வைகோ : ஒரு சிறப்புப் பார்வை


அரசியல் மேடைகளில் வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும் களத்தை கொதிகலனாகவே வைத்திருக்கும்.போர்வாள்,புரட்சிப்புயல்,என பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர்.பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு  இருப்பவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து  இங்கே கொஞ்சம்.....

வை.கோபாலசாமி என பெற்றோர் வைத்த பெயரைத் தொண்டர்கள் சுருக்கி வைகோ என்று அழைக்க அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.அந்த காலத்தில் அவரது தாத்தாவை அனைவரும் " அகோ " என்பார்களாம்.

எட்டு வயதில்,காந்தியின் பேரன் கிருஸ்ணதாஸ் காந்தியின் முன்னால் பூமிதான இயக்கத்தை ஆதரித்து இவர் பேசியதுதான் முதல் மேடை பேச்சு.ஐந்தாம் வகுப்பு மாணவனாக எட்டையபுரம் பாரதி விழாவில் கலந்து கொண்டது முதல் போட்டி.

நெல்லை சவேரியார், சென்னை மாநில கல்லூரி,சட்ட கல்லூரியில் படித்த காலங்களில் அத்தனை பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு இவருக்குதான்.இவருக்கு சளைக்காமல் சவால் கொடுத்தவர் " வலம்புரி ஜான் ".

மே 22 இவரது பிறந்த நாள்.ஆனால் சின்ன கொண்டாட்டம் கூட இருக்காது.அன்றைய தினத்தில் எங்கு இருக்கிறார் என்று குடும்பத்தினர் தவிர,யாருக்கும் தெரியாது !

இதுவரை, 28 முறை சிறை சென்றுள்ளதில்,நான்காண்டுகாலம் சிறையில் கழிந்திருக்கிறது.திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். சிறையில் எப்போதும் சிறப்பு வகுப்பு வாங்கிக்கொள்ள மாட்டார்.

பொடாவில் வைகோ கைதானதைக் கண்டித்து  1 கோடியே  10 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று இதுவரை வேறு எவரது கைதுக்கும் நடந்ததா என்பது சந்தேகம்தான்!

எந்த மேடைப்  பேச்சுக்கு முன்னரும் இரவு உணவை சாப்பிட மாட்டார். பசி இருந்தால்தான் பேச்சும்,குரலும்,சரியாக வரும் என்பார்.

சிவப்பு சட்டை,கறுப்பு பேன்ட் சீருடையுடன் தி.மு.க. வில் இப்போது வலம்வரும் தொண்டர் படையை அப்போது உருவாக்கியவர் வைகோ. " ஆயுத படையை உருவாக்குகிறார்" என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வைகோவையும்  300 தொண்டர்களையும் கைது செய்தார். இன்று ம.தி.மு.க-விலும் அப்படி ஒரு பெரும்படை இருக்கிறது.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றதற்காக கருப்பு,சிவப்பு, மோதிரம் ஒன்றை இவருக்கு அணிவித்தார்கள். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற போது மோதிரத்தை கழற்றச்  சொன்னார்கள். அதன் பிறகு 40 ஆண்டுகளாக வைகோ மோதிரம் அணிவதே இல்லை.

கருப்பையா மூப்பனார், இவர் மீது பாசமாக இருப்பார்.வைகோ வைத்திருக்கும் சூட்கேஸ் மூப்பனார் கொடுத்ததுதான்.வைகோவை காங்கிரசில் சேரச் சொல்லி ராஜீவ் காந்தி தூது அனுப்பியதும் மூப்பனாரைத்தான்.

விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியான மறுநாள், நாடாளுமன்றத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே அவரை அவமானப் படுத்துவது போல பேசினார். உடனே வைகோ " இறந்தவர் குறித்து விமர்சிப்பது தவறு.சஞ்சய் காந்தியின் உடலைகூடப் பார்க்காமல் அவருடன் பலியான விமானி வீட்டுக்கு ஓடிபோய் அஞ்சலி செலுத்தியவர் இந்திரா.

ஆனால் பிரதமர் மொரார்ஜியைக் காப்பாற்றுவதற்காகப் பலியான ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க உங்களில் ஒருவர்கூடச் செல்லவில்லை! என்று பதிலளித்தார்.அந்த பேச்சுதான் தலைநகரத்தில் வைகோ மீது பலரது கவனத்தை ஈர்த்தது.

தமிழீழத்துக்கு ரகசியமாகச் சென்று 23 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்.அப்போது " உங்களது வாழ்க்கைக் கதையை நான் எழுதுகிறேன் " என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 15 நாட்கள் மனம்விட்டு பேசி இருக்கிறார் பிரபாகரன். அந்த குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது!

வைகோ திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி தர ஒப்புகொண்டு இருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. திருமண நாள் அன்று அவருக்குத் திடீர் கண்வலி.கருணாநிதிக்குப் பதில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வைகோ திருமணம் நடைபெற்றது.

காலை 11  மணிக்கு வேகவைத்த காய்கறி, மதியம் 4 மணிக்கு, பயிறு வகைகள்  சாப்பிடுவது இவரது பழக்கம்.

அலெக்சாண்டர், நெப்போலியன்,உமர் முக்தார், சே குவேரா,கரிபால்டி,ஆகிய ஐவரும் வைகோ மிகவும் ஆராதிக்கும் மா வீரர்கள்.

தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ள இவரிடம் கடந்த  35 ஆண்டு கால டைரிகள் பத்திரமாக இருக்கின்றனவாம்.

கார் பயணங்களில் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள்தான் ஒலிக்கும்.அவ்வப்பொழுது தியாகராஜ பகாவதர், பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரின் விருப்பமாகும்.

அசைவ உணவுகளின் ஏகப் பிரியர்.அம்மா மாரியம்மாள் வைக்கும் கோழிக் குழம்புக்கு ஆயுட்கால அடிமை.

வைகோ தோளில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட  கருப்பு சால்வையை முதலில் அணிவித்தவர் சங்கரன்கோயில் பிச்சையா.தன் மகள் திருமணத்திற்கு வந்தவருக்கு  1985 -ம் ஆண்டு கருப்பு சால்வை அணிவித்தார் பிச்சையா.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புது சால்வை இன்றும் அனுப்ப்பிகொண்டு இருக்கிறார் பிச்சையா.

தமிழ்,ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து முக்கிய திரைப் படங்களையும் தியேட்டரில் பார்த்துவிடுவார். சமீபத்தில் இவர் பார்த்த படம் " அவதார் ".

குறிப்புகள் இல்லாமலேயே மணிக்கணக்கில் மேடையில் பேசும் வழக்கம்கொண்டவர். நா சுளுக்கும் கரடு முரடான சங்க இலக்கிய பாடல்களைக்கூட இரண்டு ,மூன்று,முறை வாசித்ததுமே அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பார்.

வைகோவின் அக்கா கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால்,இவரது மேடைப் பேச்சில் சில சமயம் பைபிள் மேற்கோள் எட்டிபார்க்கும்.

வைகோவிற்கு வரும் கடிதங்களையும், அவர் அனுப்பும் கடிதங்களையும் பிரித்துப் படிப்பதற்கு சென்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவே போட்டு இருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

சமாதான  காலத்தில் ஈழத்துக்கு வர வைகோவிற்கு அழைப்பு வைத்தார்கள்.
" சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குத்தான்  இனி நான் வருவேன் "  என்று அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாலிபால்,பேஸ்கட்பால்,புட்பால் விளையாட்டுகளைப் பற்றி மணிக்கணக்கில் கூட பேசிக்கொண்டு இருப்பார். டி.வி-யிலும் நேரிலும் இந்தப் போட்டிகளைப் பார்ப்பதில் அலாதியான் ஆர்வம் கொண்டவர். 

நன்றி :விகடன் and Source .

கற்பித்தலை மேம்படுத்த புதிய திட்டம்:- முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் / ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இவ்வரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை 419 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர் - மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, 315 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன்.


எது சீரான கல்வி..?
உண்மையான சீரான கல்வி என்பது பாடப் புத்தகத்துக் மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கல்வி இணைச் செயல்பாடுகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி ஆகியவற்றுக்காக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
இதனால் இப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் பயன் அடைவர். இதற்கு, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம்..
முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள். பொதுப் பாடத் திட்டம் மட்டும் சமச்சீர் கல்வி ஆகாது. இதனை நன்கு உணர்ந்த எனது அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இந்தக் கல்வி ஆண்டில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை மிகவும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்வி ஆண்டில் 1082 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இவை ஏற்படுத்தப்படும்.
மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும், மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.


ஆசிரியர்கள் நியமனம்...
நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, 90 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1985 ஆம் ஆண்டிலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி கிராமப்புற மாணவ மாணவியர்களுக்கு இதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் போன்றவை வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 119 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் பள்ளிக் கூடங்களில் அமையப் பெற வேண்டும் என்பது எனது திடமான எண்ணம் ஆகும். எனவே, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். இதன் காரணமாக, அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 60 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.


புத்தகச்சுமை குறைக்கப்படும்...
அதிமுக தேர்தல் அறிக்கையில், குழந்தைகளின் புத்தகச் சுமை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.


புகைப்படத்துடன் சான்றிதழ்...
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் தவறாகக் கையாளக் கூடிய வாய்ப்பு உள்ளதைத் தவிர்க்கும் பொருட்டு, அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களின் புகைப்படத்துடன் கூடிய மறைமுகக் குறியீட்டுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன், 7 முதல் 17 வயதுள்ள பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.
கணினி மூலம் கற்பது பள்ளிகளில் தற்போது இன்றியமையாததாக உள்ளது. மாணவ, மாணவியர்கள் தமது பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பற்பல குறிப்புகளையும் பாடத்திற்கு ஏற்ற மேற்கோள்களையும் மற்றும் தேவையான தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு கணினி முக்கியமான ஒன்று என்பதனை உணர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1 மற்றும் +2 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை அறிவித்துள்ளேன்.


கற்பித்தலை மேம்படுத்த..
அதனைத் தொடர்ந்து, எல்லா வகுப்புகளிலும் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் விதத்திலும், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர் / ஆசிரியைகளின் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தும் வகையிலும் ICT@Schools (Information and Communication Technology@Schools), Tamil Nadu என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்.
இத்திட்டத்தில் எல்லா வகுப்புகளுக்கும் ஆன பாடப் புத்தகங்களின் உட்பொருளை கணினிமயமாக மாற்றி மையக் கணினி மூலமாக வகுப்பறைகளில் வழங்க வழிவகை செய்யப்படும். எல்லா மாணவ, மாணவியர்களும் பயன் அடையும் பொருட்டு சிறந்த ஆசிரியர்களின் விரிவுரைகளின் தொகுப்புகள் கல்வி செயற்கை கோள் வாயிலாக வகுப்பறைகளுக்குச் சென்றடைய இத்திட்டத்தின் வாயிலாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை மூலம் அரசு செயல்படுத்த இருக்கும் இந்தத் திட்டங்களால், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள், உரிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பள்ளிகளில், மிகவும் உகந்த சூழலில், தரமான கல்வி கற்கும் நிலை உருவாகி, உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்க வழி வகுக்கும்," என்று முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்ணா ஹஜாரே... ஆர்.டி.ஐ. முதல் லோக்பால் வரை

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் 'மாதிரி சிற்றூர்' என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.
ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை...
* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், 'அன்னா ஹசாரே' என்று அழைக்கப்படுபவர்.
* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.
* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.
கிராம மேம்பாட்டுப் பணி...
* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.
பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, 'ஷ்ரம்தன்' என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.
* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.
* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.
* 1998-ல் சிவசேனா - பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தகவல் அறியும் சட்டம்...
* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்...
நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து 'ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பின் உறுப்பினர்கள் 'ஜன் லோக்பால் மசோதா' என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.
இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.
லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.
அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.
"இது, உங்களின் வெற்றி," என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, "இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்," என்று முழங்கியிருக்கிறார்!


அன்னா ஹசாரேவின் வலைத்தளம் : http://www.annahazare.org/


Source : http://www.vikatan.com/