அன்புள்ள அமெரிக்க பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் எப்போதும் நலம் என அறிவேன். கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது.
பின்லேடன் கொலையை தாங்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில் பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். பின்லேடனின் கடைசி நிமிடம் என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும்.
தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள், இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சனைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக உங்கள் ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா? உங்கள் நாட்டில் அதற்குள் அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே? ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும்.
இரட்டை கோபுர கொடூரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷ கூச்சலிடுகின்றனர். கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர். இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக்கிறீர்கள் என்பது என்னை போல உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்?
உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி இராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர் அனுமதி பெறாமல் யாரை வேண்டுமானாலும் சுட்டுத்தள்ளுவது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா? நாளை நீங்கள் வேறு ஒருவனை பிடிக்க இந்தியாவுக்குள்ளும் நுழை வீர்கள்தானே?
இரட்டைகோபுர தாக்குதல் நடந்தவுடன் உங்கள் நாட்டின் அன்றைய அதிபர் ஜூனியர் புஷ், பின்லேடனை பிடிக்க உத்திரவிட்டார். ஒன்று அமெரிக்கா பக்கம் நில்லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என கொக்கரித்தார்! பின்லேடனை பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் தாலிபான்களை வீழ்த்துவதும், அங்குள்ள பெண்களை பர்தாவுக்குளிருந்து பாதுகாப்பதுமே எங்கள் கடமை என்றார். அன்று ஆப்கானுக்குள் நுழைந்தீர்கள்.. இன்று பாகிஸ்தான்.
அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தால், ஒரு சர்வதேச குற்றவாளியை கொன்றதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறீர்கள். கேள்வி, ஒசாமாவை கொன்றதல்ல, அத்துமீறி ஒரு நாட்டில் நுழைவதுதான். சரி உங்கள் நாடு செய்திருக்கிற படுகொலைகளை பட்டியல் போட்டு உங்கள் நாட்டுக்குள் கைது செய்ய புகுந்தால் அதிகாரத்தில் இருப்போரில் எத்தனை பேர் மிஞ்சுவீர்?
1991 ஆம் ஆண்டு சீனியர் புஷ் இராக்கில் நடத்திய தாக்குதலில் 1 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ விடம் பயிற்சி பெற்றவர்களால் கொல் லப்பட்ட 1,50,000 ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசிய அணு குண்டுகளால் கொடூரமாக அழித் தொழிக்கப்பட்ட மூன்று லட்சம் ஜப்பானிய மக்களுக்கும், வியட் நாமில் நேபாம் குண்டுகளுக்கு இரை யான அப்பாவி மக்களுக்கும், 1989ல் அமெரிக்க படைகளால் படுகொலை செய்யப்படு அகதிகளாக்கப்பட்ட பனாமா மக்களுக்கும், உங்களை ஆதரிக்கவில்லை என்ற ஒரே கார ணத்திற்காக இராக், கியூபா போன்ற நாடுகளுக்கு உணவும், மருந்தும் கிடைப்பதை தடைசெய்து அதனால் உயிரிழந்த குழந்தைகளுக்கும் நீதி வேண்டும் என்று எல்லோரும் புறப் பட்டால் உங்கள் கதி என்னாகும் அதிபரே!
இவற்றையெல்லாம் விடுங்கள், இப்போது உங்கள் நாட்டின் முக்கிய அலுவலகங்கள் இருக்கிற சான் டாஃபே நகரத்தின் கதை தெரியுமா? அங்கு இருந்த பல லட்சக்கணக் கான அமெரிக்க பூர்வகுடி மக்களின் மீது குண்டு வீசி தாக்கி அவர்களது சடலத்தில் எழுந்த நகரம் இது என நீங்கள் அறிவீர்களா? இப்போது தெரிகிறதா உலகில் மிகப்பெரிய பயங் கரவாதிகளின் தலைவன் நீங்கள் என உங்களுக்கு இன்னும் உங்கள் பூர்வீகம் தெரிய வேண்டுமெனில் தென் அமெரிக்காவின் சிலி மட்டு மல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரே சில், பெரு, டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டு ராஸ், பனாமா, எல்சால்வடார், மெக் ஸிகோ, கொலம்பியா போன்ற நாட் டின் மக்களைக் கேளுங்கள்.
இவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனீர்கள்? ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடி மைப்படுத்தி அந்த நாட்டின் வளங் களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடு ருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கிறீர்களே! இது தொடர் கதையாவது உங்கள் வியா பார உத்திதானே? தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடூரமான அத்துமீறல்களை செய்தீர்கள்.
உங்களால் ஒசாமாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார். சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி பல அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சனை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண் மைகள் வெளியே வரும் என்பதால் உயி ருடன் பிடிக்க வாய்ப்பி ருந்தும் கொலை செய்தீர் கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா? எதுவா கினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன்.
காரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது.
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்;
நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்;
மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்;
ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை.
இந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன் முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். அது போல உங்கள் நாட்டிற்கு உங்கள் கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப்படுத்துவது உலகை மட்டுமல்ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்.
அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்க னுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல் முறை என பெயரெடுக்க வேண்டுமெனில்.. கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.