தாகூர்

தாகூர்... வங்கம் ஈன்றெடுத்த இணையற்ற புதல்வர். இளம் வயதில் எண்ணற்ற கலாசாரங்களின் சங்கமம் நிகழ்ந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததால், அவரின் சிந்தனை எண்ணற்ற தளங்களைத் தொட்டது.


இங்கிலாந்திற்கு சட்டம் படிக்கப் போய், அதன் மீது மனம் ஒட்டாமல் திரும்பினார். ஏகத்துக்கும் பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட இவர் ஒரு நாள் நதியின் மீது படகினில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது விளக்குகள் வீசிய காற்றில் அணைந்துபோயின. நதியின் சலனமற்ற தன்மையை பார்த்துக்கொண்டே ஸ்தம்பித்து நின்றார். அங்கேதான் தாகூர், மகாகவி தாகூர் ஆனார்.

வீட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்ட தாகூர், கல்விமுறை குழந்தைகளின் மீது வன்முறையை கையாள்வதாக உணர்ந்தார். இயற்கையானச் சூழலில் பிள்ளைகள் கற்கவேண்டும் என விரும்பினார். அமைதியின் உறைவிடம் என பொருள் தரும் சாந்தி நிகேதனை உருவாக்கினார். அதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். ஆங்கிலேய அரசிடம் எந்த சூழலிலும் கையேந்த மாட்டேன் என சொல்லி இந்தியர்களின் நிதியுதவியிலேயே அப்பள்ளியை நடத்தினார்.

அற்புதமான பல கவிதைகள் எழுதினார். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டதால் மேற்கின் கவனம் பதிந்து கீதாஞ்சலி நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆசியாவின் முதல் நோபல் பரிசு இவருக்கே கிடைத்தது.

ஆங்கிலேய அரசின் ஜாலியான்வாலாபாக் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய சர் பட்டத்தை துறந்தார்.

தான் இயற்றிய பாடல்களுக்குத் தானே இசையும் அமைத்திருந்தார். அவை ரவீந்திர சங்கீதம் எனும் பெயரில் இன்றும் பாடப்படுகின்றன. நல்ல ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை வல்லுநர், நாடக ஆசிரியர் என எண்ணற்ற முகங்கள் இவருக்கு.

காந்தியை 'மகாத்மா' என அழைத்தது இவர் தான். இந்தியாவின் 'ஜன கண மண' மற்றும் வங்காள தேசத்தின் 'அமர் சோனார் பங்களா' எனும் இரண்டு தேசிய கீதங்களுக்கு ஆசிரியர் இவர் ஒருவரே.

என் ஆடைகள், ஆபரணங்களை களைந்து விடு அன்னையே; அவை மணல்வெளியில் ஆனந்தித்து விளையாட பெருந்தடையாக உள்ளன என பாட மட்டுமல்ல; அப்படியே வாழவும் செய்தார் தாகூர்.

அவரின் HEAVEN OF FREEDOM மற்றும் WALK ALONE எனும் கவிதைகள் உங்களுக்காக...


உள்ளம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலைநிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாசங்களின்றி
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பரிபூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய கட்டுப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப் போய்விடவில்லையோ,
வாய்ச்சொற்கள் எங்கே
மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி
முழுமையை நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடியாதாரத்தை தேடிச் செல்லும்
தெளிந்த அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரிகவும், ஆக்கப் பணி புரிகவும்
உள்ளத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சொர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழட்டும்
என் தேசம் !
***
யாரும் உன் குரலுக்கு செவிமடுக்கவில்லையா?
நீண்ட சுவடுகளை பதித்து தனித்து நட
எல்லாரும் அகக்கதவுகளை மூடி மவுனித்திருந்தால்
உன் மனதை திறந்து, தனித்து பேசு!
தனித்து நட, தனித்து நட, தனித்து நட
சுடும்பாதை தடைகளால் அழுத்தும்
முகங்களை திருப்பிக்கொண்டு கைவிட்டு போவார்
முற்களை நசுக்கு!
உதிரக்காயங்கள் தோய்ந்து ரத்தம் சொட்டும் பாதையில்
கம்பீரமாக பயணிப்பாய்
தனித்து நட, தனித்து நட, தனித்து நட
யாரும் விளக்கை ஏந்த மறுக்கும்
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு
தனித்து நட, தனித்து நட, தனித்து நட

Thanga meengal




மார்க்ஸ் எனும் மாமனிதர்

 உலகின் தலைசிறந்த காதல், நட்பு, சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், மார்க்ஸுக்குதான் அப்பெருமை.

போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்தபொழுது எளியவர்களும், பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.


ஜெர்மனியில் மே - 5,1818இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார். மகனின் போக்கிலேயே இருக்க விட்டார். மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது.

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ், மதத்தை மறுத்தார். மதம் என்பது மனிதத்தன்மை அற்றது, அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஷேக்ஸ்பியர், கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுதுதான் அவரைவிட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது.

கரடுமுரடான சுபாவம் கொண்ட, ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார். அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது. அப்பொழுதுதான் மார்க்ஸ் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் ஆகியிருந்தார். அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின. எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார். எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார்.

பிரஷ்ய அரசு நாடு கடத்தியது. இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது. பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ். நிலைமை இன்னமும் மோசம். எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார். ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுதுகூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர்.

எங்கெல்ஸை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார். இவரைக் காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ். வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார்.

இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள். ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள். அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை - மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம். உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது. பிள்ளைகள் மாண்டு போனார்கள்.

"பிறந்தபொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை; இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை!" என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம்... பசியால் நொடிந்துபோய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி.



ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கெனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார். காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று. சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது.

வர்க்க பேதமற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன் அவர் ஏங்கல்ஸ் வரிகளில்...

"யூதனாகப் பிறந்தார்!
கிறிஸ்தவனாக வாழ்ந்தார்!!
மனிதனாக இறந்தார்...
காலத்தை வென்று அவரின் அவர் பெயர் நிலைத்து நிற்கும்"

இன்று - மே 5: மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியைத் தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.

Source and Thanks : Vikatan