யாருக்கு பாரத ரத்னா கிடைக்க வேண்டும்?

கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பரவலான பரிந்துரையின் எதிர்வினையாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தி ஹிண்டு நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.


குடியரசு தினத்தன்று வழங்கப்படும் 'பாரத ரத்னா' விருதுதான் இன்றைய நாட்களில், செய்தியாகின்றன. மிர்சா காலிப் மற்றும் சரத் சந்திர சட்டோபத்யாயா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தபோது, சிலர் அதை எதிர்த்தார்கள். இறந்து போனவர்களுக்கு எல்லாம் அந்த விருது வழங்கப்படக் கூடாது என்பதே அவர்கள் சொல்லும் காரணமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரையில், மிகச் சரியானவர்களுக்கு... அவர்கள் இறந்து போயிருந்தாலும் விருது வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. கடந்த காலங்களில், இறந்த பின்னால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது. சர்தார் படேல் மற்றும் டாக்டர் அம்பேத்கார் ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.

மிர்சா காலிப் நவீன மனிதர்தான். ராமரைப் போல புராணகால மாந்தரோ அல்லது கௌதம புத்தர் போல தொன்மையானவரோ அல்ல. நிலப்பிரபுத்துவ மரபில் இருந்து வந்தவரே ஆனாலும், நவீன நாகரிகத்தின் நன்மை பயக்கக் கூடிய விஷயங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் அந்த மரபுகளை உடைத்தெறிந்தார்.

செய்யுள் ஒன்றில் அவர் இப்படி எழுதுகிறார்:

'ஈமான் முஜே ரோகே ஹை
ஜோ கின்சே ஹெ முஜே கஃபர்
காபா மேரே பீசே ஹை
கலீசா மேரே ஆகே..'

இதில் 'கலீசா' என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் தேவாலயத்தைக் குறிக்கும். ஆனால் இங்கே நவீன நாகரிகத்தைக் குறிக்கிறது. அதேபோல, 'காபா' என்பது இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவைக் குறிக்கும் நேரடியான சொல். ஆனால் இங்கே அது நிலப்பிரபுத்துவத்தைக் குறிக்கிறது. ஆக, இந்தச் செய்யுள் தரும் உண்மையான பொருள் என்னவெனில்: "மத நம்பிக்கை என்னை பின்னுக்கு இழுக்கிறது, ஆனால் ஐயப்பாடுகள் என்னை முன்நோக்கி இழுக்கின்றன; நிலப்பிரபுத்துவம் என் பின்னால் இருக்கிறது, நவீன நாகரிகமோ என் முன்னால் இருக்கிறது."

காலிப், இதன் மூலம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து நவீன நாகரிகத்தை அங்கீகரிக்கிறார். அதுவும் இந்தியா நிலப்பிரபுத்துவச் சூழலில் ஆழ்ந்திருந்த 19-ம் நூற்றாண்டின் மத்தியில் இதை எழுதுகிறார்.

உருதுக் கவிதை, இந்தியப் பண்பாட்டுப் புதையலில் மின்னும் ரத்தினமாக இருப்பது ('உருது என்பது என்ன' என்ற என் கட்டுரையை www.kgfindia.com என்ற வலைத்தளத்தில் பார்க்கலாம்). மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது இந்தச் சிறந்த மொழிக்கு. 1947-க்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளில், கற்றவர்கள் மத்தியில் மிகச் சரளமாகப் புழங்கக் கூடிய மொழியாகத்தான் உருது இருந்தது. இந்து, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் உருது மொழி பேசுபவராக இருந்தார்கள். எனினும், 1947-க்குப் பிறகு சில தீய சக்திகள் உருது மொழியை அயல் மொழி என்றும் அது இஸ்லாமியர்களின் மொழி மட்டுமே என்றும் தவறான பொய்யுரைகளைப் பரப்பினார்கள்.

உருது மொழியில் மிக முன்னோடியான ஒரு நபர் மிர்சா காலிப். நம்முடைய கலவையானப் பண்பாட்டின் மிகச்சிறந்த பிரதிநிதியாவார். அவர் இஸ்லாமியராக இருந்த போதும், மதச்சார்பின்மையுடன் இருந்தார். பல இந்து மத நண்பர்களையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இறந்துவிட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம்முடைய பண்பாடு, அதில் முக்கியக் கூறான உருது, இன்னமும் நம்மிடையே வாழ்கிறது.

ஏப்ரல் 2011-ல் டெல்லியில் நடந்த ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின் போது நான் முதன்முதலாக காலிப் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அங்கு கூடியிருந்த பிரபலங்களால் அது பெருமளவு ஆமோதிக்கப்பட்டது. சபாநாயகர் மீரா குமார், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், முதன்மை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி ஆகியோர் அவர்களில் சிலர். எனினும், சில நாட்களில் முன்னணி பத்திரிகை ஒன்று என்னுடைய கோரிக்கையை 'பைத்தியக்காரத்தனமாகிப் போன சென்டிமென்டலிசம்' என்று எழுதியது.

கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் சரத் சந்திர சட்டோபாத்யாயாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். சரத் சந்திரர் தன்னுடைய கதைகளின் வழியே இந்தியாவை இன்றும் நாசப்படுத்தி வருகிற சாதிய அமைப்பையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும், மூடநம்பிக்கைகளையும் முழு மூச்சாகச் சாடியிருப்பார் (பார்க்க ஸ்ரீகாந்த், சேஷ் பிரஷ்னா, சரித்ராஹீன், தேவ்தாஸ், பிராமன் கி பேட்டி, கிராமின் சமாஜ் உள்ளிட்ட கதைகளை).

1933-ல் கல்கத்தா டவுன் ஹாலில் அவரைப் பெருமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், தனது ஏற்புரையில் சரத் சந்திரர் இவ்வாறு சொல்கிறார்: ''என் முன்னோடிகளுக்கு மட்டுமே கடன்பட்டது அல்ல எனது இலக்கியம். ஏழ்மையானவர்களுக்கும், தங்களின் எல்லாவற்றையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துவிட்டு அதனிடம் இருந்து திரும்ப எதையும் பெற்றுக் கொள்ளாத சாமான்யர்களுக்கும், பலவீனர்களுக்கும் மற்றும் கவனித்துக் கவலைப்பட யாருமே இல்லாது கண்ணீர் சிந்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்களின் துயரங்களை எடுத்துக் கொண்டு அவர்களுக்காகப் போராட அவர்களே என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட முடிவுறாத அநீதிகளுக்கும், ஒப்புக் கொள்ள முடியாத, தாங்கிக் கொள்ளமுடியாத அநீதிகளுக்கும் நான் சாட்சியமாக இருந்திருக்கிறேன். இந்த உலகத்தில் வசந்த காலங்கள், அழகோடும் செல்வத்தோடும் அன்று பூத்த பூக்களின் இனிமையான நறுமணத்தைச் சுமந்துவரும் தென்றலோடும், குக்கூப் பறவைகளின் பாடல்களோடும் சிலருக்கு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நல்ல விஷயங்கள் எல்லாமே பூகோளத்திற்கு வெளியேதான் இருக்கின்றன. எனது பார்வையோ தொடர்ந்து சிறைப்பட்டிருக்கிறது.''

இந்தியாவில் இன்றும் 80 சதவிகித நம் மக்கள் கொடுமையான வறுமையில், கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், வேலைவாய்ப்பின்மையின் பிரச்னைகள் தாண்டவமாடுகையில், ஆரோக்கியம், வீட்டு வசதி, கல்வி மற்றும் பல பிரச்னைகள் மிகுந்திருக்கும் சூழலில் இந்தப் பேச்சு நிச்சயமாக எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும்.

தேசியவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுதிய தமிழ்க் கவிஞன் சுப்ரமணிய பாரதிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.

பெண்களின் முன்னேற்றத்துக்காக வன்மையுடன் எழுதப்பட்ட பாரதியின் கவிதை ஒன்று இங்கே தரப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் 'ஹின்சா விரோதக் சங் எதிர் மிர்சாபூர் மோதி குரேஷ் ஜமத் மற்றும் பிறர்' தொடர்பான வழக்கில் மார்ச் 14, 2008-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது:

'முப்பது கோடி முகமுடையாள்
எனில் மெய்ப்புறம் ஒன்றுடையாள்
இவள் செப்புமொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்'

பாரதியின் இன்னொரு பாடல்:


கும்மியடி! தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!


ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

இந்தியாவில் எத்தனை பேர் காலிப்பை, சரத் சந்திரரை, சுப்ரமணிய பாரதியைப் படித்திருக்கிறார்கள்? கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இப்படியான ஒரு கீழ்த்தரமான பண்பாட்டுக்குள் மூழ்கிவிட்டோம்.

நம் உண்மையான நாயகர்களை நாம் ஒதுக்கிவிட்டோம். கற்பனை நாயகர்களை மட்டும் கொண்டாடுகிறோம். இன்றைய தலைமுறை இந்தியர்கள் நம் பண்பாட்டில் இருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை நான் வருத்தத்துடன் சொல்கிறேன். இவர்களின் கவலை முழுக்க பணம், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட், கற்பனை உலகம் என்றே இருக்கிறது.

இன்று இந்தியா குறுக்குச்சாலைகளில் நின்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அதனை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்கள் நமக்குத் தேவை. அப்படியானவர்களுக்கே... அவர்கள் இறந்த போயிருப்பினும் கூட பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு. அப்படியான விருதை சமூகத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றோருக்கு வழங்குவது அந்த விருதை ஏளனம் செய்வதாகும்!

(ஜாஷ்ன்-ஈ-பஹார் முஷாய்ராவின்: இஸ்லாமியர்களின் கவிதை வாசிக்கும் திருவிழா, கிட்டத்தட்ட நம் ஊர் மார்கழி சீஸன் போல.)



தமிழில் : ந.வினோத்குமார்

Source : Vikatan 
Original Source : Hindu

முல்லைப் பெரியாறு - ஒரு கேள்வி பதில் தொகுப்பு! - ஞாநி, சோ

பலர் முல்லைப் பெரியாறு பற்றி வலைப்பதிவிலும், ட்விட்டரிலும் விவாதிக்கிறார்கள். விவாதிப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியுமா என்று கூட தெரியாது. சும்மா ஜெயும் உம்மன்சாண்டிக்கும் நடக்கும் அறிக்கை யுத்ததை வைத்து நடக்கும் விவாதம் என்றே தோன்றுகிறது.


இந்த வார கல்கியில் வந்த ஞாநியின் ஓ-பக்கங்களிலிருந்தும், துக்ளக் பத்திரிக்கையிலிரிந்தும் வந்த சில தகவல்கள். பலருக்கு சரியான தகவல் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தால் இந்த பதிவு, அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை என்பது என்ன?
‘தமிழக - கேரள எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 116 வருடமாகிவிட்டது. இந்த அணை பலவீனமாகிவிட்டது. எனவே உடைந்தால் கேரள மக்களுக்கு ஆபத்து. புதிய அணை கட்ட வேண்டும். இப்போதுள்ளதை உடைக்க வேண்டும்’ என்பது கேரள அரசின் நிலை. ‘அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. புதிய அணை தேவையில்லை. இருக்கும் அணையை அழித்து புது அணை கட்டுவதில் இறங்கினால், தமிழ்நாட்டில் பாசன வசதி பெறும் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரிலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்பது தமிழக அரசின் நிலை.

இரண்டில் எது உண்மை?
அணை பலவீனமாகிவிட்டது என்று 1979ல் கேரள அரசு சொல்ல ஆரம்பித்தது. மெல்ல மெல்ல இந்தப் பிரச்னை வளர்ந்து உச்ச நீதிமன்றத்தின் முன்பு வழக்காக வைக்கப்பட்டது. நிபுணர் குழுவை அமைத்து, பிரச்னையை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அணை பலவீனமாக இல்லை என்றும் தற்காலிகமாகக் குறைத்துத் தேக்கிய நீரின் அளவை, பழையபடி அதிகரிக்கலாமென்றும் 2006ல் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கேரளத்திலிருந்து தாக்கல் செய்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

அப்படியானால் விஷயம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டதே? ஏன் மறுபடியும் பிரச்னை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு எதிர்த்துத் தோல்வியடைந்தபின், அணைகள் பாதுகாப்புக்கென்று ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படவிடாமல் தடுத்தது. காவிரி நீர் பிரச்னையிலும் இதே போல உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகம் சட்டம் கொண்டு வந்தபோது, அந்தச் சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதைச் சுட்டிக் காட்டி கேரள அரசின் சட்டமும் செல்லாது என்று தமிழக அரசு போட்ட வழக்கில் தொடர்ந்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை வருவதற்கு, சற்று முன்னதாக கேரளத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்ட ‘டேம் 999’ படம் வெளியானது. அணை உடைந்து மாபெரும் விபத்து ஏற்படுவது பற்றிய படம் இது. கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணியின் எதிர்காலத்தை, தீர்மானம் செய்யக் கூடிய இடைத் தேர்தல் நடக்கும் சமயம். எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கேரள மக்களின் பயத்தைக் கிளப்பிவிட்டு அரசியல் லாபமடையும் நோக்கத்தில் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்ற பிரசாரம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்த அணை யாருக்குச் சொந்தம்? கேரளாவுடையதா? தமிழ்நாட்டுடையதா?
முல்லைப் பெரியாறு அணை ஒரு விசித்திரமான அணை. கட்டப்பட்ட அணை தமிழக அரசுக்கு சொந்தமானது. ஆனால் கட்டியிருக்கும் இடம் கேரளாவுடையது என்ற அடிப்படையில் தமிழக அரசுக்கு 999 வருட குத்தகையில் தரப்பட்டிருக்கிறது.

அணை கட்டி நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதால், அது பலவீனமாகியிருக்க வாய்ப்பு உண்டுதானே?
பராமரிப்பு இல்லையென்றால் கட்டி இரண்டே வருடத்தில் கூட ஒரு வீடு நாசமாகப் போகும். தொடர்ந்து சீரான பராமரிப்பு இருந்தால் பல நூறு வருடம் கழித்தும் ஒரு கட்டுமானம் பலமாகவே இருக்க முடியும். கரிகாலன் கட்டிய கல்லணை 1900 வருடமாகியும் பலமாகவும் பயன்பாட்டிலும் இருந்துவருகிறது. காரணம் தொடர்ந்து பழுதுபார்த்துப் பராமரித்து வருவதுதான். பென்னிகுயிக் முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய சமயத்தில் கவர்னராக இருந்தவர் சர் ஆர்தர் காட்டன். அவர் ஆட்சியில் முல்லைப் பெரியாறுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட, கோதாவரி, தௌலேஸ்வரம், கிருஷ்ணா அணைகள் எல்லாம் தொடர்ந்த பராமரிப்பினால் பலமாகவே இருந்து வருகின்றன. முல்லைப்பெரியாறு அணையையும் அவ்வப்போது பலப்படுத்தும் பராமரிப்பு வேலையை தமிழகப் பொறியாளர்கள் செய்துவந்துள்ளனர். உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு இந்த வட்டாரத்தின் நில அதிர்ச்சித் தன்மை உட்பட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே அணைக்கு ஆபத்தில்லை என்று கூறியிருக்கிறது.

அப்படியானால் ஏன் கேரளம், முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் இப்படி பீதியைக் கிளப்பிவிடுகிறது?
இந்தப் பிரச்னையின் வேர் தொடக்கத்திலேயே இருக்கிறது. பென்னிகுயிக் அணை கட்ட திட்டம் போட்டபோது, அங்கே திருவிதாங்கூர் அரசும் இங்கே பிரிட்டிஷ் அரசும் இருந்தன. அணைப் பகுதி அமையவேண்டிய தேவிகுளம் - பீர்மேடு பகுதிகள் 90 சதவிகிதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகள். ஆனால் பிரிட்டிஷ் அரசு தவறாக அந்தப் பகுதிகளை, திருவிதாங்கூருக்குச் சொந்தமானது என்று கருதியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் போட்டது.
ஆனால் திருவிதாங்கூர் மகாராஜா இருமுறை பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக ஆய்வாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். அணை இருக்கும் இடம் சென்னை ராஜதானிக்குச் சொந்தமானது. எனவே சுற்றிலும் இருக்கும் பகுதிகளையும் சென்னையே எடுத்துக் கொண்டு தனக்கு 6 லட்ச ரூபாய் தந்தால் போதுமானது என்று மன்னர் சொல்லியிருக்கிறார். அஞ்சியோ, தங்கச்சேரி, பாலம் ஆகிய மூன்று பகுதிகளை, சென்னை தனக்குக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு முல்லைப் பெரியாறைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லியிருக்கிறார். இதை பிரிட்டிஷ் அரசு பொருட்படுத்தவே இல்லை. அப்போதே அப்படிச் செய்திருந்தால், பின்னாளில் மொழி வாரி மாநிலம் அமைக்கும்போது, 90 சதவிகித தமிழர்கள் இருக்கும் தேவி குளம் - பீர்மேடு பகுதிகள் தமிழகத்தோடே இருந்திருக்கும்.
தங்கள் நிலத்தில் அணையை வைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தமிழகம் கையில் அணை தொடர்பான எல்லா அதிகாரமும் இருப்பதை கேரள அரசு விரும்பவில்லை. படிப்படியாக ஒவ்வொரு அதிகாரமாக அது பறித்துக் கொண்டது. 1979 எம்.ஜி.ஆர் - அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, தமிழக காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. ஆனால் கேரள போலீசுக்கான சம்பளத்தை, தமிழகமே தருகிறது. அணையில் படகு விடும் உரிமை தமிழகத்திடமிருந்து பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் தமிழக அரசிடமிருந்து பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல வேண்டும்?

ஒரு வாதத்துக்காக, அணை பலவீனமாகிவிட்டதாகவும் ஒரு பூகம்பத்தில் உடைந்துவிடுமென்றும் வைத்துக் கொண்டால், 30 லட்சம் கேரள மக்கள் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படத்தானே செய்யும்?
“இல்லை. இந்தக் கருத்தே கேரளத்தில் மலையாளிகள் ஆதரவைத் திரட்ட அவர்களிடையே பீதியைக் கிளப்ப சொல்லப்படும் கருத்துதான். அணை உடைந்து எந்த மக்களாவது பாதிக்கப்பட்டால், அதில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்த வட்டாரத்தில் அவர்கள்தான் இப்போதும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். தவிர அணை உடைந்தால் அந்தத் தண்ணீர் நேராகக் கீழே உள்ள இடுக்கி அணைக்குத்தான் போய்ச் சேரும். இடுக்கி அணையே முல்லைப் பெரியாறிலிருந்து வரும் உபரி நீரைத் தேக்கக் கட்டப்பட்டதுதான். வழியில் இருக்கும் ஊர்கள் குமுளி, ஏலப்பாறா இரண்டு மட்டுமே. குமுளி கடல் மட்டத்திலிருந்து 3350 அடி உயரத்திலும் ஏலப்பாறா 4850 அடி உயரத்திலும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2890 அடி உயரத்தில்தான். எனவே அதிலிருந்து வெள்ளம் இந்த ஊர்களுக்கு மலையேறிச் செல்ல முடியாது.

இந்தப் பிரச்னையைத் திரும்பவும் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியாதா?
பேச்சுகளின் மூலம் தீர்க்க முடியாத நிலையில்தான் நீதிமன்றத்தை இரு தரப்புமே அணுகுகின்றன. அதன்பின்னர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்வதுதான் முறை. ஆனால் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுக்கிறது. மேல் முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் உத்தரவை ஒப்புக்கொள்ள மறுத்து, அணைக்கு ஆபத்து என்று மக்களிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டு, தான் விரும்புவதை சாதிக்க நினைக்கிறது.

அப்படியானால் என்னதான் தீர்வு?
நிச்சயம் வன்முறை உதவாது. இங்கே நாயர் டீக்கடையையோ, மேனன் நகைக் கடையையோ தாக்குவது தீர்வல்ல. பதிலுக்கு கேரளத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான தமிழ் தொழிலாளர்கள், வணிகர்கள் மீதான தாக்குதல் அங்கே ஆரம்பிக்கும். இதற்கு முடிவே இல்லை. கேரளத்திலேயே உண்மை நிலையை அறிந்தவர்கள் உண்டு. இலக்கியவாதி பால் சக்கரியா, மத்திய நீரியல் கழகத் தலைவர் தாமஸ் போன்றோர் உண்மை நிலையைப் பகிரங்கமாகப் பேசியவர்கள். ஜெயலலிதா போல மலையாளத்தில் நன்றாகப் பேசத் தெரிந்த தமிழகத் தலைவர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் தேவையானால் நேரில் கேரள நகரங்களுக்குச் சென்றும் மலையாளத்திலேயே பேசி மலையாளிகளிடையே தூண்டிவிடப்பட்டிருக்கும் பயத்தை நீக்க முயற்சிக்கலாம்.
தமிழக சினிமா கலைஞர்களுக்கு, கேரளத்தில் சாதாரண மக்களிடையே பெரும் செல்வாக்கு இருக்கிறது. தமிழ் திரைப்படங்கள் அங்கே பெரும் வசூலைக் குவிக்கின்றன. தமிழ் சினிமா பாடல்கள் இல்லாத கேரள ஊரே இல்லை. எனவே தமிழ் சினிமா பிரமுகர்கள் கேரள சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயத்துக்கெதிரான பிரசாரம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஏற்க மறுத்தால், அந்த அரசை அரசியல் சட்டத்தின் கீழ் டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அதைப் பயன்படுத்த முன்வரும்படி மத்திய அரசை நாம் வற்புறுத்த வேண்டும்.
தமிழகம் காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினாலே கேரளம் தாங்காது. கேரளத்துக்கு உணவுப் பொருட்களையோ மின்சாரத்தையோ மணலையோ ஒரு வாரத்துக்கு வழங்காமல் ஒத்துழையாமை செய்தால், கேரளம் பெரும் சிக்கலில் ஆழ்ந்துபோகும்.

( நன்றி: கல்கி )


துக்ளக் பகுதிகள்

கேள்வி : ‘முல்லைப் பெரியாறு அணைக்கு நில அதிர்வால் பாதிப்பில்லை’ – என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளாரே! இதற்குப் பிரதமரின் முடிவு என்னவாக இருக்கும்?

பதில் : ‘நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது 1974-ல் கேரள அரசினால் நிரப்பப்பட்ட இடுக்கி நீர்த்தேக்கத்தினால்தானே தவிர, முல்லைப் பெரியாறு அணையினால் அல்ல’ என்று சில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ‘ஒரு அணை கட்டி நூறு ஆண்டுகளைக் கடந்து, இந்த மாதிரி அதிர்வுகள் தோன்றாது. மஹாராஷ்டிரத்தில், கொய்னா அணை கட்டி சில ஆண்டுகளில், நில அதிர்வுகளும், அதைத் தொடர்ந்து விபத்தும் நேரிட்டன. கேரளாவிலும், இடுக்கி அணைக்குப் பக்கமாக உள்ள பகுதிகளில்தான் இந்த அதிர்வுகள் தோன்றுகின்றன. இடுக்கி நீர்த்தேக்கத்தில், உள்ள நீரின் அளவு அதிகமாகும்போதுதான் இந்த அதிர்வுகள் அதிகமாகின்றன. ஆகையால், இடுக்கி அணைக் கட்டில், நீர்த் தேக்கத்தின் அளவு குறைக்கப்பட வேண்டும்’ என்ற கருத்து அந்த விஞ்ஞானிகளால் கூறப்பட்டிருக்கிறது. இது சரியானதுதானா என்று சொல்லக் கூடிய தகுதி நமக்கு இல்லை. ஆனால், இந்த மாதிரி கருத்துக்களை விவரம் அறிந்தவர்கள் கூறுகிறபோது, அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஆகையால், இந்தக் கருத்தை ஒட்டிய ஆய்வு நடத்தப்படுவது நல்லது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

கே : முல்லைப் பெரியாறு அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழப்பது போல தயாரிக்கப்பட்டுள்ள ‘டேம் 999’ திரைப்படம் பற்றி?
ப : ‘படத்தில் உடைகிற அணையை முல்லைப் பெரியாறு அணை என்று நாங்கள் காட்டவில்லையே?’ என்று படத் தயாரிப்பாளர் கேட்கிறார். சரி; ஆனால் அவர் கொடுத்த டெலிவிஷன் பேட்டிகளில் ‘இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது, தமிழக அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்; புதிய அணை கட்டப்படுவதை ஏற்க வேண்டும்’ என்று பேசுகிறாரே, அது ஏன்? உள்நோக்கத்தைக் காட்டுவதாக ‘முல்லைப் பெரியாறு அணை கூடாது’ என்று பிரசாரம் செய்வது போல் அவருடைய அப்பேட்டி அமைந்தது. அதனால்தான் பிரச்னை வந்தது.

உண்ணாவிரதம் இருக்கும் முன் இந்த தகவல் எல்லாம் குஷ்பு படித்திருப்பாரா ?

Source : Kalki, Thgulak, Idlyvadai.blogspot.com

பாரதியார்



வணங்குகிறோம்