போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் - it works

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம் செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார்.


சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார். தினமும் ஜெயின் காலேஜிலிருந்து கிளம்பி, டைடல்பார்க்கில் இறங்கி ரயிலைப் பிடிப்பாராம். கேளம்பாக்கத்திலிருந்து வரும்19பி, 21 H, மற்றும் பெரும்பாலான பஸ்கள் முன்பெல்லாம் டைடல் பார்க்கில் நிற்காதாம். அதனால் அவர் T51ல் பயணிப்பாராம். சமீப காலமாய் 19பியும் டைடல் பார்க்கில் நிற்க ஆரம்பித்ததாம்.

இரண்டொரு நாள் முன்பு 19பி பஸ்ஸை பிடித்து டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அங்கெல்லாம் நிற்காது என்றும், வரும் சிக்னலிலோ, அல்லது டைடல் பார்க்குக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அதற்கு ரஞசனி தான் தினமும் இந்த வண்டியில் பயணிப்பதாகவும், தினமும் டைடல் பார்க்கில் நிற்கும் வண்டி இன்று மட்டும் ஏன் நிற்காது என்று வாதாடியிருக்கிறார். கண்டக்டரும் விடாமல் நிறுத்த முடியாது என்று வாதிட, ரஞ்சனிக்கு அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் நினைவுக்கு வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள் பார்த்த அந்த நம்பரை தன் செல்லில் சேமித்து வைத்திருக்க, உடன் அந்த எண்ணுக்கு தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசியவர் போனை கண்டக்டரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அதெல்லாம் பேச முடியாது என்று சொல்ல, எதிர்முனை ஆள் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், வண்டி தற்போது பயணிக்கும் இடத்தையும் கேட்டிருக்கிறார். அப்போது பஸ் கந்தன்சாவடியில் பயணித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார். எதிர்முனை நபர் தான் இன்னும் சிறிது நேரத்தில் லைனில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் வண்டியில் இருக்கும் ஜி.பி.எஸ் சிஸ்டத்திலிருந்து அந்த நபர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லையாம். அவருக்கு இது முதல் முறை அனுபவமாய் இருக்கும் போலிருக்கிறது. ஏன் வண்டியை டைடல் பார்க்கில் நிறுத்துவதில்லை என்றதும், அவர் இல்லையே சென்ற ட்ரிப்பில்கூட டைடல் பார்க்கில் நின்றுதானே வந்தோம். என்றதும், அப்படியானல் கண்டக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று கேட்டார். கண்டக்டரிடம் பேச்சே இல்லை. பேஸ்த் அடித்து போயிருந்தார். உடனே டிரைவர் கண்டக்டருக்கு சப்போர்ட்டாய், அவர் ரூட்டிற்கு புதுசு என்றும், அதனால் வந்த குழப்பம் தான் என்றும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு புகார் கொடுத்த ரஞ்சனியை அழைத்து அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் ரஞ்சனியையே பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் அந்த புகார் எண்ணையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயமென்றால் எல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கும் என்ற ஒரு பொது புத்தி எல்லாருக்கும் உறுதியாகிக் கொண்டிருக்கும் வேளையில், அரசு இயந்திரம் சிறப்பாகவும் செயல்படுறது என்பதை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அது மட்டுமில்லாமல் தானாக கிடைக்காவிட்டால் கேட்டால் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் உணர முடியும்.. ஸோ.. கேட்டால் கிடைக்கும்

சென்னை போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் 9884301013,9445030516,9383337639


Thanks : CableSankar