இலவச தொலைக்காட்சிப் பெட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் .

கடந்த 23- ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி . மு . க .  செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது . அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும் , கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார் .

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர் , டி . வி . யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு , கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார் . ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார் .

அதில் ‘ மனிதனுக்கு டி . வி . என்பது பொழுதுபோக்கு சாதனம்தான் . ஆனால் அதைவிட முக்கியமானது உணவு , உடை , உறைவிடம் . தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா ? குறிப்பாக , விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா ?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி . வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் . இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது ? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்

தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள் . டி . வி . வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம் .

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
 அடையச் செய்திருக்கலாம் . இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம் . தரமான மருத்துவம் , கல்வி , மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும் .அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி . வி . முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம் . எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம் .

விலைவாசி உயர்வு , எரிபொருள் விலை உயர்வு , குடிநீர் பற்றாக்குறை , லஞ்சம் ,  ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி . வி . பார்க்க முடியும் ? எனவே எனக்கு இந்த டி . வி . வேண்டாம் .  முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் , மரியாதையும் , அன்பும் உள்ளது .

எனவே , இந்த டி . வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன் . அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும் . அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும் . இந்தியா வல்லரசாகிவிடும் ’ என்று நீண்டது அந்த மனு . இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை . அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள் . என்றாலும் அந்த மனுவையும் டி . வி . யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு .இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம் .

“ நான் ஒரு சாதாரண விவசாயி . விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் , ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான் .

இந்த நிலை , நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது .  எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது . ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .

சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு . ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி . வி . ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க . தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு .2 கோடி குடும்ப அட்டைக்கும் டி . வி . கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே .

கனத்த இதயத்தோடும் , வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி . வி .?  அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி . வி . பாத்து வேற சிரிக்கணுமாக்கும் . அதுனாலதான் நான் டி . வி . யை திருப்பிக் கொடுத்தேன் ’’  என்றார் .

டி . வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார் .

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி . க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும் . எனக்கான ஒரு டி . வி . யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’ என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை ...!

நாலு பேருக்கு நல்லதுன்னா... நான் வாயாடிதான்!

'தங்கச்சிப் பாப்பாவைத் தூக்கிச் சுமக்கிறது அக்கா பாப்பா!’
 என்று கல்யாண்ஜியின் கவிதை ஒன்றில் வரும். அந்த அக்கா பாப்பாபோல இருக்கிறார் நந்தினி. ஆனால், சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த 'குழந்தைகள் கல்வி தொடர்பான பொது விசாரணை’யில் நாடு முழுவதும் இருந்து நீதிபதிகளாகப் பங்கெடுத்த பல அதிகாரிகள் மத்தியில், இந்த 14 வயதுச் சிறுமி யும் ஒரு நீதிபதியாகச் செயலாற்றினார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நந்தினி, கடந்த சில வருடங்களாக குழந்தைகள் நலனுக்காக 'தனி மனுஷி’யாகப் போராடி வருகிறார்.

''ஈரோடு மாவட்டம் ஏ.ஜி.புதூர்தான் என் ஊர். அப்பா, ஒரு விவசாயக் கூலி. சாப்பாட்டுக்கே கஷ்டமான நிலைமையில், தொடர்ந்து என்னைப் படிக்கவைக்க முடியலை. ஏழாம் கிளாஸ் முடிச்சதுமே 'போதும்’னு சொல்லிட்டாங்க. படிக்க முடியாத வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், காட்டு வேலைக்குப் போகப் பழகிட்டேன். அப்போதான் 'ஸிணிகிஞி’ என்ற அமைப்பு, கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு இலவசமா டியூஷன் எடுக்கிறதாக் கேள்விப்பட்டேன். மரத்தடியில் சின்னதா லைட் போட்டு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க. வேலை எல்லாம் முடிச் சுட்டு ஆசையாப் போய்ப் படிப்பேன்.

என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அந்த அமைப்பு நடத்தும் 'குழந்தைகள் பாராளுமன்றத்தில்’ என்னைப் பிரதம மந்திரியா தேர்ந்தெடுத்தாங்க. 'செய்யுறது காட்டு வேலை. நாம பிரதம மந்திரியா?’ன்னு எனக்கு ஒரே சிரிப்பா இருக்கும். ஆனா, அவங்க செய்யச் சொன்ன வேலைகள் எல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு என்னவெல்லாம் கிடைக்கலையோ, அதை எல்லாம் மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கிற மாதிரி பண்ணணும். இவ்வளவுதான் வேலை. ரொம்ப ஆர்வமா செஞ்சேன். குழந்தைகளுக்கான சட்டங்கள், அரசாங்கம் என்னவெல்லாம் திட்டம் போடுது, அதை எப்படி நாம வாங்கிபயன் அடையுறது... இப்படிப் பல விஷயங் களைத் தெரிஞ்சுக்கிட்டேன். 'ஊருக்கு நல்லது செய்யப்போறவ, நாலெழுத்து படிச்சாத்தான் நல்லது’ன்னு அவங்களே என்னை கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு சேர்த்துவிட்டாங்க. படிச்சுக் கிட்டே ஊர்ல இருக்கும் குழந்தைகள்உரிமைக் காக வேலை பார்த்தேன். வேலைன்னா, சம்பளம் எல்லாம் கிடையாது. நானா ஆசைப் பட்டுத்தான் செஞ்சேன். ஆனா, ஊரில் உள்ள வங்க எல்லாம் நக்கலா, கிண்டலா சிரிச்சாங்க. ஆனா, அதைக் கண்டுக்காம, வேலை பார்க்கக் கிளம்பிருவேன்.

எங்க ஊரில் உள்ளவங்க யாரும் அதிகம் படிச்சவங்க இல்லை. அதுலயும் பொம்பளைப் புள்ளைங்களை ஏழு, எட்டு படிக்கவெச்சுட்டு, அதோடு நிறுத்திடுவாங்க. அவங்களை சாயங்கால நேரத்துலயாவது படிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு உருப்படியா ஒரு இடம் இல்லை. 'ஒரு சமுதாயக் கூடம் கட்டிக்கொடுத்தா, படிக்க வசதியா இருக்கும்’னு ஊராட்சி மன்றத் தலைவர்கிட்ட மனு கொடுத்தேன். மனுவை வாங்கிக்கிட்டு என்னை ஏற இறங்கப் பார்த்தவர், 'உன் வயசுக்கு நீயெல்லாம் மனு கொடுக்க வந்துட்டே. முதலில் மனுன்னா என்னன்னு தெரியுமா?’ன்னு கேட்டு சிரிச்சார். நான் பொறுமையா, மனுன்னா என்ன... ஊராட்சி மன்றத் தலைவர் மனுவுக்கு நடவடிக்கை எடுக்கலைன்னா, அடுத்ததா யார்கிட்ட மனு கொடுக்கணும்னு எல்லாத்தையும் சொன்னேன். அப்படியே மலைச்சு நின்னுட்டாரு.

சமுதாயக் கூடம் கட்டுறதுக்கு கலெக்டர்கிட்ட இருந்து ஆர்டர் வர்ற வரைக்கும் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டுக்கு நடையா நடந்தேன். இப்போ, சமுதாயக் கூடம் கட்டி முடிச்சு, புள்ளைங்க எல்லாம் அதுல உட்கார்ந்து தான் படிக்கிறாங்க.

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறதுனால, காலை யில் பள்ளிக்கூடம், சாயங்காலம் ஊர்ப் பிரச்னைன்னு நேரம் சரியா இருக்கு. இப்ப எங்க ஊரில் பள்ளிக்கூடம் போகாத பிள்ளை களே கிடையாது.

நான் ரொம்பப் படிச்சவ கிடையாது. எல்லா விஷயமும் தெரிஞ்சவளும் கிடையாது. என் வயசுக்கு எனக்கு என்ன தெரியுமோ, அதைத் துணிச்சலாப் பேசுவேன். இதனால் என்னை 'வாயாடி’ன்னு சொல்வாங்க. அந்தப் பேச்சுதான் இன்னிக்கு சமுதாயக் கூடத்தைக் கட்டுறதுக்குக் காரணம். இப்போ பொது விசாரணையில் கலந்துக்கிட்டப்போ, 'தமிழ்நாட்டுல உள்ள பல பள்ளிக்கூடங்கள் கூரைக் கொட்டகை, மரத்தடி களில்தான் செயல்படுது. இன்னும் பல ஊர்களில் ஆசிரியர்களே மாணவர்களைக் கழிவறை களைச் சுத்தம் பண்ணச் சொல்லிக் கட்டாயப் படுத்துறாங்க. இதை எல்லாம் ஏன் இன்னும் சரிபண்ணலை’ன்னு கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டேன். பஸ் விபத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் அநியாயமாசெத்துப் போறதுக்கு ஏன் கடுமையா நடவடிக்கை எடுக்கலைன்னு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டேன். எல்லாரும் 'நல்லா தைரியமா பேசினே’ன்னு பாராட்டினாங்க. ஆனால், நான் பாராட்டு வாங்குறதுக்காகப் பேசலை. எனக்குப் பிரச்னை தீரணும். அதுதான் முக்கியம்!'' - தீர்க்கமாக முடிக்கிறார் நந்தினி.


Thanks : Vikatan