செம்மொழிக் கவிதைதான் தடைக்குக் காரணமா?

.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம், சட்டசபை இடமாற்றம்... என்று அதிரடி காட்டிய அ.தி.மு.க. அரசு, இப்போது சமச்சீர் கல்விக்கும் சடன் பிரேக் போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான தடையை நீக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் என அடுத்தடுத்து விவகாரம் சூடுபிடிக்க... பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்தோம்! 


''தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டம் என்பதால்தான் தடை போடு​​கிறீர்களா?''
''முதலில் ஒன்றைப் புரிந்து​கொள்ளுங்கள். சமச்சீர் கல்வித் திட்டத்​துக்கு நாங்கள் எதிரி அல்ல. நாங்களும் அதை ஏற்கிறோம். சமச்சீர் கல்வியின் நோக்கம் என்ன? எல்லோருக்கும் பொதுவான, தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதானே? அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவசரக் கோலமாக கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி முறையில் நிறையக் குளறுபடிகள்... அதை அப்போதே நாங்கள் எதிர்த்தோம். மாணவர் - பெற்றோர், ஆசிரியர் மத்தியிலும்கூட எதிர்ப்பு எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனாலும், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, அவசரமாக செட் போட்டு தலைமைச் செயலகம் திறந்ததுபோல், சமச்சீர் கல்வியையும் திடுதிப்பென அமல்படுத்திவிட்டனர். இப்படி ஒரு ஓட்டைப் படகை வைத்துக்கொண்டு கல்விக் கடலை நீந்துவது என்பது முடியாத காரியம்!
எனவே, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், தற்போதைய சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை திருத்தி, உயர்த்திக் கூர் தீட்ட இருக்கிறது வல்லுநர் குழு. அதுவரையிலும் மாணவர்களுக்குப் பழைய பாடத் திட்டமே தொடரும்!''

''இந்தத் தற்காலிகத் தள்ளிவைப்பு என்பது, சமச்சீர் கல்வியை ஒட்டுமொத்தமாக தடை செய்வதற்கான முன்னோட்டம்தான் என்ற கருத்து நிலவுகிறதே?''
''உண்மை என்னவென்றால், சமச்சீர் கல்வித் திட்டங்களை வரையறுக்க தி.மு.க. அரசு அமைத்த  முத்துக்குமரன் கமிட்டியின் வழிகாட்டுதல்களை தி.மு.க. அரசே பின்பற்றவில்லை. அதனால்தான், 'தற்போதைய சமச்சீர் கல்வியில் தரமே கிடையாது. இது மாணவர்களையே சீரழித்துவிடும்’ என்று முத்துக்குமரனே கடந்த காலத்தில் பேட்டி அளித்தார். மாணவர்களின் கல்வித் தரத்தை உண்மையிலேயே உயர்த்த வேண்டும் என்றால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் பயிற்சித் திறன் ஆகியவற்றையும் மேம்படுத்த வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில், 'செய்வன திருந்தச் செய்’ என்பதையே கடைப்பிடிக்கிறோம். மற்றபடி இதில், அரசியல்ரீதியான காழ்ப்போ, சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் எண்ணமோ எங்களுக்குத் துளியும் கிடையாது!''



''தற்போதைய சமச்சீர் கல்வியில் அப்படி என்னதான் குறைபாடு?''
''திட்டத்தை அமல்படுத்திய அடிப்படையே தவறு. சென்ற ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தினர். இப்போதோ, ஒரே நேரத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக அறிவித்துவிட்டனர். போன வருடம் ஒன்பதாம் வகுப்பு வரை பழைய பாடத் திட்டத்தில் படித்துக்கொண்டு இருந்த மாணவன், திடீரென இப்போது 10-ம் வகுப்பில் சம்பந்தமே இல்லாமல், புதிதாக சமச்சீர் பாடத் திட்டத்தைப் படித்தால், அவனுக்கு என்ன புரியும்? உளுத்தம் பருப்பு இல்லை என்றால், கடலைப் பருப்பு என்று மாற்றி வாங்கிச் செல்வதற்கு, கல்வி ஒன்றும் கடைச்சரக்கு இல்லையே!
எந்த மாற்றத்தைக் கொண்டுவருவதாக இருந்தாலும் முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படிப்படியாகத்தான் கொண்டுவர வேண்டும். தேர்தலில் அறிவித்து​விட்டோம் என்பதற்காக மாணவர்களின் கல்வி விஷயத்தில் இப்படி 'எடுத்தேன்... கவிழ்த்தேன்!’ என்று அவசரம் காட்டுவதையே தவறு என்​கிறோம்!''


''ஏற்கெனவே,  216 கோடி செலவில் தயாரான சமச்சீர் கல்விப் புத்தகங்களை ஒதுக்கி​விட்டு, புதிய புத்தகங்களுக்காக டெண்டர்​விடுவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார்​களே?''
''இப்போது தயார் நிலையில் இருக்கும் சமச்சீர் புத்தகங்களின் மதிப்பு  237 கோடி! ஆனால், இதன் உண்மையான மதிப்பு வெறும்  80 கோடிதான். மூலப்பொருட்களின் விலையேற்றம் என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆட்சியினர் இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை ஏற்படுத்தினர். இதிலும்கூட, 70 சதவிகிதப் புத்தகங்கள்தான் தயார் செய்து இருக்கிறார்கள்.''


''சமச்சீர் பாடத் திட்டத்தில் உள்ள 'கருணாநிதி செம்மொழி கவிதை, கலைஞர் காப்பீட்டுத் திட்டக் கட்டுரை’களும் ஆளும் கட்சியின் கோபத்தைக் கிளறி​விட்டதோ?''
''தற்பெருமைக்காக ஒருவர் தன்னைப்பற்றிய பாடத் திட்டத்தை ஒன்றாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம், இரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் வைக்கலாம்... ஆனால், ஒன்றில் இருந்து 10-ம் வகுப்பு வரையிலும் உள்ள சமச்சீர் பாடத் திட்டத்தில், தொடர்ச்சியாக தற்பெருமைப் பாடங்களைக் கடந்த ஆட்சியாளர்கள் சேர்த்திருப்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட அந்தப் பாடங்களுக்காகத்தான் நாங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நிறுத்திவிட்டோம் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும், அந்தக் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் நீக்கிவிட்டு நாங்கள் திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாமே!?''
 

thanks : Vikatan

உன்னதமான ஒரு மனிதர்

''ஒருவரது மரணம் அவருக்கான முடிவு மட்டுமல்ல... அது ஒரு வகையில் மற்றவர்களுக்கானப் படிப்பினை. நேற்று வரை எலும்பும் சதையுமாக உயிர் உள்ள உறவாக உலவிய ஒருவர், பிணமாகக் கண்முன் விழுந்துகிடப்பதைக் காணும்போது வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பேராசையும் ஒரு கணத்தில் உடைத்துபோகும்!'' தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பாபு. இவர், காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனை பிணவறைத் தொழிலாளி. ஆயிரத்துக்கும் மேற்பட்டப் பிரேதங்களைப் பரிசோதனை செய்த பாபுவிடம் அந்தத் தொழிலுக்கே உரிய பிரத்யேக கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதது மருத்துவமனை வட்டாரமே ஆச்சர்யப்படும் சங்கதி.

''தொழிலுக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. நோயாளிகள் பிரிவில்தான் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு ஆள் இல்லைன்னு சொல்லி மார்ச்சுவரியில் போஸ்ட்டிங் போட்டாங்க. அரசாங்க வேலைன்னு நினைச்சு வந்தா, இப்படி பிணத்தை அறுக்கச் சொல்றாங்களேன்னு ஆரம்பத்தில் அரண்டு போனேன். பிறகு அதுவே பழகிருச்சு. சின்ன வயசுல ரோட்ல விபத்து எதுவும் பார்த்தாலே மனசு பதறும். ஆனா, இப்போ தினம் தினம் பிரேதங்களுடன்தான் வாழ்க்கை. மாசத்துக்குக் குறைஞ்சது 15-ல் இருந்து 20 பிணங்களை அறுக்க வேண்டியது இருக்கும்

விபத்துகளில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைஞ்ச நிலையில் பாடிகளைக் கொண்டுவருவாங்க. சமயங்கள்ல நெருங்கிய சொந்தங்களால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல உறுப்புகளை ஒண்ணுசேர்த்து ஓரளவுக்கு முகத்தில் உருவத் தைக் கொண்டுவந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைப் பேன். அப்போ அந்தச் சொந்தக்காரங்க முகத்தில் வருத்தத்துக் கிடையிலேயும் தெரியுற ஆறுதல்தான், இப்போ வரை இந்தத் தொழில் மேல சலிப்பு இல்லாம என்னைவெச்சிருக்கு.


பொதுவாப் பிரேதப் பரிசோதனை செய்றவங்க மது சாப்பிட்டுட்டுதான் பிணத்தைத் தொடுவாங்க. வேலை செய் றப்ப மூச்சு விட முடியாம கெட்ட வாடை அடிக்கும். ஆனா, நான் மதுவை தொடுறது இல்லை. பிணமா இருந்தாலும் நேத்து வரைக்கும் அவங்களும் ஒரு மனுஷனா, கௌரவமா நடமாடிட்டு இருந்தவங்கதானே. தண்ணி அடிச்சிட்டு பிணத்தைத் தொடுறது அவங்களை அவமானப்படுத்துறது மாதிரின்னு நான் நினைக்கிறேன்.

யாரும் கேட்டு வராத அநாதைப் பிணங்களோட இறுதிச் செலவை, சமயங்கள்ல நானே ஏத்துக்குவேன். 'வாங்குற சம்பளத்தில் உனக்கு எதுக்குய்யா இந்த வேலை’ன்னு நண்பர் கள் கேட்பாங்க. 'ஏதோ என்னால் முடிஞ்சதை என் திருப்திக்காக செய்றேன்’னு சொல்வேன்!'' என்கிற பாபு, மார்ச்சுவரியில் வேலை பார்க்கிறார் என்பது அவர் பிள்ளைகளுக்கு இன்னமும் தெரியாதாம்.


''அட, நான் இந்த வேலைதான் செய்றேன்னு என் மனைவிக்கே ரொம்ப வருஷம் கழிச்சுத்தாங்க தெரியும். தெரிஞ்சதும் கோவத்துல மேல, கீழ எகிறிக் குதிச்சா. 'ஒண்ணு வேலையை விடு... இல்லேன்னா என்னை விட்டுடு’ன்னு கட்- அண்ட் ரைட்டா சொல்லிட்டா. இந்த வேலையில் இருக்கிற மனத் திருப்தியை அவளுக்குப் புரியவெச்சேன். இன்னிக்கு வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் சுடு தண்ணியில் என்னைக் குளிப்பாட்டிவிடுறது அவதான். பிள்ளைங்களுக்கும் நான் என்ன வேலை செய்றேன்னு தெரியாது. ஒரு நாளைக்கு அவங்களா தெரிஞ்சுக்கட்டும்னு விட்டுட்டேன்!'' என்று புன்ன கைக்கிறார் பாபு.

''காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோ மேல ரயில் மோதி, நிறைய பேரு செத்துட்டாங்க. எல்லா பிரேதங்களும் இங்கேதான் வந்திச்சு. கை வேற, கால் வேற, தலை வேற... என் முன்னாடி பிரேதங்கக் குவிஞ்சுகிடந்தப்ப மனசுக்குள்ள சுரீர்னு ஒரு வெறுமை.

இன்னிக்கும் லீவு எடுத்து வீட்டுல இருக்கிறப்ப கூட, மார்ச்சுவரிக்கு உடல் வந்திருக்குன்னு தகவல் வந்தா, உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துருவேன். எனக்காகக் காத்திருக்கிறது இறந்த உடம்பு இல்ல. நேத்து வரைக்கும் ரத்தமும் சதையுமா நடமாடுன நம்மளப்போல ஒரு மனுஷன். இறுதி மரியாதைக் காக அந்த உடம்பு எனக்காகக் காத்திருக்கக் கூடாது. இது எனக்குத் தொழில் மட்டுமல்ல; என் மனைவி, பிள்ளைகளுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற விஷயம்!'' - தன்மையான குரலில் முடிக்கும் பாபு, தனக்காக அடுத்த உடலை காத்திருக்கவைக்க விரும் பாமல் விரைகிறார்!

முதல்வர் ஜெயலலிதா


* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி இலவசம். பரம ஏழைகளான அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க, அரசுப் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறை வழங்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 500-ல் இருந்து 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.


தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற புதிய துறை...
அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க உத்தரவிட்டுள்ளேன். இந்தத் துறைக்கு 'சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இதற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்

Source : Vikatan.com