தேசியத் தலைகுனிவு

அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடிப் பெண்கள் சிலர், சுற்றுலாப் பயணிகள் கொடுத்த உணவுக்காக நடனம் ஆடிய விடியோ காட்சி, "தி கார்டியன்' பத்திரிகையின் இணையதளத்தில் வெளியாகியிருப்பதும், இந்தக் காட்சியை இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பியிருப்பதும் இப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

இந்த ஒளிபரப்புக்காக அந்த டிவி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு இந்திய அரசின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் யார்? இந்த விடியோவைப் பதிவு செய்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தச் சம்பவத்துக்கு அடிப்படையான குற்றவாளி இந்திய அரசாங்கம்தானே? அதை முதலில் உணரட்டும்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கியபோது அந்தத் தீவில் இருந்த பழங்குடிகள் பல விதங்களில் அழிக்கப்பட்டனர். இன்றைய உதகையை நிர்மாணிக்க, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சலைவன் (ஏதோ புலி, சிங்கங்களை வேட்டையாடியதைப்போல) எத்தனை பழங்குடி மக்களைக் கொன்றார் என்ற விவரங்கள் பதிவுகளாக உள்ளன. ஆனால், அத்தகைய பதிவுகள் அந்தமான் நிகோபார் தீவுகளைப் பொருத்தவரை இல்லை. ஆனால், பழங்குடிகளை ஆங்கிலேயர்கள் அழித்தொழித்தது மட்டும் நிச்சயம்.
அவர்கள் அழித்ததுபோக, மனிதர்கள் நுழைய முடியாத அந்தமானின் அடர்காடுகளில் இன்னமும் பழங்குடியினர் இருக்கின்றனர் என்பது இந்திய விடுதலைக்குப் பின்னர் தெரிந்தும்கூட, அவர்களது மேம்பாட்டுக்காக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் 2012-ம் ஆண்டிலும்கூட இந்த பழங்குடிப் பெண்கள் இன்னமும் அரை நிர்வாணமாக, மேலாடை அணியாமல் வாழும் நிலைமை.
சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு உணவுப் பொட்டலங்கள், சுவையான பிஸ்கட்டுகள் கொடுத்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதும் அவர்கள் சொன்னபடி ஆடுவதும் ஜாரவா பூர்வக் குடிகளைப் பொறுத்தவரை தவறான செயலோ அல்லது வெட்கப்படும் விஷயமோ அல்ல. அவர்களை அப்படிப்பட்ட இருட்டறையிலேயே வைத்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் வெட்ககரமானது.
1990-ம் ஆண்டுகளில்தான் அவர்கள் நாகரிக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது, அவர்களது இருப்பிடங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகளை இந்திய அரசு கடந்த 20 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டாமா? ஜாரவா பழங்குடி மக்களை அணுகி, அவர்கள் ஆடை உடுத்தவும் வெளியுலகுடன் தொடர்புகொள்ளவும், படிப்பறிவு பெறவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யானை, புலிகளைக் காட்டுவதற்கான வனச் சவாரி போல, இன்னமும் புத்தி கெட்டுப்போகாமல் இருக்கும் மானுடசாதியைக் காட்டும் வனச்சவாரிக்கு காட்சிப்பொருளாக இருக்கட்டுமே என்று ஒரு பழங்குடி ஆதிகோலத்திலேயே இன்றும் நீடித்திருக்க அரசு விரும்பும் என்றால், அது முறைதானா?
பழங்குடியினர் வாழ்வைப் பொறுத்தவரை, வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்கிற இரண்டு விதமான நடவடிக்கைகள்தான் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று, கனிமங்களை வெட்டியெடுப்பதற்காகப் பல மாநிலங்களில் பழங்குடியினரை அவர்களது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றுவது நடக்கின்றது. அல்லது, அந்தப் பழங்குடியினரை அதே இடத்தில் அப்படியே, அதே அரை நிர்வாணக் கோலத்தில் சுற்றுலாப் பயணிகளின் காட்சிப்பொருளாக வாழச் செய்கின்றது. இரண்டுமே தவறு.
அந்தமான் நிகோபார் தீவுகளின் காவல்துறை இயக்குநர் பேட்டி அளிக்கையில், ""இந்தப் படக்காட்சி நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்குமேயொழிய தற்போது எடுக்கப்பட்டதாக இருக்க முடியாது'' என்கிறார். இன்னொரு அதிகாரி பேசுகையில், ""அந்தமான் நெடுஞ்சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாகச் செல்கிறது. இதில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தின்போது எதிர்ப்படும் ஆதிவாசிகளைக் கண்டு அவர்களுடன் பேசுதல், படம் எடுத்துக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதைச் சொல்லியே சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஏஜன்டுகளும் இருக்கிறார்கள். இதைத் தவிர்க்க, பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் நுழையாமல் கடல்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்து யோசித்து வருகிறோம்'' என்கிறார்.
என்ன அக்கிரமம்? அந்தப் பழங்குடிகள் ஏன் வெளிநாட்டவருடன் பேசக்கூடாது, பழகக்கூடாது? நல்ல ஆடை உடுத்தும் பழக்கத்தை பழங்குடிகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுத்தினால் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயராதா? அவர்களும் வெளியுலக மனிதர்களைப்போல உடுத்தி, படித்து முன்னேற மாட்டார்களா? ஏன் அவர்களை அப்படியே அரை நிர்வாணத்துடன் வாழ விட வேண்டும். புலிகள் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கி புலிகளைக் காப்பதுபோல, அந்தமான் அடர்வனப் பகுதியில் பழங்குடி மனிதர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு. அவர்களென்ன புலிகள்போல அருகி வரும் மனித இனமா?
அந்தப் பழங்குடிகளை அவர்களுக்குப் பழக்கமான காட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பொருளல்ல. அவர்களை அதே இடத்தில் வாழவிடுங்கள். ஆனால், அவர்களுக்கு வாழ்க்கையின் முன்னேற்றங்களைக் காட்டுங்கள்.
நர மாமிசம் சாப்பிட்டு உயிர்வாழும் ஆதிவாசிகள் இன்றில்லை. ஆனால், ஆதிவாசிகளைக் காட்சிப் பொருளாக்கி உயிர்வாழும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது


Thanks and Source :  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial&artid=537512&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=தலையங்கம்: தேசியத் தலைகுனிவு!

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.




அனைவருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்





போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் - it works

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம் செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார்.


சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார். தினமும் ஜெயின் காலேஜிலிருந்து கிளம்பி, டைடல்பார்க்கில் இறங்கி ரயிலைப் பிடிப்பாராம். கேளம்பாக்கத்திலிருந்து வரும்19பி, 21 H, மற்றும் பெரும்பாலான பஸ்கள் முன்பெல்லாம் டைடல் பார்க்கில் நிற்காதாம். அதனால் அவர் T51ல் பயணிப்பாராம். சமீப காலமாய் 19பியும் டைடல் பார்க்கில் நிற்க ஆரம்பித்ததாம்.

இரண்டொரு நாள் முன்பு 19பி பஸ்ஸை பிடித்து டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அங்கெல்லாம் நிற்காது என்றும், வரும் சிக்னலிலோ, அல்லது டைடல் பார்க்குக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அதற்கு ரஞசனி தான் தினமும் இந்த வண்டியில் பயணிப்பதாகவும், தினமும் டைடல் பார்க்கில் நிற்கும் வண்டி இன்று மட்டும் ஏன் நிற்காது என்று வாதாடியிருக்கிறார். கண்டக்டரும் விடாமல் நிறுத்த முடியாது என்று வாதிட, ரஞ்சனிக்கு அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் நினைவுக்கு வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள் பார்த்த அந்த நம்பரை தன் செல்லில் சேமித்து வைத்திருக்க, உடன் அந்த எண்ணுக்கு தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசியவர் போனை கண்டக்டரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அதெல்லாம் பேச முடியாது என்று சொல்ல, எதிர்முனை ஆள் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், வண்டி தற்போது பயணிக்கும் இடத்தையும் கேட்டிருக்கிறார். அப்போது பஸ் கந்தன்சாவடியில் பயணித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார். எதிர்முனை நபர் தான் இன்னும் சிறிது நேரத்தில் லைனில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் வண்டியில் இருக்கும் ஜி.பி.எஸ் சிஸ்டத்திலிருந்து அந்த நபர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லையாம். அவருக்கு இது முதல் முறை அனுபவமாய் இருக்கும் போலிருக்கிறது. ஏன் வண்டியை டைடல் பார்க்கில் நிறுத்துவதில்லை என்றதும், அவர் இல்லையே சென்ற ட்ரிப்பில்கூட டைடல் பார்க்கில் நின்றுதானே வந்தோம். என்றதும், அப்படியானல் கண்டக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று கேட்டார். கண்டக்டரிடம் பேச்சே இல்லை. பேஸ்த் அடித்து போயிருந்தார். உடனே டிரைவர் கண்டக்டருக்கு சப்போர்ட்டாய், அவர் ரூட்டிற்கு புதுசு என்றும், அதனால் வந்த குழப்பம் தான் என்றும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு புகார் கொடுத்த ரஞ்சனியை அழைத்து அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் ரஞ்சனியையே பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் அந்த புகார் எண்ணையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயமென்றால் எல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கும் என்ற ஒரு பொது புத்தி எல்லாருக்கும் உறுதியாகிக் கொண்டிருக்கும் வேளையில், அரசு இயந்திரம் சிறப்பாகவும் செயல்படுறது என்பதை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அது மட்டுமில்லாமல் தானாக கிடைக்காவிட்டால் கேட்டால் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் உணர முடியும்.. ஸோ.. கேட்டால் கிடைக்கும்

சென்னை போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் 9884301013,9445030516,9383337639


Thanks : CableSankar