லாம் இல்லை. இவனை நியாயமாக வெறுப்பதற்கு பதிலாக, ஏன் எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியாமலே மயங்கும் பெண்களும் ஏன் இவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவே கஷ்டப்படும் பையன்களும் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு பள்ளி மாணவன் ‘காதல் தோல்வியால்’ தற்கொலை செய்துகொண்டபோது அவன் ஒரு தலையாக காதலித்த மாணவியிடம் விசாரித்தார்கள். “நிறைய பசங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்க. நான் எல்லார் கிட்டயும் நோதான் சொல்லியிருக்கேன். மத்தவங்கள்லாம் ஒண்ணும் செத்துப் போகலே. இவன் செத்துப் போனா அதுக்கு நான் என்ன செய்யமுடியும் ?” என்று அந்த மாணவி கேட்ட நியாயத்தை யாரும் பரிசீலிப்பதில்லை.
காதலை விடலைப்பருவத்திலிருந்து மழலைப் பருவத்துக்கு எடுத்துப் போய் கமர்ஷியலாக்கும் சினிமாவைப் பின்பற்றி விளம்பரக்காரர்களும் குழந்தைகளை பெரியவர்கள் போல நடக்கச் செய்யும் உத்திகளை கமர்ஷியல் விளம்பரங்களில் புகுத்த ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகள் சைட்டடிப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாக நெருக்கமாக உட்கார்ந்து கிசுகிசுப்பது என்று விடலைச் செயல்களை செய்வதை கமர்ஷியல் விளம்பரங்கள் பாலியல் தொனியுடன் காட்ட ஆரம்பித்துவிட்டன. சினிமாவை முன்தணிக்கை செய்யும் அரசு டி.வி விளம்பரங்களுக்கு முன்தணிக்கை பற்றி யோசிப்பது கூட இல்லை. வணிக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அரசின் பிரதமர், கொலை வெறிப் பாட்டின் கமர்ஷியல் வெற்றியையடுத்து அதன் நடிகரை சர்வதேச பிரமுகருடன் விருந்து சாப்பிட அழைப்பதென்பது அரசு வணிகத் துறையின் தரகராக மாறிவிட்ட சூழலின் அடையாளம்தான். இந்தச் சூழலில் சராசரி இளைஞர்கள் எப்படி தங்களுக்கான பக்குவத்தை அடைவார்கள் ?
தேர்வுக்கான பாடங்கள், அவற்றை வசப்படுத்துவதற்கான உத்திகள் இவற்றையெல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நேர்த்தியாகவும் திறமையாகவும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். ஆனால் விடலைப் பருவத்து பெண்ணுக்கோ ஆணுக்கோ தன் உடலையும் தன் மனதையும் தன் வசப்படுத்தி வைத்திருப்பதற்கான கல்வி இல்லை.
அதற்கான வழிகாட்டுதல் இன்று குடும்பத்திடம் கிடைப்பது இல்லை. மிடில் க்ளாஸ் குடும்பமும் அரசைப் போலவே பன்னாட்டு கம்பெனிகள் சார்ந்த கனவுலகில் திளைத்துக்கொண்டிருக்கிறது.
படிப்போடு சேர்த்து வாழ்க்கைக்கான திறன்களையும் வளரிளம் பருவத்திலேயே நம் சிறுவர்களுக்கு தரத் தவறினால் அதிகம் படித்தவன், கொஞ்சம் படித்தவன் என்று எல்லா தரப்பு இளைஞர்களிடையிலும் காதல் தோல்வி தற்கொலைகள், பரீட்சை தோல்வி தற்கொலைகள் பெருகுவது உறுதி.
பள்ளிப்படிப்போடு முடித்துவிட்டு மேலே படிக்க வசதியில்லாமல், குடும்பச் சூழலினால் வேலைகளுக்குச் செல்லும் இளைஞர் கூட்டம் இன்று மிகப் பெரிது. டீன் ஏஜில் இருக்கும் அந்தப் பிரிவினர் வாழ்க்கை என்பது கையில் கொஞ்சம் காசு புரள்வதாகவும், அன்றாட அலுவல் நிமித்தம் ஆண் பெண் சேர்ந்து உறவாடும் சூழலுடையதாகவும் இருக்கிறது. ஆனால் மனப்பக்குவம் இன்னும் வரப்பெறாத நிலையில் அந்த உறவுகளில் கடும் சிக்கல்கள் உருவாகின்றன. காத்திருக்கின்றன.
இனி தாமதிக்காமல் பள்ளிப்பருவத்திலேயே வாழ்க்கைத் திறன்களுக்கான கல்வியை தினசரி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்காவிட்டால், நாம் பல அருமையான உயிர்களை அபத்தமான காரணங்களுக்காக பலி கொடுக்கும் சமூகமாகிவிடுவோம். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் உளவியல் ஆலோசகர்களை நியமிப்பது என்பது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே மாறும். ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் தன் உடலையும் மனதையும் புரிந்துகொண்டு தன்வசத்தில் வைத்திருக்கும் சமூகமே நம் கனவாக இருக்கவேண்டும். அது நனவாக பள்ளிக் கூடத்திலேயே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆரோக்கியமான இளம் மனங்களை சிதைத்து நச்சாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், விளம்பரங்கள், சினிமாக்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் வேண்டும். சில கோடி ரூபாய் லாபங்களுக்காக பல கோடி மனிதர்களை பலி கொடுக்க முடியாது.

Source and Thanks : Gnani

முட்டாள்தனம்...

மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் "ஆளுகை'க்கு உள்பட்ட செம்புலப் பகுதியில் அரசுப் பணிக்காகச் செல்லும் அதிகாரிகள் கடத்தப்படும்போது அவர்களை மீட்பதற்காக மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஏற்பதற்கும், வெளிநாட்டு அரசின் பிரதிநிதி என்கின்ற அடையாளம் இல்லாத சாதாரண சுற்றுலாப் பயணிக்காக, அதிலும் தடை செய்யப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தும் அதை சட்டைசெய்யாமல் அங்கே சென்ற இரு வெளிநாட்டவரின் பொறுப்பின்மைக்காக, 27 கைதிகளை - இதில் 8 பேர் தீவிர மாவோயிஸ்டுகள் - விடுவிப்பது என்பது அரசின் நடவடிக்கைக்கு எத்தகைய குந்தகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பண்டமாற்று முறையில்கூட, ஒரு பொருளின் மதிப்புக்கேற்ற இன்னொரு பொருள்தான் விலையாகக் கொடுக்கப்படும். இந்த இத்தாலியர்கள் இருவரும் யார்? இவர்களது பின்னணிதான் என்ன? சுற்றுலாப் பயணிகள் போகத் தடை செய்யப்பட்ட பகுதிக்கு இவர்கள் போக வேண்டிய அவசியம் என்ன? இவர்கள் பழங்குடியினருக்குச் சேவை செய்ய வந்தவர்களும் அல்ல! அப்படியானால், இவர்கள் இந்தக் கடத்தல் நாடகத்துக்குத் துணை போவதற்காகவே உள்நோக்கத்துடன் வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கலாமா? விடுதலை செய்யப்படவுள்ள 27 பேரைப் பிடிக்க இந்தியக் காவல்துறையும் ராணுவமும் சிந்திய ரத்தத்துக்கு விலை இந்த சாதாரண, வெட்டியாக வந்த வெளிநாட்டவர்களா?
பழங்குடியின மக்கள் காலாகாலமாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த வனப்பகுதிகளை அழித்து, அவர்களை அங்கிருந்து விரட்டி, கனிமங்களை வெட்டி எடுத்து லாபம் கொழிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் தவறான கொள்கைகளை நமது மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன என்பதுதான் நமது கருத்தும். சுற்றுச்சூழலைப் பாதிப்பதுடன் நமது கனிமவளங்களும் கொள்ளைபோகும் போக்கை நாட்டுப்பற்றும், வருங்காலத்தில் அக்கறையும் உள்ள எவருமே ஏற்றுக் கொள்ள முடியாதுதான். இதெல்லாம் புரியாமல் இல்லை.
ஆனால், பழங்குடியின மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா போன்றவர்களையும் ஏன் மாவோயிஸ்டுகள் கடத்த வேண்டும்? நவரங்கபூரில் சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியினருக்கு நிலப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜகபந்து மஜ்ஜி என்பவரை அவர்கள் சுட்டுக் கொன்றது ஏன்? பழங்குடியினருக்கு ஆதரவாகத் தங்களைத் தவிர, யார் வந்தாலும் அவர்களைப் போட்டியாகக் கருதுவதும், அரசின் நல்ல நடவடிக்கைகளைக்கூடத் தடுத்துவிடப் பார்ப்பதும் ஏன்?
மாவோயிஸ்டுகளின் மிகப் பெரும் ஆயுதக் கிடங்கு அண்மையில் ஒடிசாவின் தெற்கே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் ராணுவத்தால் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது. இந்திய ராணுவத்துடன்கூட இல்லாத அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எங்கிருந்து, எப்படி, யாரால் வழங்கப்பட்டது என்கிற புதிருக்கு இன்றுவரை விடை காணப்படவில்லை. இந்த ஆயுதங்களைத் தயாரிக்க, விலைக்கு வாங்க மாவோயிஸ்டுகள் பல கோடி ரூபாய் செலவிட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் எங்கேயிருந்து இவர்களுக்குக் கிடைக்கிறது?
சீனா நிதியுதவி செய்யவில்லை என்று மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். சீனாவும் இவர்கள் தங்களை மாவோயிஸ்ட் என்று அழைத்துக் கொள்வதே அபத்தம் என்று கருதுவதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கிறார். இதற்கான பணத்தை நிச்சயமாக, மாவோயிஸ்டுகள் ஆளுகைக்கு உள்பட்ட, பழங்குடி மக்கள் கொடுத்திருக்க முடியாது. அப்படியானால் இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?
ஒன்று, இந்தியாவின் சான்றாண்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான ஏதோ ஓர் அன்னிய சக்தி மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கிறது அல்லது மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதிகளில் கனிமங்களை வெட்டியெடுக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களுடன் தொழில்போட்டியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதாவது இதன் பின்னணியில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மாவோயிஸ்டுகள் இந்த அளவுக்கு, ராணுவத்துக்கு இணையாக ஆயுதங்களை வாங்கவும் சேமித்து வைக்கவும் இயலாது.
பழங்குடியினரிடையே சால்வா ஜுடும் (மக்கள் காவல்படை) அமைத்த நடவடிக்கையை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததால் அரசு அதனைக் கைவிட்டது. ஆனால், பழங்குடியினர் அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், அரசின் நலத்திட்டங்களைப் பெற முயன்றாலும் மாவோயிஸ்டுகளின் கட்டப்பஞ்சாயத்தில் கடும் தண்டனை கிடைக்கிறது என்கிறார்களே, அது ஏன்? பழங்குடியினருக்கு எந்தவித நன்மையும் செய்து தரப்படக் கூடாது என்று தடையாக நிற்பது என்ன நியாயம்? மாவோயிஸ்டுகளின் நோக்கம் பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றுவதா இல்லை, இந்திய அரசின் மேலாண்மையை எதிர்த்து அரசுக்கு எதிரான போரை மறைமுகமாகத் தொடுப்பதா என்கிற சந்தேகத்தை மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றன.
எச்சரிக்கைகளை மீறி மாவோயிஸ்டுகள் இருக்கும் பகுதியில் நுழைந்த இத்தாலிய சுற்றுப்பயணிகளுக்காக இந்திய அரசு மாவோயிஸ்டுகளின் முன்னால் மண்டியிட்டு அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து அரியணை ஏற்றியதற்கான தண்டனையை நாம் அனுபவித்துத்தானே தீர வேண்டும், என் செய்ய?
 
Source "