சாமி :நீதி நிமிர்ந்தது

இந்தியக் குடியரசு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பின்னடைவு, நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல் இருப்பதுதான். கண்கொத்திப் பாம்புகளாக இருந்து ஆட்சியில் இருக்கும் தவறுகளை அவர்கள் துணிவுடன் சுட்டிக் காட்டவும் தட்டிக் கேட்கவும் தலைப்பட்டாலே, இந்தியாவில் நல்லாட்சி நிலைபெற்றுவிடும். அவர்கள் தங்களது கடமையைச் சரிவர நிறைவேற்றாத நிலையில் நீதிமன்றங்களாவது தலையிட்டு நிலைமை வரம்பு மீறிவிடாமல் பாதுகாக்கின்றனவே என்பது சற்று ஆறுதல்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வியும், ஏ.கே. கங்குலியும் சுப்பிரமணியன் சுவாமியின் தனிநபர் வழக்கில் வழங்கி இருக்கும் தீர்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மிகப்பெரிய பலத்தை வழங்கி இருக்கிறது. இரண்டு நீதிபதிகளுமே ஒத்த கருத்தினராக வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி இனிமேல் தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள் - அதிகாரிகளோ, அமைச்சர்களோ யார் எந்த அரசுப் பதவி வகித்தாலும் - மீதான வழக்குகளில் அனுமதி வழங்குவதற்குக் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் 19வது பிரிவின்படி அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் - அமைச்சரோ, அதிகாரியோ, வாரியத் தலைவர்களோ யாராக இருந்தாலும் - மீதான குற்றச்சாட்டை அரசின் அனுமதி பெறாமல் விசாரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல, குற்றவியல் நடைமுறை விதிகளின் 197வது பிரிவின்படி முன்அனுமதி பெறாமல் ஒரு அரசுப் பணியாளரைத் தண்டிக்கவும் முடியாது.
அரசுப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மீது வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் நேர்மையாகப் பணியாற்றுவது தடுக்கப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்டவைதான் இந்த இரண்டு சட்டப் பிரிவுகளும். ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறைகளைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சட்டத்தின் கரங்கள் தங்களைத் தீண்டிவிடாமல் அரசுப் பணியாளர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகளும், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களும் குற்றங்களை இழைத்துவிட்டுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.
தனிநபரான சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையான அன்றைய மத்தியத் தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதியை அங்கீகரித்திருப்பதன் மூலம், இந்தியக் குடியரசின் எந்தவொரு குடிமகனும் ஊழலிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடும் அரசுப் பணியாளர் மீது வழக்குத் தொடுப்பதில் இருக்கும் மிகப்பெரிய தடையை உச்ச நீதிமன்றம் உடைத்தெறிந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, ஊழல்வாதியான அரசு ஊழியருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு விண்ணப்பித்த நான்கு மாதங்களுக்குள், பதிலளிக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்பட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்திவிட்டது.
மூன்று மாதத்திற்குள் வழக்குத் தொடர்வதற்கான அனுமதிக் கோரிக்கைக்கு பதிலளித்தாக வேண்டும். தேவைப்பட்டால், தலைமை அரசு வழக்குரைஞரின் பரிந்துரைக்காகக் கூடுதலாக ஒரு மாத அவகாசம் கோரலாம். அதற்கு மேல் பதிலளிப்பதில் தாமதம் இருக்கக் கூடாது என்பது இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டுப் பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி நவம்பர் 2008ல் கடிதம் எழுதினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்து வருவதால் இப்போது அனுமதி வழங்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் பதிலளித்து விட்டது. தொடர்ந்து நீதிமன்றப் படியேறி இப்போது ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்தியக் குடிமகனுக்குப் பெற்றுத் தந்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமியைப் பாராட்ட வேண்டும்.
""சுவாமியின் கோரிக்கைக்கு உடனடியாக அனுமதி அளித்திருந்தால் வழக்குத் தொடர்வதில் காலவிரயம் தடுக்கப்பட்டிருக்கும்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தெரிவித்திருக்கிறார். ""இதுபோன்ற காலதாமதங்கள் வழக்கின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கின்றன என்பது ஒருபுறம். இன்னொரு புறம், தங்களுக்குச் செய்திருக்கின்ற அல்லது செய்யப் போகின்ற உதவிகளுக்காகத்தான் அனுமதி வழங்கத் தேவையில்லாத காலதாமதத்தை ஏற்படுத்துகிறார்களோ என்கிற எண்ணம் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரும் உயர் பதவி வகிப்பவர்களும் (ஆட்சியாளர்களும்) குற்றத்தில் கூட்டாளிகளோ என்கிற சந்தேகத்துக்குக் காலதாமதம் இடமளிக்கிறது'' என்று தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார் ஏ.கே. கங்குலி.
ஒரு அரசுப் பணியாளர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்குத் தொடுப்பதற்கு அனுமதி கோரப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டில் வலு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுமே அனுமதி அளிப்பதற்குத் தேவையான காரணமாக இருக்க முடியுமே தவிர, குற்றச்சாட்டின் மீது தீவிரப் புலன்விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்குவது அரசின் வேலை அல்ல. அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள் மேலதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் போன்றவர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. எந்தவொரு குற்றச்சாட்டு எழுந்தாலும் அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்யப்பட்டு குற்றச்சாட்டின் தீவிரம் குறைக்கப்படுகிறது அல்லது குற்றச்சாட்டே மறக்கப்பட்டு விடுகிறது. இனிமேல் அதற்கான வாய்ப்பை இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அடைத்துவிட்டது.
சுப்பிரமணியன் சுவாமி மீது பல விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால், ஒரு தனி மனிதரின் முயற்சியால்தான் பல ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல, பதவி ஓய்வுபெறும் நாளில் இந்தியக் குடியரசுக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி இருக்கும் நீதிபதி அசோக்குமார் கங்குலியையும் நாம் நன்றி கூறிப் பாராட்ட வேண்டும்.

Thanks :

தேசியத் தலைகுனிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடிப் பெண்கள் சிலர், சுற்றுலாப் பயணிகள் கொடுத்த உணவுக்காக நடனம் ஆடிய விடியோ காட்சி, "தி கார்டியன்' பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியிருப்பதும், இந்தக் காட்சியை இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பியிருப்பதும் இப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஒளிபரப்புக்காக அந்த டிவி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் யார்? இந்த விடியோவைப் பதிவு செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தச் சம்பவத்துக்கு அடிப்படையான குற்றவாளி இந்திய அரசாங்கம்தானே? அதை முதலில் உணரட்டும்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கியபோது அந்தத் தீவில் இருந்த பழங்குடிகள் பல விதங்களில் அழிக்கப்பட்டனர். இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங்களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன. ஆனால், அத்தகைய பதிவுகள் அந்தமான் நிகோபார் தீவுகளைப் பொருத்தவரை இல்லை. ஆனால், பழங்குடிகளை ஆங்கிலேயர்கள் அழித்தொழித்தது மட்டும் நிச்சயம்.
அவர்கள் அழித்ததுபோக, மனிதர்கள் நுழைய முடியாத அந்தமானின் அடர்காடுகளில் இன்னமும் பழங்குடியினர் இருக்கின்றனர் என்பது இந்திய விடுதலைக்குப் பின்னர் தெரிந்தும்கூட, அவர்களது மேம்பாட்டுக்காக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் 2012-ம் ஆண்டிலும்கூட இந்த பழங்குடிப் பெண்கள் இன்னமும் அரை நிர்வாணமாக, மேலாடை அணியாமல் வாழும் நிலைமை.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு உணவுப் பொட்டலங்கள், சுவையான பிஸ்கட்டுகள் கொடுத்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதும் அவர்கள் சொன்னபடி ஆடுவதும் ஜாரவா பூர்வக் குடிகளைப் பொறுத்தவரை தவறான செயலோ அல்லது வெட்கப்படும் விஷயமோ அல்ல. அவர்களை அப்படிப்பட்ட இருட்டறையிலேயே வைத்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் வெட்ககரமானது.
1990-ம் ஆண்டுகளில்தான் அவர்கள் நாகரிக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களது இருப்பிடங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகளை இந்திய அரசு கடந்த 20 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டாமா? ஜாரவா பழங்குடி மக்களை அணுகி, அவர்கள் ஆடை உடுத்தவும் வெளியுலகுடன் தொடர்புகொள்ளவும், படிப்பறிவு பெறவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யானை, புலிகளைக் காட்டுவதற்கான வனச் சவாரி போல, இன்னமும் புத்தி கெட்டுப்போகாமல் இருக்கும் மானுடசாதியைக் காட்டும் வனச்சவாரிக்கு காட்சிப்பொருளாக இருக்கட்டுமே என்று ஒரு பழங்குடி ஆதிகோலத்திலேயே இன்றும் நீடித்திருக்க அரசு விரும்பும் என்றால், அது முறைதானா?
பழங்குடியினர் வாழ்வைப் பொறுத்தவரை, வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்கிற இரண்டு விதமான நடவடிக்கைகள்தான் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, கனிமங்களை வெட்டியெடுப்பதற்காகப் பல மாநிலங்களில் பழங்குடியினரை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றுவது நடக்கின்றது. அல்லது, அந்தப் பழங்குடியினரை அதே இடத்தில் அப்படியே, அதே அரை நிர்வாணக் கோலத்தில் சுற்றுலாப் பயணிகளின் காட்சிப்பொருளாக வாழச் செய்கின்றது. இரண்டுமே தவறு.
அந்தமான் நிகோபார் தீவுகளின் காவல்துறை இயக்குநர் பேட்டி அளிக்கையில், ""இந்தப் படக்காட்சி நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்குமேயொழிய தற்போது எடுக்கப்பட்டதாக இருக்க முடியாது'' என்கிறார். இன்னொரு அதிகாரி பேசுகையில், ""அந்தமான் நெடுஞ்சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இதில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தின்போது எதிர்ப்படும் ஆதிவாசிகளைக் கண்டு அவர்களுடன் பேசுதல், படம் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதைச் சொல்லியே சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஏஜன்டுகளும் இருக்கிறார்கள். இதைத் தவிர்க்க, பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் நுழையாமல் கடல்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்து யோசித்து வருகிறோம்'' என்கிறார்.
என்ன அக்கிரமம்? அந்தப் பழங்குடிகள் ஏன் வெளிநாட்டவருடன் பேசக்கூடாது, பழகக்கூடாது? நல்ல ஆடை உடுத்தும் பழக்கத்தை பழங்குடிகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுத்தினால் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயராதா? அவர்களும் வெளியுலக மனிதர்களைப்போல உடுத்தி, படித்து முன்னேற மாட்டார்களா? ஏன் அவர்களை அப்படியே அரை நிர்வாணத்துடன் வாழ விட வேண்டும். புலிகள் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கி புலிகளைக் காப்பதுபோல, அந்தமான் அடர்வனப் பகுதியில் பழங்குடி மனிதர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு. அவர்களென்ன புலிகள்போல அருகி வரும் மனித இனமா?
அந்தப் பழங்குடிகளை அவர்களுக்குப் பழக்கமான காட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொருளல்ல. அவர்களை அதே இடத்தில் வாழவிடுங்கள். ஆனால், அவர்களுக்கு வாழ்க்கையின் முன்னேற்றங்களைக் காட்டுங்கள்.
நர மாமிசம் சாப்பிட்டு உயிர்வாழும் ஆதிவாசிகள் இன்றில்லை. ஆனால், ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கி உயிர்வாழும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது


Thanks and Source :  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=537512&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்: தேசியத் தலைகுனிவு!