ஏழைகளின் ஆசான்... ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'-க்கு டைம் இதழ் சிறப்பிடம்

பீகாரின் பாட்னாவில் உள்ள ஏழை மாணவர்களுக்கான இலவச ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு பயிற்சி மையமான 'சூப்பர் 30'-க்கு சிறப்பிடம் தந்து கெளரவித்திருக்கிறது, பிரபல 'டைம்' இதழ்.

டைம் இதழின் அண்மையப் பதிப்பில் வெளியாகியுள்ள 'லிஸ்த் ஆஃப் பெஸ்ட் ஆஃப் ஆசியா 2010' (Best of Asia 2010) பட்டியலின் பெஸ்ட் ஃபார் தி மைண்ட் பிரிவில் இடம்பெற்றிருக்கிறது, 38 வயது கணித வல்லுனரான ஆனந்த் குமாரின் 'சூப்பர் 30'

அதென்ன 'சூப்பர் 30'?

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக உரிய பயிற்சிகள் அளித்து, அவர்களை ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைய வித்திடுவதே 'சூப்பர் 30' திட்டத்தின் முதன்மை நோக்கம்.

பீகாரின் பாட்னாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி தனது 'ராமானுஜன் ஸ்கூல் ஆஃப் மேத்தமெடிக்ஸ்' மூலம் செயல்படுத்தி வருபவர் ஆனந்த் குமார்.

இந்த ஏழு ஆண்டுகளில், சூப்பர் 30 மூலம் பயிற்சி பெற்ற 210 மாணவர்களில் 183 பேர் ஐ.ஐ.டி. மையங்களில் சேர்ந்துள்ளனர். துவக்க ஆண்டில் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலை படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டில் 30 மாணவர்களுமே தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விகிதம் என்ற சாதனை நிகழ்ந்தது.

ஆனந்த் குமாரின் பயிற்சி மையத்தில் படித்து ஐ.ஐ.டி.க்களில் சேர்ந்தவர்கள், தொழில்நுட்ப வல்லுவனர்களாக வலம் வருபவர்கள் அனைவருமே துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுநர், நிலமற்ற விவசாயத் தொழிலாளி என பொருளாதாரத்தில் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள பெற்றோரின் திறமைமிகு பிள்ளைகள்!

இளம் கணித வல்லுனரான ஆனந்த் குமார், கெம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயில விரும்பினார். ஆனால், அவருக்கு உரிய ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. அதன் தொடர்ச்சியாகவே தாயகத்தில் வறுமையால் முன்னேற முடியாத மாணவர்களுக்கு தனது உழைப்பை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

இந்த மையத்தில் சேர்வதற்கே மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கென தனியாக ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் திறமையான மாணவர்களை தேர்வு செய்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் மாணவர்கள் நாளொன்றுக்கு 16 மணி மணி நேரம் படிப்பதற்கு நேரத்தை செலவிட வேண்டும் என்பதுதான் ஒரே முக்கிய நிர்பந்தம். தேர்வு முடியும் வரை அவர்களுக்கு பயிற்சி, உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம்!

தற்போது தனது கல்விப் பணி முயற்சிக்கு டைம் இதழ் மூலம் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆனந்த் குமார், "இது மிகப் பெரிய கெளரவம். ஏழை மாணவர்களுக்கு மென்மேலும் உறுதுணைபுரிந்திட இந்த சர்வதேச அங்கீகாரம் மிகுந்த தூண்டுகோலாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

ஆனந்த் குமாரின் உயரிய முயற்சிகளை இந்திய அரசும் கண்டுணர்ந்துள்ளது. ஐ.ஐ.டி.யில் சேர விழையும் ஏழை மாணவர்களுக்கு உதவும் 'சூப்பர் 30' திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட தமிழ்நாடு, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, இம்மூன்று மாநில அரசுகளும் விடுத்த அழைப்பை ஏற்று உரிய வழிகாட்டுதல்களை நேரிலேயா வந்து வழங்கியிருக்கிறார், ஆனந்த் குமார்.
கடந்த பிப்ரவரியில் ஆனந்த் குமாரை அழைத்துச் சந்தித்திருக்கிறார், பிரதமர் மன்மோகன் சிங். அப்போது, அவரது கல்விப் பணியைப் பாராட்டிய பிரதமரிடம், கூட்டு நுழைவுத் தேர்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி பரிந்துரைக்க தவறவில்லை.

உரிய அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைக் கொண்டு, சூப்பர் 30 திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார், ஆனந்த் குமார். மிகக் குறைந்த கட்டணத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு இந்த இலவச பயிற்சி மையத்துக்கான நிதி ஆதாரத்தை வருகிறார்கள்.

"மாணவர்களுக்கு ஆடிப்படைக் கல்வியைக் கூட அளிப்பதற்கு போராடும் நாட்டில், மனித ஆற்றலால் எதுவும் சாத்தியமே என்று நிரூபிக்க 'சூப்பர் 30' - ஒரு சிறந்த எடுத்துக்காட்டு," என்ற டைம் இதழின் புகழாரத்துக்கு சாலப் பொருத்தமான ஆனந்த் குமாரே நிஜ கல்வித் தந்தை!

ஆனந்த் குமாரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்... http://www.super30.org/

நன்றி : Vikatan