யாருடைய எலிகள் நாம்?

கடந்த வாரம் பலராலும் கண்டுகொள்ளப்படாத செய்திகளில் ஒன்று... நாட்டின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் மருந்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பி உள்ள கடிதம்!
ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!


கோடிகள் புரளும் துறை!
 ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக .3,600 கோடி வரை செலவா கிறது. இந்த ஆராய்ச்சியில் மிக முக்கியமான கட்டம், மனிதர்கள் மீதான பரிசோதனை. புதிதாக உருவாக்கப்படும் மருந்து, மனிதர்கள் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று சோதிக்க வேண்டும்.


வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.


அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.


அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.


நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!


எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?


Source : Vikatan.com
 
More details :http://www.cchr.org/videos/marketing-of-madness.html
 

கங்கையை காக்க காலவரையற்ற உண்ணாவிரதம்: 115-வது நாளில் சுவாமி நிகாமானந்த் மரணம்!

கங்கை நதியைக் காப்பதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, ஏறத்தாழ இரண்டரை மாதங்கள் போராட்டம் மேற்கொண்டிருந்த சுவாமி நிகாமானந்த் மரணம் அடைந்தார்.

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியான ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்தின் உயிர், டெரேடூனில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை பிரிந்தது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி, பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, 9-வது நாளில் போராட்டத்தை கைவிட்ட பாபா ராம்தேவ் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய அதே மருத்துவமனையில் தான் சுவாமி நிகாமானந்தின் உயிரும் பிரிந்தது.
புனிதமான கங்கை நதி மாசுபடுத்தப்படுவதற்கு எதிராக பிப்ரவரி 19-ல் ஹரித்வாரில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய சுவாமி நிகாமானந்த் மொத்தம் 73 நாட்கள் தனது போராட்டத்தை கைவிடாமல் நடந்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "சுவாமி நிகாமானந்த் தனது ஆசிரமத்தில் 68 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆலைக் கழிவுகள் கலப்பதில் இருந்தும், ஆற்றுப் படுகையில் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்தும் கங்கையை மீட்க வேண்டும் என்பதாக அவர் போராடினார்," என்றார்.

காலவரையற்ற உண்ணாவிரத்தால் உடல் நிலை மோசமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27-ல் வலுக்கட்டாயமாக ஹிமாலயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நிகாமானந்த். கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், எவ்விதப் பலனும் இன்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.
"மாஃபியா கும்பலை காப்பதில் அரசுக்கும் பங்குண்டு. நிகாமானந்த் உண்மையிலேயே தனது நோக்கத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்துள்ளார். இதுவரை எந்த மீடியாவும் அவர் விரிவான செய்தியினை வெளியிடவில்லை," என்று வருத்தம் தொய்ந்த குரலுடன் பேட்டியளித்திருக்கிறார், சக சாதுவான சுவாமி கைலாஷ்நாத்

இது அரசு வன்முறை


யோகாசனத்திலும் தியானத்திலும் ஈடுபடுகிற மேல்தட்டு மக்கள் 50,000 பேர் பாபா ராம்தேவ் நடத்திய சத்தியாகிரக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குகொண்டதை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி, கண்ணீர்புகை, தடியடி எல்லாமும் நடத்துகிற அளவுக்கு மத்திய அரசு செயல்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பிலும் ஆச்சரியத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்ல, ஒரு துறவியைப் பார்த்து அரசுக்கு இத்தனை அச்சமா என்கிற ஏளனத்துக்கும் வழிகோலி இருக்கிறது.
கடந்த நான்கு தினங்களாகவே மத்திய அரசின் போக்கு இயல்புக்கு மாறுபட்டதாகவே இருந்து வந்தது. அண்ணா ஹசாரேவுக்குத் தரப்படாத முக்கியத்துவம் பாபா ராம்தேவுக்குக் கொடுக்கப்பட்டது. அவரை விமான நிலையத்துக்குச் சென்று நான்கு மத்திய அமைச்சர்கள் சந்தித்து சமரசம் பேசினார்கள். அதையும் மீறி நடைபெற்ற உண்ணாவிரதத்தை நள்ளிரவில் தடியடி நடத்தியும், பெண்களைப் பலவந்தமாக தூக்கிவீசியும், அப்புறப்படுத்தியிருப்பது தில்லி போலீஸ் வரலாற்றில் மிகப்பெரும் களங்கமாகவே நீடிக்கும்.
இந்தச் செயலை மத்திய அரசு நியாயப்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் "அவர் அளித்த வாக்குறுதிப்படி நடந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது' என்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. "இந்த நடவடிக்கையை 100 விழுக்காடு தெரிந்தே செய்தோம்' என்கிறார் மத்திய அமைச்சர் கபில் சிபல். "மாலை 5 மணி வரை மட்டும்தான் அவரது உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அத்துடன் முடித்துக்கொள்ளாமல் நீடித்தார், ஆகவே சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்கிறது அரசு. இவர்கள் தரும் விளக்கம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அதுபற்றி ஏன் அவர்கள் முன்பே குறிப்பிட்டு அறிக்கை வெளியிடவில்லை?
அங்கே கூடியிருந்தவர்கள் யாரும் எந்தவிதமான கலவரத்துக்கும் தயார் நிலையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஐம்பதாயிரம் பேர் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்தச் சம்பவத்தில், காவலர்கள் பாதிக்கப்பட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ஆனால், ராம்தேவ் ஆதரவாளர்கள் அடிபட்டும், ஆடைகள் கிழிந்தும், மயக்கமுற்றதுமான சம்பவங்கள் நிறைய.
காவி உடுத்திய துறவி, அதைவிடுத்து பெண்ணுக்கான வெண்ணிற சல்வார் கம்மீஸ் அணிவித்துத் தப்பிச்செல்ல வைக்கப்படுகிறார் என்றால், அங்கே நிலவிய சூழல் எத்தகையது என்பதையும், "காவல்துறையினர் துப்பட்டாவால் என் கழுத்தை நெரித்து கொல்லப் பார்த்தனர்' என்று ராம்தேவ் கூறுகிறார் என்றால், காவல்துறையின் அத்துமீறல் அளவுகடந்திருந்தது என்பதையும் கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியா முழுவதிலும் பேசப்பட்ட, ஆளாளுக்கு ஆதாரங்களுடனும், ஆதாரம் இல்லாமலும் பேசிவருகிற விவகாரம் - 2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும், அவர் தார்மிக அடிப்படையில் பதவி விலகவேண்டும், அல்லது ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங், மாறனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான். இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும் அமைச்சரவைக் கூட்டத்தில் மாறன் பங்குகொள்கிறார். மன்மோகன் இந்த விவகாரத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.
ஒரு மிகப்பெரிய முறைகேடைப் பற்றி, அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றி கவலைப்படாத மத்திய அரசு, பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுவது ஏன்?
இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம், படித்த மேல்தட்டு வர்க்கமும் ஊடகங்களும் இந்தத் தாக்குதல் குறித்தும், இது தொடர்பாக ராம்தேவ் எடுக்கப்போகும் நடவடிக்கை, அரசின் எதிர்நடவடிக்கை என்று பரபரப்பாக இந்தியா முழுவதும் பேசப்படும் விவகாரமாக்கிவிட்டது மத்திய அரசு. ஒரு தர்மசங்கடத்தை மறைக்க, சமாளிக்க, வேண்டுமென்றே இன்னொரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கி திசைதிருப்பும் கந்தலாகிப்போன ராஜதந்திரத்தை கையில் எடுத்துள்ளது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
பாபா ராம்தேவுக்கு நாம் வக்காலத்து வாங்கவில்லை. பாபா ராம்தேவுக்குக் கறுப்புப் பணம் மீதும், ஊழலைப் பற்றியும் ஏற்பட்டிருக்கும் திடீர் அக்கறை போலித்தனமானது என்கிற நமது கருத்தை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். ஊருக்கு ஊர், ஆளுக்கு ஆள் ஊழலுக்கு எதிராகத் தனித்தனியாகப் போர்க்கொடி தூக்கும்போது, ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முனைப்பு மழுங்கிவிடும் என்கிற நமது கருத்தையும் முன்பே ஒரு தலையங்கத்தில் பதிவு செய்திருந்தோம்.
அதற்காக, பாபா ராம்தேவை உண்ணாவிரதம் நடத்த அனுமதித்துவிட்டு யாரும் எதிர்பார்க்காத நள்ளிரவு நேரத்தில், உண்மையிலேயே ஊழலைப் பற்றியும் கறுப்புப் பணம் பற்றியும் அக்கறையுடன் இந்த உண்ணாவிரதம் பயனளிக்காதா என்கிற எதிர்பார்ப்புடன் கூடியிருந்த அப்பாவிகள் மீது நடத்தியிருக்கும் தாக்குதலை எப்படி ஏற்றுக்கொள்வது? பாபா ராம்தேவைச் சமாதானப்படுத்த விமான நிலையத்துக்கு அமைச்சர்கள் போயிருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக அவரைக் கைது செய்து திருப்பியனுப்ப காவல்துறையல்லவா அனுப்பப்பட்டிருக்க வேண்டும்?
நடந்தேறியிருப்பது அரசு வன்முறை! வெளிச்சம் போடப்பட்டிருப்பது அரசின் கையாலாகாத்தனம்!!  

Source : Dinamani