பொங்கல் நல் வாழ்த்துக்கள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.




அனைவருக்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்





போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் - it works

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம் செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார்.


சமீபத்தில் ரஞ்சனி பிரசன்னா என்கிற கல்லூரி மாணவி, நம் கேட்டால் கிடைக்கும் குழு உறுப்பினர். அவர் துரைப்பாக்கத்தில் வேலை செய்கிறார். தினமும் ஜெயின் காலேஜிலிருந்து கிளம்பி, டைடல்பார்க்கில் இறங்கி ரயிலைப் பிடிப்பாராம். கேளம்பாக்கத்திலிருந்து வரும்19பி, 21 H, மற்றும் பெரும்பாலான பஸ்கள் முன்பெல்லாம் டைடல் பார்க்கில் நிற்காதாம். அதனால் அவர் T51ல் பயணிப்பாராம். சமீப காலமாய் 19பியும் டைடல் பார்க்கில் நிற்க ஆரம்பித்ததாம்.

இரண்டொரு நாள் முன்பு 19பி பஸ்ஸை பிடித்து டைடல் பார்க்குக்கு டிக்கெட் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அங்கெல்லாம் நிற்காது என்றும், வரும் சிக்னலிலோ, அல்லது டைடல் பார்க்குக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கிக் கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார். அதற்கு ரஞசனி தான் தினமும் இந்த வண்டியில் பயணிப்பதாகவும், தினமும் டைடல் பார்க்கில் நிற்கும் வண்டி இன்று மட்டும் ஏன் நிற்காது என்று வாதாடியிருக்கிறார். கண்டக்டரும் விடாமல் நிறுத்த முடியாது என்று வாதிட, ரஞ்சனிக்கு அரசு போக்குவரத்து பற்றி புகார் செய்யும் நம்பர் நினைவுக்கு வந்திருக்கிறது. என்றோ ஒரு நாள் பார்த்த அந்த நம்பரை தன் செல்லில் சேமித்து வைத்திருக்க, உடன் அந்த எண்ணுக்கு தொலைபேசியில் கூப்பிட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசியவர் போனை கண்டக்டரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரோ அதெல்லாம் பேச முடியாது என்று சொல்ல, எதிர்முனை ஆள் வண்டியின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரையும், வண்டி தற்போது பயணிக்கும் இடத்தையும் கேட்டிருக்கிறார். அப்போது பஸ் கந்தன்சாவடியில் பயணித்துக் கொண்டிருப்பதை சொல்லியிருக்கிறார். எதிர்முனை நபர் தான் இன்னும் சிறிது நேரத்தில் லைனில் வருவதாய் சொல்லி இணைப்பை துண்டித்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் வண்டியில் இருக்கும் ஜி.பி.எஸ் சிஸ்டத்திலிருந்து அந்த நபர் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். டிரைவருக்கு எதுவும் புரியவில்லையாம். அவருக்கு இது முதல் முறை அனுபவமாய் இருக்கும் போலிருக்கிறது. ஏன் வண்டியை டைடல் பார்க்கில் நிறுத்துவதில்லை என்றதும், அவர் இல்லையே சென்ற ட்ரிப்பில்கூட டைடல் பார்க்கில் நின்றுதானே வந்தோம். என்றதும், அப்படியானல் கண்டக்டர் ஏன் அப்படி சொன்னார் என்று கேட்டார். கண்டக்டரிடம் பேச்சே இல்லை. பேஸ்த் அடித்து போயிருந்தார். உடனே டிரைவர் கண்டக்டருக்கு சப்போர்ட்டாய், அவர் ரூட்டிற்கு புதுசு என்றும், அதனால் வந்த குழப்பம் தான் என்றும் சொல்லி மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின்பு புகார் கொடுத்த ரஞ்சனியை அழைத்து அவரும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் ரஞ்சனியையே பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் அந்த புகார் எண்ணையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு சம்பந்தப்பட்ட விஷயமென்றால் எல்லாம் தாறுமாறாகத்தான் இருக்கும் என்ற ஒரு பொது புத்தி எல்லாருக்கும் உறுதியாகிக் கொண்டிருக்கும் வேளையில், அரசு இயந்திரம் சிறப்பாகவும் செயல்படுறது என்பதை சொல்ல வேண்டியது நம் கடமையாகிறது. அது மட்டுமில்லாமல் தானாக கிடைக்காவிட்டால் கேட்டால் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் உணர முடியும்.. ஸோ.. கேட்டால் கிடைக்கும்

சென்னை போக்குவரத்துக் கழகத்தின் புகார் எண்கள் 9884301013,9445030516,9383337639


Thanks : CableSankar

காலை எழுந்தவுடன் தானம்... பசி போக்கும் பாண்டி மனிதர்!

-நா.இள.அறவாழி



''அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.’ - அதாவது பிறரால் பழிக்கப்படாத இல்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை ஆகும். வள்ளுவர் சொல்லும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் என் லட்சியம்'' என்று, குறள்மொழியையே குரல்மொழி யாகப் பகிர்கிறார் எஸ்.ராஜேந்திரன்.



யார் இந்த ராஜேந்திரன்?


''சார், புதுவை அரசு மருத்துவமனைக்குப் பக்கத்துல பல வருஷங்களாத் தினமும் காலையில ஒருத்தர் வந்து அங்கு இருக்கும் ஏழைகளுக்கு இலவசமா உணவுகொடுக்கிறார்'' என்று விகடன் வாசகர் கல்யாணசுந்தரம் நம் வாசகர் வாய்ஸில் பதிவுசெய்து இருந்தார். புதுவை - அரசு மருத்துவமனைக்குச் சென்றால் ஒரு கூட்டமே சுற்றிச் சூழ, எல்லோருக்கும் உணவுப்பொட்டலங்களை விநியோகித்துக் கொண்டு இருந்தார் ராஜேந்திரன்.


'இதை என்னோட ஆத்ம திருப்திக்காகத்தான் பண்றேன். அதனால்தான் இதை விளம்பரப்படுத்த நான் விரும்பலை. இருந்தும் இதைப் படிச்சிட்டு பல பேர் ஏழைகளுக்கு உதவ முன் வரலாம். அதுக்காகத் தான் இதைப் பற்றிப் பேசறேன் தம்பி.


புதுவை- சிமென்ட் வொர்க்ஸ்ங்கிற கடைவெச்சு இருக்கேன். அதிகமா இல் லைனாலும் தேவைகளைப் பூர்த்தி செய் கிற அளவு வருமானம் வருது. எனக்குப் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் அதிகம். அதிலும் திருக்குறள் மீது எனக்கு அளவு கடந்த ஆர்வம். திருக்குறள் படிச்சுட்டுதான் இந்தத் தானத்தின் மீது ஈடுபாடு வந்தது.



கடந்த 19 வருஷமா ஏழைகளுக்குக் உணவு கொடுத்துட்டு வர்றேன். ஆரம்பத் தில் காலையில் வீட்டில் இருந்து 7.30 மணிக்குக் கிளம்புவேன், புதுச்சேரியோட முக்கிய வீதிகளில் சுற்றி வந்து யாராவது ஏழைகள் இருக்காங்களானு பார்த்து அங் கேயே இட்லி வாங்கிக்கொடுத்து, அவங்க பசியைப் போக்கறது வழக்கம். முதலில் 10 ஏழைகளுக்கு உணவு கொடுத்துட்டு இருந்தேன். இப்போ அந்த எண்ணிக்கை நூறா மாறிடுச்சு. தினமும் காலையில் 70 இட்லி பொட்டலங்களுடன் கிளம்பிடுவேன். சில நேரங்களில் வைத்திருக்கும் பொட்டலங்களுக்கு மேல் நிறையப் பேர் வந்துடுவாங்க. பொட்டலங்கள் தீர்ந்துப்போச்சுன்னா மத்தவங்களுக்குக் கடையில் இட்லி வாங்கித் தருவேன். புதுச்சேரியோட முக்கிய இடங்களான பீச் ரோடு, பாரதி வீதி, மகாத்மா காந்தி சாலைனு ஒரு ரவுண்ட் அடிச்சுக் கடைசியா இந்த அரசு மருத்துவமனைக்கு வந்துடுவேன்.


தினசரி இல்லைனாலும் மதிய ஓய்வு நேரம் கிடைக்கும்போது வில்லியனூரில் இருக்கும் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குப் போய் அங்கே இருக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனா ளிகளுக்கு மதியச் சாப்பாடு வாங்கிக் கொடுப் பேன். என்கிட்ட பசினு வந்தவங்க எல்லாருக்கும் பசியைப் போக்கி அனுப்பிஇருக்கேன்.


இந்த உலகில் வாழறவங்களை மூணு வகை யாப் பிரிக்குது திருக்குறள். மாக்கள், மக்கள், சான்றோர். மிருகங்களைப் போல வாழ்கிற மனிதர்களை மாக்கள்னும்; சராசரி வாழ்க்கை வாழறவங்களை மக்கள்னும்; லட்சியத்தோடுவாழ் பவர்களைச் சான்றோர்கள்னும் பிரிக்கிறாங்க. நான் லட்சியவாதி, நம்மால் ஒருத்தன் பசியைக் கூட போக்க முடியலைன்னா வாழுற வாழ்க் கைக்கு அர்த்தமே இல்லை. ஒரு மனிதனைக் கொல்லக் கூடிய, கொலை செய்யத் தூண்டக் கூடிய பசியைக் கொல்றதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம்'' என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இன்னும் சிலர் அவரைச் சூழ, சட்டைப்பையைத் தடவியபடியே நகர்கிறார் ராஜேந்திரன்!


 
Source : Vikatan