விவசாயி கையில் விவசாயம் இல்லை!" -நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி
''தமிழக விவசாயிகளைப் பொறுத்த அளவில், தொடர்ந்து அமையும் எல்லா அரசாங்கங்களாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள், பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இந்த ஆட்சியிலும் அது தொடர் கதை தான்!
ஜீவாதார நதி நீர்ப் பிரச்னைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இருக்கும் நீர்நிலைகளும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில், அரசாங்கம் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் மேற்கொண்டு வரும் ராட்சசத் திட்டங்களுக்காக ஏரி, குளங்களைக் காவு வாங்கிவிட்டார்கள். சாலை ஓரம் இருந்த விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் ஆசாமிகளால் சூறையாடப்பட்டு, வடிநிலங்களான தரிசுகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,737 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. ஆனால், அரசாங்கம் இந்த எண்ணிக்கையை வெறும் '3’ என்று சொல்கிறது. எண்ணிக்கையை மறைக்கலாம்... பிரச்னையை?
எந்த விஷயத்தையும் இந்த அரசாங்கம் விவசாயிகள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்காது என்பதற்கு பனையேறிகள் பிரச்னையே உதாரணம். கோடிக்கணக்கான தென்னை, பனை மரங்கள் இருக்கின்றன தமிழகத்தில். தென்னம்பால், பனம்பால் (கள்) எடுக்க அனுமதித்தால், லட்சக்கணக்கான விவசாயிகள், பனையேறிகள் பயனடைவார்கள். ஆனால், விவசாயிகளின் நலனைவிட, சாராய அதிபர்களின் நலன்தான் முக்கியமாகப் படுகிறது ஆட்சியாளர்களுக்கு!
இயற்கைச் சீற்றங்களில் பறிகொடுத்து, உரத்துக்கும் பூச்சிக்கொல்லிக்கும் பறிகொடுத் தது போக, இப்போது நிலத்தையும் பறி கொடுத்துக்கொண்டு இருக்கிறான் விவசாயி. போராடிப் போராடி அவன் ஓய்ந்துவிட்டான். இப்போது அவன் மௌனமாக இருக்கிறான். அது புரட்சியாக வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை!''
"இலவசங்கள் இழுக்கு!"
எம்.ஆர்.வெங்கடேஷ், தணிக்கையாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கை ஆய்வாளர்.
''அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியின்றித் தவிக்கும் ஏழை மக்களுக்கு அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியோ அல்லது கலர் டி.வி-யோ, பெரிய உதவியாகத் தான் இருக்கும். நல்லாட்சிக்கு இடையே இலவசங்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். 'இலவசம்’ என்ற போர்வை யில் ஜனநாயகத்தையே பாழாக்கிவிட்டது அரசு.
4,000 கோடிகளை கலர் டி.வி-க்கென ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தப் பணத்தை நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தி இருந்தால், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வேனும் எட்டப்பட்டு இருக்கும்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறது அரசு. சுதந்திரத்துக்குப் பிறகு, 65 ஆண்டுகளாக இன்னும் தங்களை ஏழைகளாகவே வைத்திருப்பதால் மக்களின் கோபம் அரசின் மேல் திரும்பி விடாமல் இருக்க, வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துகிறது அரசு. இதனால் நிகழ்ந்த தீமையின் விளைவு... வாக்களிப்பதற் குக்கூடப் பொதுமக்கள் அன்பளிப்பை எதிர்பார்க்கிறார்கள். தேசத்தை சுபிட்சம் ஆக்குவதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. சட்டம் - ஒழுங்கு, விவசாயம், தொழில், உற்பத்தி, சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கு இடம் இல்லாத தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் மட்டுமே பிரதான இடம் பிடித்து இருப்பதைச் சாபக்கேடு என்று சொல்லாமல், வேறு என்ன சொல்வது?
2007 தேர்தலின்போது குஜராத்தில் காங்கிரஸ் கட்சி இலவசத் திட்டங்களை வைத்தே தனது தேர்தல் அறிக்கை யைத் தயாரித்து இருந்தது. ஆனால், அங்கே மக்கள் தெளிவாக காங்கிரஸுக்கு வாக்களிக்காமல் மண்ணைக் கவ்வவைத்தார்கள். அந்தத் தெளிவு இங்கே தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறதா? தொலை நோக்குடன் மக்களின் துயர் துடைப்பதற்கென அறிவிக் கப்படும் திட்டமாக இருந்தால், பொருளாதாரச் சுமையையும் கருதாமல், அதை வரவேற்கலாம். ஆனால், வாக்குகளை மட்டுமே குறி வைத்து அளிக்கப்படும் இலவசங் களால் ஜனநாயகத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுவதோடு, அந்தப் பொருளாதாரச் சுமை பிற்காலத்தில் பொதுமக்களின் மீதேதான் சுமத்தப் படுகிறது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகள் ஊழல் செய்கிறார்கள். அரசிடம் இலவசம் பெற்ற 'நன்றி உணர்ச்சி’யினால், மக்களும் ஊழல்வாதிகள் ஆவது, தேசத்துக்கே பெரும் அவமானம்!''